திருக்குறள் - வெகுளாமை - தீது
நமக்கு கீழே உள்ளவர்களிடம் நாம் நம் கோபத்தை எளிதாக காட்ட முடியும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திட்டலாம், அவமானப் படுத்தலாம், அவர்கள் தன்னம்பிக்கை குறையும்படி பேசலாம், அவர்களை பலர் முன்னிலையில் தலை குனியும்படி செய்யலாம்...
ஆனால், அது எல்லாம் நமக்கே தீதாய் முடியும் என்கிறார் வள்ளுவர்.
நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் நம் கோபத்தைக் காட்டினால், அவர்கள் பதிலுக்கு நமக்குத் தீங்கு செய்ய முடியும். எனவே அது நிச்சயமாக நமக்கு ஒரு தீமையில்தான் போய் முடியும்.
நமக்கு கீழே உள்ளவர்களிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்கு என்ன தீங்கு விளையும்? அவர்கள் நம்மை என்ன செய்து விட முடியும்?
வள்ளுவர் சொல்கிறார், அப்படிப்பட்ட கோபம் இந்தப் பிறவியில் பழியையும், மறு பிறவியில் பாவத்தையும் கொண்டு வருவதால், அது முந்தைய கோபத்தை விட தீமை செய்வது என்கிறார்.
வலிமையானவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவன் பதிலுக்கு நம்மை தாக்க முடியும், திட்ட முடியும். அதன் பலன் அங்கேயே தீர்ந்து விடும். ஆனால் மெலியார் மேல் காட்டும் கோபம் இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் தொடரும் என்பதால், அது மிகவும் தீதானது என்கிறார்.
பாடல்
செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல்லதனின் தீய பிற.
பொருள்
செல்லா இடத்துச் சினம்தீது = நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டினால் அது நமக்கு தீமையாய் முடியும்.
செல்இடத்தும் = கோபம் செல்லும் இடத்திலும்
இல்லதனின் தீய பிற = அதை விட பெரிய தீமை இல்லை என்கிறார்.
பரிமேலழகர் சொல்லாத ஒன்றை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.
நம்மை விட கீழே உள்ளவன் என்று நாம் நினைத்து ஒருவன் மேல் நம் கோபத்தை இன்று காட்டி விடலாம். அவனே நாளை நமக்கு மேல் வந்துவிட்டால், நம் கதி?
எத்தனையோ திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதவன் ஏதோ அதிர்ஷ்டம் அடித்து பெரிய பணக்கரனாகவோ, முதலாளியாகவோ, பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவோ ஆகிவிடலாம். அப்போது அவன் நாம் முன்பு செய்தவற்றை நினைத்து நமக்கு ஒன்றுக்கு பத்தாக தீமை செய்ய முற்படலாம்.
யார் அறிவார் ? காலம் , யாரை, எங்கே கொண்டு சேர்க்கும் என்று. அடிக்கின்ற காற்றில் சில குப்பைகள் கோபுரத்தின் மேல் போய் விடலாம்.
எனவே, இன்று நமக்கு கீழே இருக்கிறான் என்று எண்ணி அவனுக்கு தீமை செய்யக் கூடாது.
அதற்கு பெரிய உதாரணம் இராமன்.
கூனிதானே, வயதான, கூன் விழுந்த கிழவி என்ன செய்து விட முடியும்?
இராமன் அவள் மேல் கோபப்பட்டு உண்டி வில்லை அடிக்கவில்லை. விளையாட்டாக அடித்தான். அதுவே பின்னாளில் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுத்தது? தெரியாமல் செய்ததற்கே இவ்வளவு பெரிய வேதனை. தெரிந்தே செய்திருந்தால்?
எனவே, யாரிடத்தும் கோபத்தைக் காட்டக் கூடாது என்பது பெறப்பட்டது.