Thursday, December 26, 2024

திருவருட்பா - சோற்றினில் விருப்பம்

 திருவருட்பா - சோற்றினில் விருப்பம் 


சாப்பாட்டின் மேல் விருப்பம் உள்ள வரை, என்ன நல்லது செய்தாலும், அதனால் ஒரு பயனும் விளையாது.  


உணவு ஒரு அளவுக்கு உதவும். அதற்கு மேல் போனால், அது அறிவை அழிக்கும். நோயைக் கொண்டு வரும். அப்புறம் அந்த நோயை நீக்க மருந்து, மாத்திரை, என்று மருத்துவம் செய்வதில் காலம் கழியும். செய்ய வேண்டியவற்றை செய்ய முடியாது. 


உடற் பயிற்சி கூடத்துக்கு சென்று மூச்சு வாங்க வேலை செய்வார்கள். செய்துவிட்டு வரும் வழியில் ஒரு வடை, காப்பி கொஞ்சம் சர்க்கரை தூக்கலாய் என்று சாப்பிட்டால், செய்த உடற் பயிற்சிக்கு பலன் இருக்குமா? 


அதிகம் உண்டால், தூக்கம் வரும். சுறுசுறுப்பு போகும், மந்த புத்தி வந்து சேரும். செய்த வேலைகளின் பலன்களை அது அழிக்கும். 


எனவே, வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், உணவின் மேல் உள்ள பற்றை விட வேண்டும். 


இனிப்பு, காரம், எண்ணெய் பலகாரம், வெந்தது, பொரித்தது என்று உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது. 


பாடல் 


     சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்

          துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி

     ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்

          றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

     போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்

          பொருந்திய காரசா ரஞ்சேர்

     சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை

          தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.


பொருள் 


   சோற்றிலே = சோறு உண்பதில் 


விருப்பஞ் சூழ்ந்திடில் = எந்த நேரமும் விருப்போடு இருந்தால் 


ஒருவன் = ஒருவன் 

 

துன்னு = செய்த 


நல் தவம்எலாஞ் = நல்ல தவம் எல்லாம், நல்ல வினைகள் எல்லாம் 


சுருங்கி = சுருங்கி, தேய்ந்து, வீணாகி 


 ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம் = ஆற்றில் கரைத்த புளி போல் வீணாகி விடும் 


என்= என்று 


அறிஞர்கள் = அறிவுடைய சான்றோர்கள் 


உரைத்திடல் = சொன்னதை 


சிறிதும்  போற்றிலேன் = கொஞ்சம் கூட மதிக்காமல் 


உன்னைப் போற்றிலேன் = இறைவா, உன்னையும் போற்ற மாட்டேன் (ஏன்? ) 


சுவையில் பொருந்திய  = நல்ல சுவையான 


காரசா ரஞ் சேர் = காரசாரமான 


சாற்றிலே கலந்த = குழப்பு, இரசம், தயிர், என்று பல சாறுகளை சேர்த்து குழைத்த 


சோற்றிலே = சோற்றிலே 


ஆசை தங்கினேன் = நிரந்தரமாக ஆசை கொண்டு அங்கேயே தங்கிவிட்டேன் 


 என்செய்வேன் எந்தாய் = என் தந்தை போன்றவனே, நான் என்ன செய்வேன் 


முன்னேற வேண்டும் என்றால், அதிலும் குறிப்பாக ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும் என்றால், உணவின் மேல் உள்ள நாட்டம் குறைய வேண்டும். 


காய் கறிகளும், கிழங்குகளும், பழங்களும் பொதுவாக குறைந்த சுவை உடையன. அதை ஓரளவுக்கு மேல் உண்ண முடியாது. நாம் என்ன செய்கிறோம், அவற்றை வறுத்து, வேக வைத்து, உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, என்று சேர்த்து அவற்றின் சுவையை கூட்டுகிறோம். சுவை கூடினால், மேலும் மேலும் சாப்பிடத் தோன்றும். மேலும், கொஞ்சம் சுவையை மாற்றி மாற்றி சாப்பிடத் தோன்றும். 


சாப்பாட்டின் மேல் உள்ள பற்றை குறைக்க வழி சொல்கிறார் வள்ளல் பெருமான்.


சாப்பாட்டில் சுவை ஏற்றுவதை குறைக்க வேண்டும். 


ஒரு டீ போட்டால் கூட அதில் கொஞ்சம் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, சினமன், என்று போட்டு தேநீரின் சுவையை கூட்டி குடிக்கிறோம். 


மசாலா, எண்ணெய், நெய், என்று சுவை கூட்டிவதைக் குறைத்தாலே உணவின் மேல் உள்ள பற்று குறையும். எவ்வளவு சக்தி வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் சாப்பிடுவோம். ருசிக்காக சாப்பிடுவது குறையும். 


வெறும் வெந்த சோறு எவ்வளவு சாப்பிட முடியும். 


அதில் கொஞ்சம் வெல்லத்தை தட்டிப் போட்டு, நெய் விட்டு, பால் விட்டு, ஏலக்காய், பச்சை கற்பூரம் எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தால் எவ்வளவு சாப்பிட முடியும்?


முதலில் சாம்பார், அப்புறம் இரசம், அப்புறம் மோர் குழம்பு, அப்புறம் வத்தக் குழம்பு, அப்புறம் தயிர் என்று ஒரே சோற்றை எத்தனை விதமாக சுவை கூட்டி உண்கிறோம்?


புத்தி உணவின் மேல் போனால், அறிவு இறைவனை விட்டு விலகிப் போகும். 


அதனால்தான் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு விரதம், ஒரு பொழுது, சாத்வீக உணவு என்று சொல்லி வைத்தார்கள். 


உணவில் பற்று குறைந்தால், உடம்பு சுகப்படும், அறிவு கூர்மையாகும். முன்னேற்றம் வரும். 




1 comment:

  1. Well narrated . Definitely must follow. நன்றி

    ReplyDelete