Thursday, November 13, 2025

ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை

 ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை 


https://interestingtamilpoems.blogspot.com/2025/11/blog-post_13.html


ஒழுக்கமாக வாழ வேண்டும். 


ஒழுக்கம் என்றால் என்ன?  எதை ஒழுக்கம் என்று கொள்வது? அந்த ஒழுக்கம் எப்படி வரும்? 


இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று எப்படிச் சொல்லுவது? பெரியவர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்ல முடியும். இளையவர்கள் பல கேள்விகள் கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் தக்க பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டும். 


எங்கும் தேடி அலைய வேண்டாம். தமிழில் இவற்றை போதிக்க பல நூல்கள் உள்ளன. ஆசாரக் கோவை அதில் ஒரு நூல். 


ஒழுக்கத்திற்கு அடிப்படை என்னென்ன என்று அது கூறுகிறது. 


மொத்தம் எட்டு குணங்களை ஒழுக்கத்தின் அடிப்படை என்று கூறுகிறது. 



அவை என்னென்ன ?


பாடல் 


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ

டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ

டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து


கொஞ்சம் சீர் பிரிப்போம்


நன்றி அறிதல் பொறை உடைமை இன் சொல்லோடு 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை 

நல்ல இனத்தாரோடு நட்டல் இவை எட்டும் 

சொல்லிய ஆசார வித்து 


பொருள் 


நன்றி அறிதல் = ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் இருத்தல் 


பொறை உடைமை = பொறுமை 


இன் சொல்லோடு = இனிய சொல் பேசுதல் 

 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை = மற்ற எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாமல் இருந்தல் 


கல்வியோடு = கல்வி அறிவு 

 

ஒப்புரவு ஆற்ற அறிதல் = உலகோடு ஒத்துப் போகும் ஆற்றல் 


அறிவுடைமை = அறிவுடைமை 

 

நல்ல இனத்தாரோடு நட்டல் = நல்லவர்களோடு சேர்ந்து இருத்தல் 


இவை எட்டும் = இந்த எட்டு குணங்களும் 

 

சொல்லிய = ஆன்றோர் சொல்லிய 


ஆசார = ஆசாரத்துக்கு  


வித்து = அடிப்படை 


இவை எல்லாம் இருந்தால் ஒழுக்கம் தானே வரும்.


 


No comments:

Post a Comment