Monday, April 7, 2025

திருவருட்பா - நடுக்கம்

 திருவருட்பா - நடுக்கம் 



சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன். 


ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான். 


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். 


அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.


சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம். 


பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள். 


இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். 


மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும்.  கருணை வற்றும். 


வள்ளல் பெருமான் சொல்கிறார்....


"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார். 


ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார். 


அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார். 


உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும். 


பாடல் 



துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்

கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்ட போதெல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

என் தந்தை நின் திரு உளம் அறியும்.


பொருள் 



துண்ணெனக் = துடித்து எழுந்து 


கொடியோர் = கொடியவர்கள் 


பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத் 


தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார். 



கண்ணினால் = என்னுடைய கண்களால் 


ஐயோ = ஐயோ 


பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை 

 


கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன் 


மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்) 


வலையும் = மீன் பிடிக்கும் வலையும் 


தூண்டிலும் = தூண்டிலும் 


 கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும் 


வகைகளும் = அது போன்ற கருவிகளையும் 


கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 


எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி 


என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 


என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய் 

.

மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார். 


ஜீவ காருண்யத்தின் உச்சம். 



Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம் 




Tuesday, April 1, 2025

திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்

 திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post.html

ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும்?



கதை புத்தகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். 


பாட நூல்கள், அறிவு நூல்கள், அற நூல்கள் போன்றவற்றை எப்படிப் படிப்பது?  


ஏன், அதில் என்ன சிக்கல்? மற்ற நூல்களைப் போல அவற்றையும் படிக்க வேண்டியதுதானே?  புரியாவிட்டால் அகராதி, இன்டர்நெட் எல்லாம் இருக்கே. அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று நாம் நினைக்கலாம். 


சரி, தெரிந்து கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அது சரிதானா என்று எப்படி அறிவது?  நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கிறோம். அதுதான் சரி என்று நம் வாழ்வை நடத்தலாம். ஒரு வேளை நம் புரிதல் தவறாக இருந்து விட்டால்?  வாழ் நாள் பூராவும் தவறாகவே வாழ்ந்திருப்போம் அல்லவா?  எவ்வளவு பெரிய தவறு அது.


உயரிய நூல்களை ஒரு சிறந்த ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும் என்று நம் முன்னவர்கள் நினைத்தார்கள். தானாக படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வள்ளுவர் சொல்கிறார் "நான் மெய்யாக கண்டவற்றில் வாய்மையை விட சிறந்த ஒன்றும் எதுவும் இல்லை" என்று. 


பாடல் 


யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்

வாய்மையி னல்ல பிற.


பொருள் 


யாமெய்யாக் = யாம் மெய்யாக 


கண்டவற்று ளில்லை = கண்டவற்றுள் இல்லை 


யெனைத்தொன்றும் = வேறு ஒன்றும் 


வாய்மையி னல்ல பிற = வாய்மையைத் தவிர பிற ஒன்று.


நாம் படித்துக் கொண்டு போனால், "சத்தியமாகச் சொல்கிறேன். வாய்மைதான் உயர்ந்த அறம்" என்று வள்ளுவர் கூறுவதாக நினைத்துக் கொண்டு மேலே போய் விடுவோம். 


பரிமேலழகர் போன்ற உயர்ந்த உரை ஆசிரியர்கள் மூலம் படிப்பதன் மூலம் இதில் எவ்வளவு நுண்ணிய, ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது என்று புரியும். 


"மெய்யா" என்பதற்கு என்ன அர்த்தம்? உண்மையாக, சத்தியமாக என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார் "மெய் நூல்களாக கண்டவற்றுள்" என்று.  உலகில் எவ்வளவோ உண்மை பற்றி ஆராய்ந்து சொல்லும் நூல்கள் இருக்கின்றன. அந்த அனைத்து நூல்களிலும் என்கிறார். 


எதுக்கு அனாவசியமா நேரத்தை வீணாக்குகிறாய். நான் எல்லா நூல்களையும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்கிறார் வள்ளுவர். 


அது சரி, மெய் நூல்கள் என்றால் என்ன என்ற கேள்வி வரும் அல்லவா?  ஆளாளுக்கு ஒரு நூலை கொண்டு வருவார்கள். இதுதான் உண்மையான மெய் நூல் என்று. எப்படி இனம் காண்பது?  


பரிமேலழகர் சொல்கிறார். பிரமிக்க வைக்கிறது. 


"தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்"


அவர் உரைக்கு,  நாம் உரை காணவேண்டும். ...:)


"தம்கண் மயக்கம் இன்மையின்" - அதாவது தனக்கு ஒரு குழப்பமும் இல்லாமல். எது சரி, எது தவறு என்ற குழப்பம் எதுவும் இல்லாமல். 


"பொருள்களை"  உலகில் உள்ள பொருள்களை 


உள்ளவாறு உணரவல்லராய்க் = அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே உணர வல்லவர்கள். 


காம வெகுளிகள் இன்மையின் = காமமும், கோபமும் இல்லாமல். அதாவது விருப்பு, வெறுப்பு, இல்லாமல் 


அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் = அந்தப் பொருள்களை உண்மையாக உணர்ந்தது மட்டும் அல்ல, உணர்ந்தவாறே சொல்லவும். சிலருக்கு உண்மை தெரியும். இருந்தாலும், சுய இலாபம் கருதி உண்மையை மறைத்து, திரித்துச் சொல்லி விடுவார்கள். அப்படி அல்லாமல். 


வல்லராய = திறமை உள்ளவர்களாக 


இறைவர் = அப்படி இருக்கக் கூடியவர் உலகிலேயே ஒருவர்தான். அவர்தான் கடவுள். 


அருளான் = அந்தக் கடவுளின் அருள் பெற்ற 


உலகத்தார் = உலகில் உள்ளவர்கள் 


உறுதி = நிலையான வீடு பேறு 


எய்துதற் பொருட்டுக் = அடைவதற்காக 


கூறிய ஆகமங்கள் = கூறப்பட்ட ஆகமங்கள் 


அதாவது, இறை அருள் பெற்ற பெரியவர்கள், சான்றோர்கள், , உலக மக்கள் நன்மை அடையும் படி சொல்லப்பட்ட ஆகம நூல்கள்தான் மெய்யான நூல்கள் என்கிறார். 


அப்படி என்றால், மற்றவை உண்மையை எடுத்துச் சொல்லும் நூல்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அப்படிப்பட்ட அனைத்து மெய் நூல்களிலும், வாய்மையை விட உயர்ந்த அறம் ஒன்றும் இல்லை என்கிறார். 


கவனிக்க வேண்டியது, மெய் நூல்கள் பல இருக்கின்றன. நான் படிக்கும் நூல்தான் மெய் நூல் என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் நினைக்கக் கூடாது. வள்ளுவர் அவற்றை எல்லாம் படித்து இருக்கிறார். 


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் தெரிந்தே இருக்காது. 


எனவே, உயரிய நூல்களை ஆசிரியர் துணை கொண்டு அணுகுவது நலம். 


வாய்மை அதிகாரம் முற்றிற்று.  



Monday, March 31, 2025

பெரிய புராணம் - உன்னால் எப்படி முடியும்?

பெரிய புராணம் - உன்னால் எப்படி முடியும்?



மனிதன் நினைக்கிறான் தன் காரியங்களை தானே நிர்ணயம் செய்து அவற்றை செய்து முடிப்பதாக. 


நான் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை மனைக்கு அலுவலகம் செல்ல வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்று தன் வாழ்வின் நொடிகளை தான் தீர்மானிப்பதாக மனிதன் நினைக்கிறான். 


அது சரியா?


அடுத்த நொடி எது பற்றி சிந்திக்கப் போகிறான் என்று ஒருவனுக்குத் தெரியுமா?  அடுத்த நொடி எதைப் பார்க்கப் போகிறோம் என்று ஒருவனால் உறுதியாகக் கூற முடியுமா?  


பேசும் போது ஒலி வருகிறது. அந்த ஒலி வருவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது?  நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் யோசித்து, தேர்ந்து எடுத்துத்தான் பேசுகிறீர்களா? எப்படி சொற்கள் வந்து கொண்டே இருக்கின்றன? யார் முடிவு செய்தது இந்த இந்த வார்த்தைகளை பேச வேண்டும் என்று?  


இந்த பிரபஞ்ச வெளியில் அறிவு கொட்டிக் கிடக்கிறது. ஆங்கிலத்தில் Cosmic Consciousness என்று சொல்லுகிறார்கள். அந்த பேரறிவை எட்டிப் பிடித்து விட்டால் நமக்குத் தேவையானது எல்லாம் அங்கிருந்து கிடைக்கும் என்கிறார்கள். 


அசரீரி என்று சொல்கிறார்களே அது அதன் வெளிப்பாடு. 


அறிவியல் உலகில் எத்தனையோ பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தற்செயலாய், கனவில், ஒரு விபத்தின் மூலமாக வெளிப்பட்டு இருக்கின்றன. அதெல்லாம் அந்த பிரபஞ்ச அறிவின் வெளிப்பாடு என்கிறார்கள். 


பெரிய புராணம் பாடு என்று அநபாய சோழன் சேக்கிழாரிடம் கூறினான். சேக்கிழாருக்கு எப்படி பாடுவது என்று தெரியவில்லை. சிதம்பரம் சென்று, சிவனை வேண்டி தொழுதார். அசரீரி வெளிப்பட்டது "உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தது. 


முழுவதும் பாடி விட்டார். அரங்கேற்றம் செய்ய வேண்டும். 


"அடியார்கள் புராணத்தை பாடும் அளவுக்கு உனக்கு திறமை இருக்கிறதா என்று யாராவது கேட்டால் அவர்களுக்குச் சொல்லுவேன், இது என் கூற்று அல்ல. மெய் முதற் கடவுளான சிவனின் கூற்று...அவன் கூறித்தான் நான் இதைப் பாடினேன்"  என்று அவை அடக்கம் சொல்கிறார். 


நானாக செய்தது ஒன்றும் இல்லை. இது எனக்குத் தரப்பட்டது. நான் அதை உங்களுக்குத் தருகிறேன் என்கிறார். 


பாடல் 


அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்

தெருளின் நீரிது செப்புதற் காமெனின்

வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய

பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே .


பொருள் 


அருளின் நீர்மைத் = அருள் தன்மை. அருள் ஒன்றையே இயல்பாகக் கொண்ட 


 திருத்தொண் டறிவருந் = திருத் தொண்டர்களை அறியும் திறம் 


தெருளின் = மயக்கமற அறிவது 


நீரிது = நீர் (சேக்கிழாராகிய நீர்) இதை  


செப்புதற் காமெனின் = செப்புவதுற்கு + ஆம் + எனின் = சொல்லுவது எவ்வாறு என்று கேட்டால் 


வெருளின்= மயக்கம் அற்ற 


மெய்ம்மொழி = உண்மையான மொழி 


வானிழல் = வான் + நிழல் = அசரீரி 


கூறிய = கூறிய 


பொருளின் ஆகும் = பொருளின் மூலம் 


எனப்புகல் வாமன்றே = என்று சொல்வேன் 


"அடியவர்களின் புகழை உம்மால் எப்படி சொல்ல முடியும் என்று கேட்டால், வானில் இருந்து வந்த அசரீரி சொல்லக் கேட்டதால், என்னால் முடியும்" என்கிறார் சேக்கிழார் பெருமான். 


எப்படி தொலைக் காட்சிப் பெட்டியில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தை (channel ) ரிமோட் கன்ட்ரோலில் அழுத்தினால் அந்த நிலையத்தின்ஒளி பரப்பாவது நம் பெட்டியில் தெரிகிறதோ, அது போல், இறை அருள் கிடைக்கும் போது, எந்த அறிவையும் அங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும். 


அந்த அறிவு எந்நேரமும் வந்து கொண்டே தான் இருக்கிறது. தொலைக் காட்சிப் பெட்டியை ஆன் செய்ய வேண்டும், அந்த குறித்த நிலையத்தின் அலை வரிசையை பிடிக்க வேண்டும். பிடித்தால் வந்து விடும். 




Thursday, March 20, 2025

திருக்குறள் - விளக்கு

 திருக்குறள் - விளக்கு 


நம் வீடுதான். எது எது எங்க இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். 


ஒரு நாள் சற்று தாமதமாக வீட்டுக்கு வருகிறோம். இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என்று வைத்துக் கொள்வோமே. மின்சாரம் இல்லை. நம் வீடுதானே என்று நம்மால் எளிதாக உள்ளே சென்று காரியங்கள் செய்ய முடியுமா? அங்கும் இங்கும் முட்டிக் கொள்வோம். கட்டில் ஒரு பக்கம் இடிக்கும். நாற்காலி இன்னொரு பக்கம். மேஜை மறுபக்கம். 


கை பேசி விளக்காவது வேண்டும் எது எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ள. இடித்துக் கொள்ளாமல் செயல் பட. அடி பட்டுக் கொள்ளாமல் இருக்க. தவறி விழுந்துவிடாமல் இருக்க. 


அது வீட்டுக்கு. 


நம் வாழ்வை நாம் எப்படி நடத்திச் செல்வது ?


எது சரி, எது தவறு என்று எப்படி தெரியும்? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படித் தெரியும். 


மனம் பூராவும் அறியாமை என்று இருள் மண்டிக் கிடக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வை செம்மையாக நடத்துவது ?


இந்த அறியாமை என்ற இருளைப் போக்கி வெளிச்சம் தருவது எது ?


வாய்மை என்ற விளக்கே மிகச் சிறந்த விளக்கு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு


பொருள் 


எல்லா விளக்கும் = புற இருளை போக்கும் அனைத்து விளக்குகளும் 


விளக்கல்ல = விளக்கு அல்ல 


சான்றோர்க்குப் = சான்றோருக்கு 


பொய்யா விளக்கே விளக்கு = பொய்யாமை என்ற விளக்கே விளக்கு ஆகும். 


மற்ற விளக்குகள் எல்லாம் சூரியன், சந்திரன், தீ, மற்றும் வீட்டில் ஏத்தும் குத்து விளக்கு, அகல் விளக்கு, மின்சார விளக்கு போன்றவை. இவை புற இருளை மட்டுமே போக்கும். எனவே அவை சிறந்தவை அல்ல. 


அக இருளை நீக்கும் வாய்மை என்ற விளக்கே உண்மையான விளக்கு என்று சான்றோர் கொள்வர். 




Wednesday, March 19, 2025

நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ?

 நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ? 


கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் நல்ல துணி உடுத்திப் போக வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்றால் நல்ல புத்தங்கள் வேண்டும். 


இது போல வாழ்வில் எது ஒன்றையும் அடைவதற்கு வேறொன்றின் துணை தேவைப்படுகிறது. 


ஒருவன் இழிவு அடையாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?  

பேர் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் கூடவே துணைக்கு ஒன்றும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?


எல்லோரையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


நான்மணிக் கடிகை விடை தருகிறது.


பாடல் 


 இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது

வேண்டின் வெகுளி விடல்.


பொருள் 


இன்னாமை வேண்டின் = ஒருவன் பிறரால் இகழப் பட விரும்பினால் 


இரவெழுக = பிச்சை எடுக்க வேண்டும். 


இந்நிலத்து = இந்தப் பூமியில் 


மன்னுதல் வேண்டின் = நிலைத்து நிற்க வேண்டும் என்றால் 


இசைநடுக = புகழ் தரும் வினைகளைச் செய்ய வேண்டும் 


தன்னொடு = எப்போதும் தன்னோடு  கூடவே  


செல்வது வேண்டின் = ஒன்று இருக்க வேண்டும் என்றால்


அறஞ்செய்க = அறம் செய்க 


வெல்வது வேண்டின் = எல்லோரையும் வெல்ல வேண்டும் என்றால் 


வெகுளி விடல் = கோபத்தை விட்டு விட வேண்டும் 


யாரிடமும், எதையும் இலவசமாகப் பெற நினைக்கக் கூடாது. அது இழிவைத் தரும். எனக்கு அந்த உதவி செய், இந்த உதவி செய், என்று நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தால், உன்னை ஒரு பிச்சைக்காரன் என்றே அவர்கள் நினைப்பார்கள். 


நல்ல காரியங்களைச் செய்தால் தனக்குப் பின்னும் பேர் நிலைத்து நிற்கும். 


ஒருவன் செய்யும் அறம் அவனோடு எப்போதும் கூடவே இருக்கும். 


கோபம் இல்லாதவன் மற்றவர்களை எளிதில் வென்று விட முடியும். 



Tuesday, March 18, 2025

திருக்குறள் - தூய்மை

 திருக்குறள் - தூய்மை 


ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை, வெளி வேலை என்று அலைகிறோம். வியர்வை, தூசி, புகை, என்று அசுத்தங்கள் உடல் மேல் படித்து உடம்பு அழுக்கு ஆகிறது. நாற்றம் அடிக்கிறது. உடம்பை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் குளிக்க வேண்டும். ஒரு நல்ல குளியல் போட்டால் அழுக்கு, வியர்வை எல்லாம் நீங்கி உடம்பு சுத்தமாகிவிடும். 


உடம்பை சுத்தம் செய்துவிடலாம். 


உள்ளத்தை? மனதை? எப்படி சுத்தம் செய்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


"எப்படி நீர் கொண்டு உடம்பை சுத்தம் செய்கிறோமோ, அது போல மனதை வாய்மையால் சுத்தம் செய்யலாம்" என்று. 


பாடல் 


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


பொருள் 


புறந்தூய்மை = மனதுக்கு வெளியே உள்ள தூய்மை, அதாவது உடலின் தூய்மை 


நீரான் அமையும் = நீரில் குளிப்பதால் அமையும் 


அகந்தூய்மை = உள்ளுக்குள் இருக்கும் மனதின் தூய்மை 


வாய்மையால் காணப் படும் = வாய்மையால் அமையும் 


காணப்படும் என்று கூறியதன் காரணம், உறுதியாக, நிச்சயமாக நடக்கும் என்பதால் கட்டாயம் காணப்படும் என்று கூறினார். 


உடலை தூய்மைப் படுத்த நீரின்றி வேறு வழி இல்லை. 


அது போல மனதை தூய்மைப் படுத்த வாய்மை அன்றி வேறு வழி இல்லை. 


சரி, இந்த மனத்தூய்மை என்றால் என்ன?  


பரிமேலழகர் சொல்கிறார் "மனத் தூய்மை என்பது மெய்யுணர்தல்" என்று. 


மனம் தூய்மையாக இருந்தால்தான் உண்மையை அறிய முடியும். வாய்மை ஒன்றுதான் அதற்கு வழி.