Showing posts with label கச்சி கலம்பகம். Show all posts
Showing posts with label கச்சி கலம்பகம். Show all posts

Friday, May 17, 2024

கச்சி கலம்பகம் - என்ன கவலை ?

கச்சி கலம்பகம் - என்ன கவலை ?



கவலை வந்து விட்டால், அதை எப்படி போக்குவது என்று மண்டையை உடைத்துக் கொள்கிறோம். யாரைப் பார்க்கலாம், என்ன உதவி கேட்கலாம், என்ன செய்யலாம் என்று குழம்பித் தவிக்கிறோம். 


கச்சி கலம்பகம் ஒரு படி மேலே போய், கவலை ஏன் வருகிறது? அதை வரமாலேயே தடுக்க வழி இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு அதற்கு பதிலும் தருகிறது. 


"காஞ்சிபுரத்தில் உள்ள சிவனை வணங்க பல பாடல்கள் உண்டு, பாட முடியாவிட்டால் கூட மற்றவர்கள பாடுவதைக் கேட்க காது இருக்கிறது, பூக்களைப் பறித்து தூவி வழிபட பல பூக்கள் உண்டு, வணங்க தலை உண்டு, தோத்திரங்கள் சொல்ல நாக்கு உண்டு, இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ்த்த அவர் உண்டு, அது மட்டும் அல்ல அருள் செய்ய அவர் உண்டு, நமக்கு என்ன கவலை" 


பாடல்   


போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துத்

தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள்

ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா

மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே. 


பொருள் 


போற்றப் = போற்றிப் பாட 


பல் = பல 


பாவுண்டு = பாக்கள், (பாடல்கள்) உண்டு 


கேட்கச் = கேட்க 


செவியுண்டு = காது இருக்கிறது 


பூப்பறித்துத் = பூக்களைப் பறித்து 


தூற்றக் = தூவ 


கரமுண்டு = கரங்கள் உண்டு 


 தாழச் = தாழ்த்தி வணங்க 


சிரமுண்டு = தலை உண்டு 


தோத்திரங்கள் = பக்திப் பாடல்கள் 


ஆற்றச் = பாட 


செந் நாவுண்டு  = சிவந்த நாக்கு உண்டு 


தென்கச்சி = காஞ்சி மாநகரில் தென் புறத்தில் உள்ள 


வாணருண்டு = வாணர் உண்டு. அந்தக் கடவுள் உண்டு. 


அல்லலெலா மாற்ற = அல்லல் எல்லாம் ஆற்ற = துயராகளை எல்லாம் போக்க 


அருளுண்டு நெஞ்சே! = அவருடைய அருள் உண்டு 


துயரெவன் மற்றெனக்கே = எனக்கு எப்படி துயரம் வரும்.


இதை எல்லாம் செய்து கொண்டிருந்தால் துயரம் வராது.  இதை விட்டுவிட்டு என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறோம். 


 


Friday, February 22, 2019

கச்சி கலம்பகம் - தூயவளே

கச்சி கலம்பகம் - தூயவளே 


காதல்வயப் பட்ட ஆண்களுக்குத் தெரியும், அவர்களின் மயக்கம். தான் காதலிக்கும் பெண் தேவதையா, கடவுளா, இப்படியும் ஒரு அழகான பெண் இருக்க முடியுமா என்று மயங்குவார்கள்.

அப்படி ஒரு காதல் போதை.

கச்சி கலம்பகத்தில் வரும் காதலன் , அவனுடைய காதலியை கண்டு மயங்குகிறான். இவள் மானிடப் பெண்னே அல்ல. இரம்பையோ, ஊர்வசியோ, மேனகையோ என்று திகைக்கிறான். இருந்தும் இவள் கண் இமைக்கிறது, அவள் சூடிய பூ வாடுகிறது எனவே இவள் மானிடப் பெண் தான் என்று முடிவுக்கு வருகிறான்.


பாடல்


பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே

பொருள்

பொங்கும் = பொங்கி வரும்

அருள் = கருணை , அன்பு

நயனம் = கண்கள்

பூவின் = பூ போன்று

இதழ்குவியும் = இதழ் குவியும். பூவின் மடல் குவிவது போல அவள் கண்கள் (இமைகள்) குவிகின்றன)

இங்கு = இங்கு

மலர்க்கோதை = மலர் மாலை

இதழ்வாடு = இதழ் வாடும். அவள் அணிந்த மாலையில் உள்ள மலர்கள் வாடும்

மங்குறவழ் = மங்குல் தவழ்  = மேகம் தவழும்

மாடக் = மாடம்

கச்சியில் = காஞ்சீபுரத்தில்

வாழுமெம் பெருமான் = வாழும் எம் பெருமான்

குறையா = குறையாத

வளக்கழுக் குன்றில் = வளம் பொருந்திய திருக்கழுக்குன்றம் என்ற இடத்தில்

உறைவா ளிவள் = வசிப்பவன் இவள்

பூ வுதித்த = பூ உலகில் உதித்த

தூ யவளே = தூய்மையானவளே

அவள் கண்கள் கருணையை வடிக்கின்றன.

"பொங்கும் அருள் நயனம்"

இந்த பூலோகத்தில் வந்து உதித்தாள்.

உதிப்பது என்றால், உள்ளது மீண்டும் தோன்றுவது என்று அர்த்தம்.

சூரியன் உதித்தது என்று சொல்வோம். சூரியன் எங்கேயும் போய் விடவில்லை. அது இரவில் நம் பார்வையில் படாமல் இருந்தது. காலையில் நமக்குத் தெரிகிறது. எனவே அதை  உதித்தது என்கிறோம்.

அது போல, அவள் இந்த பூ உலகில் வந்து உதித்தாள். வேறு ஏதோ உலகத்தில் உள்ளவள். இங்கு வந்து உதித்தாள் என்று அர்த்தம்.

நம்ம ஆட்கள் (முன்னோர்கள்) இரசித்து இரசித்து காதலித்து இருக்கிறார்கள்.

பாடலை வாசித்துப் பாருங்கள். காதலியை எந்த அளவுக்கு உயரே கொண்டு போகிறான் என்று தெரியும்.

Lovesu ....

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_22.html