முத்தொள்ளாயிரம் - நாணிய ஆண் யானை
யானைக்கு நாணம் வருமா? அதுவும் ஆண் யானைக்கு?
வந்தது என்கிறது முத்தொள்ளாயிரம்.
கிள்ளி வளவன், கிள்ளி வளவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுடைய யானைப் படையில் நிறைய ஆண் யானைகள் இருந்தன. வளவன் போருக்குச் செல்லும் போது, இந்த யானைகள் எதிரி அரசனின் கோட்டைச் சுவர்களை தங்கள் தந்தத்தால் முட்டி பெயர்க்கும். அப்படி முட்டி முட்டி அந்த தந்தங்களின் கூர்மையான முன் பாகங்கள் உடைந்து போய் இருந்தன. எதிரி அரசர்களின் கிரீடம் அணிந்த தலைகளை இடறி விட்டதால், அந்த கிரீடத்தில் உள்ள கூர்மையான பாகங்கள் குத்தி அந்த யானைகளின் விரல் நகங்கள் முறிந்து போய் இருந்தன.
இப்படி உடைந்த தந்தத்தையும், நகத்தையும் தங்கள் பெண் யானையின் முன் காட்ட வெட்கப்பட்டு ஆண் யானைகள் தள்ளியே நின்றனவாம்.
பாடல்
கொடிமதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்
முடிஇடறித் தேய்ந்த நகமும் – பிடி முன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு
பொருள்
கொடி = கொடிகள் பறக்கும் (எதிரி கொடிகள்)
மதில் = கோட்டை சுவற்றில்
பாய்ந்து = முட்டி
இற்ற = உடைந்த
கோடும் = தந்தமும்
அரசர் = அரசர்கள்
முடி = மகுடம்
இடறித் = தள்ளி விட்டு, மிதித்து
தேய்ந்த நகமும் = தேய்ந்த நகங்களும்
பிடி = பெண் யானை
முன்பு = முன்
பொல்லாமை = தன்னைப் பார்த்து இகழுமே என்று
நாணிப் = வெட்கப்பட்டு
புறங்கடை = வெளியிலேயே
நின்றதே = நின்றன
கல்லார் = கல் போன்ற ஆர்த்து எழுந்த
தோள் = தோள்களை உடைய
கிள்ளி = கிள்ளை வளவனின்
களிறு = ஆண் யானைகள்
வளவன் வீரம் உள்ள அரசன் என்று சொல்ல வேண்டும். அதை எவ்வளவு அழகாக சொல்கிறந்து இந்தக் கவிதை.
காதல், வீரம், கவிதை...என்ன ஒரு இனிய வாழ்க்கை....
அருமையான கவிதை. உள்ளத்தைக் கவரும் கருத்துரை. பாராட்டுகள்.
ReplyDeleteசித்தானந்தம்
மிக அழகான கவிதை
ReplyDeleteSo beautiful
ReplyDelete