Wednesday, January 8, 2025

தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்

 தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்


அப்பர் அருளிச் செய்த திருவாதிரைப் பதிகம். 


பெற்றோர்கள் குழந்தையை கொஞ்சும் போது, "என்னைப் பெத்த இராசா, செல்லக் கிளி, பப்புலு, ஜில்லுக் குட்டி, குட்டிக் கண்ணா.." என்றெல்லாம் கூறுவார்கள். அவர்களிடம் போய், "இராசாவா?, கண்ணனா?, கிளியா? ன்னு முடிவு பண்ணுங்க. ஒரே பிள்ளை எப்படி எல்லாமாக இருக்க முடியும். சும்மா உளறக் கூடாது" என்று சொல்ல முடியுமா?  


அன்பு மேலிட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். அதை அறிவுக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. 


காதலன், காதலியை கொஞ்சும் போது, "மானே, தேனே, மல்லிகையே, நிலவே,..."என்றெல்லாம் கொஞ்சுவான். ஒரே பெண் எப்படி மானாகவும், மயிலாகவும் இருக்க முடியும்?  


அதெல்லாம் கேட்க்கக் கூடாது. அன்பு, காதல் என்று வந்து விட்டால் கொஞ்சம் அறிவு விடை பெற்றுக் கொள்ளும். 


பக்தர்கள் பாடும் அப்படித்தான் என்கிறார் திருநாவுகரசு சுவாமிகள்.



இறைவன் முன் பக்தர்கள் இறைவனின் குண நலன்களைப் பாடி பரவசம் அடைகிறார்கள். ஆளாளுக்கு ஒரு குணத்தை சொல்கிறார்கள். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். 


வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஏதோ பித்து பிடித்து உளறுவதைப் போல் இருக்கும். பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிப்பது போல் இருக்கும்.  


என்ன செய்வது. பக்தி மேலிட்டால் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. 


பாடல் 


குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் .


பொருள் 


குணங்கள்பேசிக் = இறைவனின் குணங்களைப் பேசி 


கூடிப் = பக்தர்கள் ஒன்றாகக் கூடி 


பாடித் = பாட்டுப் பாடி 


தொண்டர்கள் = பக்தர்கள் 


பிணங்கித் = இறைவனை புகழ்வதில் ஒருவருக்கு ஒருவர் மாற்றிச் சொல்லி 


தம்மிற்  = தங்களுக்குள் 


பித்தரைப்போலப் பிதற்றுவார் = பித்தர்களைப் போல் பிதற்றுவார்கள் 


வணங்கி நின்று = வணங்கி நின்று 


வானவர்வந்து = தேவர்கள் வந்து 


வைகலும் = தினமும் 


அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் = அணங்கன் + ஆரூர் + ஆதிரை + நாள் + அது + வண்ணம் = அணங்கு என்றால் பெண். பெண்ணை பாதியாகக் கொண்டவன். திருவாரூர், திருவாதிரைத் நல்ல நாளில்.


தேவர்கள், திருவாரூர் வந்து தினமும் வணங்கிச் செல்வார்கள். 


உன் பக்தி சிறந்ததா, என் பக்தி சிறந்தாத என்பதல்ல போட்டி. அவரவருக்குத் தோன்றியதைச்  சொல்லி வணங்குகிறார்கள். 


தேவாரம் தெரியவில்லையா, பரவாயில்லை. 


திருவாசகம், பிரபந்தம் தெரியவில்லையா - ஒரு பிழையும் இல்லை. 


பக்தி மனதில் இருந்தால் போது. அந்த பக்தியில் என்ன தோன்றுகிறதோ, அதுதான் வழிபாடு. 


இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒரு நியதி இல்லை. 


சூடிக் கொடுத்தவள் = ஆண்டாள் 


சூடிக் கொடுத்தவன் = கண்ணப்பன் 





 


2 comments:

  1. ஐயா
    அடியேன் கேட்டதும் தாங்கள் எழுதியதிற்கு நன்றி. யாம் தினமும் தமிழ் படிப்பதற்கு தாங்கள் ஒரு காரணம். கொஞ்சம் படித்ததிலேயே “நான்” என்று கூற கூசுகிறது. பாஸ்டன் நகரில் ஒரு தமிழ்ப் பள்ளியும் நடப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கு உங்கள் எழுத்தும் காரணம்

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நான் என் ப்ளாக் குக்கு வரும் கமெண்ட்ஸ் களுக்கு பதில் சொல்லுவதும் இல்லை, அவற்றில் வரும் வேண்டுகோள்களுக்கு வினை ஆற்றுவதும் இல்லை. பொது வெளியில் பல பேரின் எண்ணம் பல விதமாக இருக்கும். மாறி மாறி பதில் சொல்லுவதால் மனத்தாங்கல் தான் வரும் என்று பேசாமல் இருந்து விடுவது. உங்கள் விருப்பத்துக்கு ஏனோ வினையாற்ற வேண்டும் என்று தோன்றியது. மேலும், ஒரு பள்ளி நடப்பதற்கு ஏதோ ஒரு விதத்தில் என் எழுத்து உதவுகிறது என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு. வாழ்த்துக்கள்.

      Delete