திருக்குறள் - வெகுளாமை
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_10.html
வெகுளுதல் என்றால் கோபம் கொள்ளுதல்.
வெகுளாமை என்றால் கோபம் கொள்ளாமல் இருத்தல்.
வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? கோபமே படக் கூடாது என்கிறாரா? ஒருவன் என்ன தவறு செய்தாலும் கோபமே படக் கூடாதா? இதெல்லாம் நடக்கிற காரியமா? நடை முறைக்கு ஒத்து வருமா? என்று கேட்கலாம்.
பரிமேலழகர் சொல்கிறார், "வெகுளாமை என்றால் வெறுமனே கோபப் படாமல் இருத்தல் அல்ல. கோபப் பட தகுந்த காரணம் இருந்தும், கோபப் படாமல் இருத்தல்" என்கிறார்.
சில பேர் காரணமே இல்லமால் எரிந்து விழுவார்கள்.
சிலர்க்கு கோபப்பட்டு பேசுவதே இயல்பாக இருக்கும். சாதரணமாகவே பேசத் தெரியாது.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அதிகாரம் இருப்பது துறவறவியலில். இது துறவிகளுக்குச் சொல்லப் பட்டது.
அதானே பார்த்தேன், நமக்கு இல்லை என்று ஒதுக்கி விடக் கூடாது. துறவிக்கு இது கட்டாயம். இல்லறத்தில் இருப்பவர்கள் கடை பிடிக்கக் கூடாது என்று அல்ல. முயற்சி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அது நோக்கி நகர வேண்டும்.
முதல் குறள்
யாரிடம் கோபம் கொள்ளலாம், யாரிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்.
நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தாலும், அவர்கள் கோபம் கொள்ளக் கூடாது. நம்மை விட வலிமையானவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தால், அவர்கள் மேல் கோபப் பட்டாலும் ஒன்றும் பலன் இல்லை. எனவே எக்காலத்தும், யார் மீதும் கோபம் கொள்ளக் கூடாது என்கிறார்.
பாடல்
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
பொருள்
செல்இடத்துக் = ஒருவனுடைய சினம் செல்லும் இடத்து, அதாவது மெலியார் மேல்
காப்பான் = சினத்தை காப்பவன்
சினங்காப்பான் = சினத்தை கட்டுப் படுத்துபவன் என்று கூறப் படுவான்
அல்இடத்துக் = மற்ற இடத்து (அதாவது வலியார் மேல்)
காக்கின்என் = கோபத்தை காட்டினால் என்ன
காவாக்கால் என் = காட்டாவிட்டால் என்ன
செல்லிடம், அல்லிடம் என்று இரண்டு இடங்களைக் கூறுகிறார். அது இடம் அல்ல. கோபம் செல்லும் மெலியார், கோபம் செல்லாத வலியார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
தெருவில் ஒரு தீயவன் இருக்கிறான். அவன் நாம் போகும் போது ஏதோ சொல்லி நம்மை கேலி செய்கிறான். அவனிடம் போய் சண்டை போட முடியுமா? அவன் பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்குத்தான் மேலும் தீங்கு வரும்.
சரி, கோபப் படாமல், "அவனை மன்னித்து விட்டேன்" என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவனை மன்னிப்பது என்பது பெரிய அறச் செயல் அல்ல. நம் உயிருக்கு பயந்து அவனை மன்னிக்கிறோம். அதில் அருள் இல்லை.
எனவே, அவனிடம் கோபத்தைக் காட்டினாலும், காட்டாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை.
நம்மை விட மெலியவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், வண்டி ஓட்டுபவர், வீட்டு காவலாளி, அலுவலகத்தில் நமக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று நம்மை விட வலிமை குறைந்தவர்கள் மேல் கோபத்தைக் காட்ட முடியும். அந்த சமயத்தில் கோபத்தைக் காட்டாமல் இருப்பதுவே சிறந்த அறம்.
ஏன் கோபப் படக் கூடாது? பட்டால் என்ன ஆகும்?
மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment