கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை
மனைவியை இழக்கும் துயரம் பெரும் துயரம். என்னதான் அவளிடம் ஆயிரம் குறை இருந்தாலும், அவள் இல்லாத உலகம் ஒரு மிகப் பெரிய வெற்றிடமாக இருக்கும். ஒரு ஆண் மகனை மிகவும் பலவீனமாக்கும் ஒரு விடயம் என்றால் அது அவன் அவனுடைய மனைவியை இழப்பதுதான்.
எந்த பெரிய இழப்பையும் ஒரு ஆணால் தாங்க முடியும். ஆனால், மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது.
இராமனை விட மன உறுதி உள்ள ஆடவனை நாம் காட்ட முடியாது. நாடு கிடையாது, காட்டுக்குப் போ என்ற போது கூட கலங்காமல் நின்றவன், சீதையை பிரிந்த பின் தடுமாறுகிறான். அவன் உள்ளம் சோர்ந்து போகிறது.
ஜாடாயு இறந்து கிடக்கிறார். ஏற்கனவே சீதையைப் பிரிந்த துன்பம். இப்போது தந்தை போன்ற ஜடாயு இழந்த துயரும் சேர்ந்து கொள்கிறது. இராமன் மனம் சோர்ந்து போகிறான்.
இலக்குவன் சொல்கிறான்
"என்ன இராமா நீ இப்படி பேசுகிறாய்...இவ்வளவு சோர்ந்து, ஒரு சாதாரண மனிதன் போல் பேசுகிறாய்.சீதையை இழந்த துயரம், அதனால் வந்த சோகம், கோபம் எல்லாம் விடு. நம்ம அப்பா போன்ற ஜடாயுவின் உயிரை எடுத்த அந்த இராவணனை கொல்ல வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் இது என்ன பேச்சு"
என்கிறான்.
பாடல்
“எந்தை ஈது இயம்பிற்று என்னை?
எண்மையன் ஆகி ஏழைச்
சந்த வார் குழலினாளைத்
துறந்தனை தணிதி யேனும்,
உந்தையை உயிர் கொண்டானை
உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்
சிந்தையை ஆகின் நின்று,
செய்வதென் செய்கை ‘‘ என்றான்
பொருள்
“எந்தை = என் தந்தை போன்ற இராமனே
ஈது = இந்த மாதிரி
இயம்பிற்று என்னை? = என்ன பேசுகிறாய் ?
எண்மையன் ஆகி = தாழ்வு மனப்பாண்மை கொண்டு
ஏழைச் = எளிமையான, பேதையான
சந்த வார் குழலினாளைத் = நீண்ட குழலினை (தலை முடி) கொண்ட சீதையை
துறந்தனை = பிரிந்து இருக்கிறாய்
தணிதி யேனும் = அதனால் வந்த சோகத்தையும், கோபத்தையும் விட்டு
உந்தையை உயிர் கொண்டானை = உன் தந்தையின் உயிரை எடுத்தவனை
உயிர் கொள்ளும் = அவன் உயிரை எடுக்கும்
ஊற்றம் = வலிமை
இல்லாச் = இல்லாத
சிந்தையை ஆகின் நின்று = எண்ணங்களைக் கொண்டு நின்று
செய்வதென் செய்கை ‘‘ = செய்கின்ற இந்த செயல் என்ன
என்றான் = என்று இலக்குவன் கேட்டான்
ஆறுதல் சொல்லுவதும் ஒரு கலை தான்.
இராமன் சோகத்தில் இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று இலக்குவனும் அவனைக் கட்டிக் கொண்டு அழுதால் என்ன ஆகும்? இராமாயணம் அங்கேயே முடிந்து போய் இருக்கும்.
யாராவது சோர்ந்து இருந்தால், அவர்களை தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தி அதில் இருந்து மீள வழி செய்ய வேண்டும். ஐயோ பாவம் என்று அவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் காரியம் நடக்காது.
சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்படி இராமன் என்ன சொன்னான் ?
No comments:
Post a Comment