Pages

Thursday, January 9, 2025

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண

 கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_9.html

தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு புலம்புகிறான். 


அவன் புலம்புவது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு பட்சிக்கும், ஒரு சக்ரவத்திக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு இருக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. 


நண்பர்களுக்குள்ளேயே ஒருவன் விரைவில் பெரிய இடத்தை அடைந்து விட்டால், மற்றவர்கள் மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். "அவன் பெரிய ஆள் .." என்று அவனிடம் உள்ள பழைய நெருக்கம் குறைந்துவிடும். 


அப்படி இருக்க ஒரு பறவைக்கும், ஒரு பெரிய சக்ரவத்திக்கும் இடையே இப்படி ஒரு நட்பா என்று நம்மை வியக்க வைக்கிறது.  


உண்மையான நட்பில் உயர்வு தாழ்வு இல்லை. 


இப்போது சடாயுவின் புலம்பலுக்கு வருவோம். 


சடாயு 


"தயரதா, என் நண்பனே, நீ ஏன் என்னை விட்டுப் போனாய் என்று எனக்குத் தெரியும். நீ இறந்து போனால் நானும் இறப்பேனா என்று என் நட்பின் ஆழத்தை அறியவே நீ என்னை விட்டுப் போய் விட்டாய். என்ன செய்ய. நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேனே. காரணம், நான் ஒரு விலங்கு என்பதலா? ஒரு வேளை நான் ஒரு மனிதப் பிறவியாய் இருந்திருந்தால் நீ உயிர் துறந்த போது நானும் உயிரை துறந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்"  


புலம்புகிறார். 


பாடல் 


அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்

    தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த

நிலம் காவல் அது கிடக்க, நிலையாத

    நிலை உடையேன் நேய நெஞ்சின்

நலம் காண நடந்தனையோ? நாயகனே!

    தீவினையேன், நண்பின் நின்றும்

விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;

    இன்னும் உயிர் விட்டிலேனால்.


பொருள் 

அலங்காரம் = அழகானது 


என = என்று 


உலகுக்கு = இந்த உலகத்துக்கு 


அமுது அளிக்கும் = அமுதை வழங்கும் 


தனிக் குடையாய்! = சிறந்த வெண் கொற்ற குடையை உடையவனே 


ஆழி சூழ்ந்த = கடல் சூழ்ந்த 


நிலம் = இந்த உலகம் 


காவல் அது கிடக்க = காவல் இன்றி கிடக்க (நீ இல்லாததால்) 


நிலையாத = ஒரு நிலையில் நிற்காத 


நிலை உடையேன் = மனதை உடைய என் 


நேய நெஞ்சின் = அன்பு கொண்ட மனத்தின் 


நலம் காண = பெருமையை, உறுதியைக் காண 


நடந்தனையோ? = என்னை விட்டு பிரிந்து போனாயோ ?


நாயகனே! = தலைவனே 


தீவினையேன், = தீய வினை உடையவனான நான் 


நண்பின் நின்றும் = நட்பு இருந்தாலும் 


விலங்கு ஆனேன் = விலங்காக இருக்கின்றேன் 


ஆகலினால் = ஆதலினால், எனவே 


விலங்கினேன் = விலகி இருக்கிறேன் 


இன்னும் உயிர் விட்டிலேனால் = இன்னும் உயிரை விடாமல் இருக்கிறேன் 


தன்னைத் தானே நொந்து கொள்கிறார். 


அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட, வீட்டில் கணவன்/மனைவி/பிள்ளைகள் என்று உறவாட நேரம் இல்லமால் தவிக்கிறார்கள். 


ஒரு சக்கரவர்த்தி எப்படி நேரம் ஒதுக்கி ஒரு பறவையோடு நட்பு பாராட்டி இருக்க முடியும். 


நேரம் இல்லை என்று நாம் சொல்லுவது எல்லாம் ஒரு சாக்கு. 


அன்பிருந்தால், நேரம் இருக்கும். 



Wednesday, January 8, 2025

தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்

 தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்


அப்பர் அருளிச் செய்த திருவாதிரைப் பதிகம். 


பெற்றோர்கள் குழந்தையை கொஞ்சும் போது, "என்னைப் பெத்த இராசா, செல்லக் கிளி, பப்புலு, ஜில்லுக் குட்டி, குட்டிக் கண்ணா.." என்றெல்லாம் கூறுவார்கள். அவர்களிடம் போய், "இராசாவா?, கண்ணனா?, கிளியா? ன்னு முடிவு பண்ணுங்க. ஒரே பிள்ளை எப்படி எல்லாமாக இருக்க முடியும். சும்மா உளறக் கூடாது" என்று சொல்ல முடியுமா?  


அன்பு மேலிட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். அதை அறிவுக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. 


காதலன், காதலியை கொஞ்சும் போது, "மானே, தேனே, மல்லிகையே, நிலவே,..."என்றெல்லாம் கொஞ்சுவான். ஒரே பெண் எப்படி மானாகவும், மயிலாகவும் இருக்க முடியும்?  


அதெல்லாம் கேட்க்கக் கூடாது. அன்பு, காதல் என்று வந்து விட்டால் கொஞ்சம் அறிவு விடை பெற்றுக் கொள்ளும். 


பக்தர்கள் பாடும் அப்படித்தான் என்கிறார் திருநாவுகரசு சுவாமிகள்.



இறைவன் முன் பக்தர்கள் இறைவனின் குண நலன்களைப் பாடி பரவசம் அடைகிறார்கள். ஆளாளுக்கு ஒரு குணத்தை சொல்கிறார்கள். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். 


வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஏதோ பித்து பிடித்து உளறுவதைப் போல் இருக்கும். பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிப்பது போல் இருக்கும்.  


என்ன செய்வது. பக்தி மேலிட்டால் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. 


பாடல் 


குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் .


பொருள் 


குணங்கள்பேசிக் = இறைவனின் குணங்களைப் பேசி 


கூடிப் = பக்தர்கள் ஒன்றாகக் கூடி 


பாடித் = பாட்டுப் பாடி 


தொண்டர்கள் = பக்தர்கள் 


பிணங்கித் = இறைவனை புகழ்வதில் ஒருவருக்கு ஒருவர் மாற்றிச் சொல்லி 


தம்மிற்  = தங்களுக்குள் 


பித்தரைப்போலப் பிதற்றுவார் = பித்தர்களைப் போல் பிதற்றுவார்கள் 


வணங்கி நின்று = வணங்கி நின்று 


வானவர்வந்து = தேவர்கள் வந்து 


வைகலும் = தினமும் 


அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் = அணங்கன் + ஆரூர் + ஆதிரை + நாள் + அது + வண்ணம் = அணங்கு என்றால் பெண். பெண்ணை பாதியாகக் கொண்டவன். திருவாரூர், திருவாதிரைத் நல்ல நாளில்.


தேவர்கள், திருவாரூர் வந்து தினமும் வணங்கிச் செல்வார்கள். 


உன் பக்தி சிறந்ததா, என் பக்தி சிறந்தாத என்பதல்ல போட்டி. அவரவருக்குத் தோன்றியதைச்  சொல்லி வணங்குகிறார்கள். 


தேவாரம் தெரியவில்லையா, பரவாயில்லை. 


திருவாசகம், பிரபந்தம் தெரியவில்லையா - ஒரு பிழையும் இல்லை. 


பக்தி மனதில் இருந்தால் போது. அந்த பக்தியில் என்ன தோன்றுகிறதோ, அதுதான் வழிபாடு. 


இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒரு நியதி இல்லை. 


சூடிக் கொடுத்தவள் = ஆண்டாள் 


சூடிக் கொடுத்தவன் = கண்ணப்பன் 





 


Monday, January 6, 2025

திருவருட்பா - வாலிலேன்

திருவருட்பா - வாலிலேன் 


உணவு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ, அதுவே அளவு அதிகமானால் பல துன்பங்களுக்கு இடமாகிப் போகிறது. 


உணவில் நாட்டம் அதிகமாக அதிகமாக, மற்றவற்றில் புத்தி போவது இல்லை. 


உணவில் சிறு பற்று வந்துவிட்டால் கூட போதும், அது நாளடைவில் பெரிதாக வளர்ந்து விடும். 


"காலையில் எழுந்தவுடன் ஒரு வாய் காப்பி குடிக்காமல் எனக்கு ஒரு வேலையும் ஓடாது" என்று பெரிய சாதனை போல் சொல்லுபவர்களை கேட்டு இருக்கிறேன். 


சில நாள் வீட்டில் செய்த உணவு மிகுந்து விடும். அதைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்து உண்ணும் எண்ணம் வராது. அதை குளிர் சாதன பெட்டியில் (fridge) வைத்து இரண்டு மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி உண்பவர்களும் உண்டு. 


வள்ளலார் சொல்கிறார்,


"நெல் குதிர் போல் என் வயிற்றில் சோற்றை அள்ளிப் போடுகிறேன். பழங்களை உண்டு அதன் தோலில் ஒரு துளியைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். எனக்கு ஒரு வால் இல்லை. இருந்து இருந்தால் நான் காட்டில் வாழும் விலங்கோடு ஒன்றாக இருக்கத் தகுந்தவன். இப்படி ஆகி விட்டேனே, இறைவா நான் என்ன செய்வேன்" என்று. 


பாடல் 


 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே

          பத்தியால் ஒருபெரு வயிற்றுச்

     சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை

          தகுபலா மாமுதற் பழத்தின்

     தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்

          சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்

     வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க

          வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.



பொருள் 


 பாலிலே கலந்த சோறெனில் = பாலில் கலந்த சோறு என்றா 


விரைந்தே = வேகமாகச் சென்று 


  பத்தியால் = மிகுந்த ஆர்வத்துடன் 


ஒருபெரு வயிற்றுச் = பெரிய வயிறு 


சாலிலே = பெரிய வாயகன்ற பாத்திரம். நெல்லு போட்டு வைப்பார்கள். 


அடைக்கத் தடைபடேன் =  அள்ளி அள்ளிப் போட்டு, ஒரு அளவில்லாமல் உள்ளே போடுவேன் 


வாழை,  தகுபலா மா = வாழை, பலா, மாம் பழம் 


முதற் பழத்தின் = போன்ற பழங்களை தின்று விட்டு, 


தோலிலே எனினும் = அவற்றின் தோலில் 


கிள்ளிஓர் சிறிதும் = நகத்தால் கிள்ளி ஒரு சிறிய துணுக்கைக் கூட 


சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் வராது எனக்கு 


வாலிலேன் = எனக்கு வால் இல்லை 


இருக்கில் = இருந்திருந்தால் 


வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. வால் இல்லாத ஒரே காரணத்தால் நாட்டில் இருக்கிறேன். நான் ஒரு வால் இல்லாத வன விலங்கு 


என்செய்வேன் எந்தாய் = நான் என்ன செய்வது இறைவா 


முதலில் வேறு சோறு. அப்புறம் அதில் கொஞ்சம் பால் விட்டு உண்பது. பின் சோற்றில் பாலை விடுவதற்கு பதில் பாலில் சோற்றை விடுவது என்று ஆகி விடுகிறது. 


" பாலிலே கலந்த சோறெனில்"....பாலில் கலந்த சோறு என்கிறார். 


வீட்டில் நல்ல பண்டங்கள் செய்தால், நாலு பேருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். எல்லாம் எனக்கே என்று தீபாவளி, பொங்கலுக்கு செய்த தின் பண்டங்களை பத்து நாள் வைத்து உண்ணக் கூடாது. 


பசித்தவர்க்கு கொஞ்சம் உணவு கொடுத்து உண்டால் அவர்கள் பசி தீர்வது மட்டும் அல்ல, நாம் உண்பதும் குறையும். 

Wednesday, January 1, 2025

திருக்குறள் - எது எங்கு நிற்கும்

 திருக்குறள் - எது எங்கு நிற்கும் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post.html


எவ்வளவோ படிக்கிறோம், எவ்வளவோ கேட்கிறோம். 


படிக்கும் போதும், கேட்கும் போதும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அதை அப்படியே கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 


ஆனால் முடிவதில்லை. 


மனம் பழைய வழியிலேயே போகிறது.  


ஏன்?


ஒன்றைச் செய்வதினால் வரும் நன்மை, செய்யாமல் விடுவதினால் வரும் தீமை என்ற இரண்டு மட்டும் புரிந்தால் போதாது. 


நன்மையின் அளவு என்ன, தீமையின் அளவு என்ன என்று தெரிய வேண்டும்.  அளவு தெரிந்தால், கடைபிடிப்பது எளிது. 


ஒரு உதாரணம் பார்ப்போம்.


ஐஸ் கிரீம் சாப்பிடுவது இன்பமாக இருக்கிறது. அதில் உள்ள துன்பம் தெரிகிறதா என்றால் இல்லை. அதில் என்ன துன்பம் இருக்கிறது என்று சொல்லுவோம். 


அதுவே, ஒரு சர்க்கரை நோயாளியிடம் அந்த ஐஸ் கிரீமை கொடுத்தால் காத தூரம் ஓடுவார். ஏன்? அதனால் வரும் தீமை அவருக்கு நன்றாகத் தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு கூடும் என்று துல்லியமாகத் தெரியும். எத்தனை கிராம் மாத்திரை சாப்பிட வேண்டி வரும் என்று தெரியும். தலை சுற்றல், வியர்வை, படபடப்பு போன்ற உடல் உபாதைகள் அவருக்குத் தெரியும். எனவே, அதை உண்ணாமல் இருப்பது சுகம் என்று இருப்பார். 


தவறு செய்வதின் விளைவு முழுமையாகத் தெரிந்தால், அளந்து, அது என்ன அளவு என்று தெரிந்தால் தவறு செய்வதில் நாட்டமே வராது. அதை செய்யாமல் இருப்பது எவ்வளவு சுகம் என்று தெரியும். 


அந்த அளவு இல்லை என்றால், "செய்தால் என்ன, ஒரு முறைதானே" என்று மனம் ஓடும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"எதையும் ஆராய்ந்து, விளைவுகளை அளந்து அறிந்தவன் மனதில் எப்படி அறம் நிலைத்து நிற்குமோ, அது போல் களவையும், அதன் சுவையையும் அறிந்தவர் மனதில் வஞ்சனை நிலைத்து நிற்கும்" 


பாடல் 


அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு


பொருள் 


அளவுஅறிந்தார் = எதையும் ஆராய்ந்து, அளந்து அறிந்தவர் 


நெஞ்சத்து = மனதில் 


அறம்போல  நிற்கும் = அறம் எப்படி நிலைத்து நிற்குமோ அது போல 


களவுஅறிந்தார் = களவு செய்வதை மேற்கொண்டவர் 


நெஞ்சில் = மனதில் 


கரவு = வஞ்சனை 


களவு எண்ணம் மனதில் வந்து விட்டால்,யாரை எப்படி ஏமாற்றலாம், எப்படி அவர்கள் பொருளை அவர்கள் அறியாமல் பறித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் ஓடும். அதில் சந்தேகமே இல்லை. அது எந்த அளவுக்கு உறுதியானது என்றால் அளவு அறிந்தவர் மனதில் அறம் எவ்வாறு நிலைத்து நிற்குமோ அந்த அளவு என்கிறார். 


நாம் இரண்டாம் பகுதியை சற்று விட்டு விடுவோம். நமக்கு களவில் நாட்டம் இல்லை. களவினால் வரும் பொருள் நல்லது செய்யாது என்று நாம் நம்புபவர்கள். 


முதலாவது பகுதி நமக்கு முக்கியமானது. 


அற வழியில் நிற்க மனம் ஆசைப் பட்டாலும், பெரும்பாலும் முடிவது இல்லை. ஒரு விரதம் இருக்க முடிகிறதா?  ஒரு வேளை காப்பியை விட முடிகிறதா?  


காரணம், விளைவின் ஆழம் தெரியாமை. மேலோட்டமாகத் தெரியும். அல்லது, அது பற்றிய சிந்தனை கிடையாது. முன்னோர்கள் சொன்னார்கள், புத்தகத்தில் எழுதி இருக்கிறது, பரம்பரையாக இப்படித்தான் செய்து வருகிறார்கள் என்ற அளவில் தெரியுமே தவிர செயலின் உண்மையான நீள அகலம் தெரியாது. 


தெரிந்தால், அறத்தை கடை பிடிப்பது அவ்வளவு எளிது. 


துறவறத்தின் இன்ப எல்லைகள் புரியாமையால் இல்லறத்தில் மனிதன் கிடந்து உழல்கிறான். 


புரிந்தவன், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறான்.