Wednesday, June 26, 2013

இராமாயணம் - முறிந்த வில்கள்

இராமாயணம் - முறிந்த வில்கள் 


ஜனகன் வில்லை கொண்டு வந்து வைத்து விட்டான். அதை வளைத்து நான் ஏற்றுபவர்களுக்குத் தான் சீதை. விஸ்வாமித்திரன் வில்லைப் பார்த்தான், இராமனைப் பார்த்தான். விச்வாமித்ரனின் மனதில் உள்ளதை எல்லாம் இராமன் அறிந்தான் என்று கம்பன் சொல்லுவான்.

அந்த இடம் தொடங்கி இராமன் வில்லை நான் ஏற்றும்வரை கம்பன் காட்டுவது அற்புதமான ஒரு அதிவேக சினிமா காட்சி போல இருக்கும். காமிரா அங்கும் இங்கும் அலைகிறது. அங்கங்கே உள்ளவர்கள் பேசுவது. அங்குள்ள மக்களின் மன நிலை...அத்தனையும் கம்பன் படம் பிடிக்கிறான்....ஏதோ அவன் அந்த கூட்டத்தில் , அந்த மக்கள் மத்தியில் இருந்து கேட்ட மாதிரியும் பார்த்த மாதிரியும்...அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான்.

அதை படிக்கும் போது நீங்களும் அங்கே இருப்பதை போல் உணர்வீர்கள்.

முதல் பாடல்

அரங்கம் நிறைந்து இருக்கிறது. இராமன் எழுந்து நிற்கிறான். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்குகிறார்கள். இராமன் அந்த வில்லை முறிக்கும் முன் மன்மதன் ஆயிரம் வில்லை முறித்தானம் . அங்குள்ள பெண்களின் மேல் மலர் அம்புகளை எறிந்து எறிந்து அவன் விற்கள் முறிந்து கொண்டே இருந்ததாம்.


பாடல்

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.


பொருள்





தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன் = தூய்மையான தவங்களை தொடங்கிய முதியவன் (விஸ்வாமித்திரன்). கம்பனுக்கு இங்கே ஒரு கிண்டல். தொடங்கிய தொல்லோன் என்கிறான். முடித்த என்று சொல்லவில்லை. தவம் இயற்றிய தொல்லோன் என்று சொல்லி இருக்கலாம். தவம் செய்த என்றாவது சொல்லி இருக்கலாம். தொடங்கினான்....முடித்தானா என்று தெரியாது என்பது போல பாடலை அமைக்கிறான். விஸ்வாமித்திரன் பல முறை தவம் தொடங்கி, அதில் தோற்று தோற்று பின் வென்றவன். எனவே தொடங்கிய என்பது சரிதான்


ஏயவன் = அவனால் (விச்வாமித்ரனால்) ஏவப்பட்ட இராமன்

 வல் வில் இறுப்பதன் முன்னம் = வலிமையான அந்த வில்லை முறிப்பதற்கு முன்னால்
.
சேயிழை மங்கையர் = சிறப்பான அணிகலன்களை அணிந்த பெண்கள் (அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சிக்கு போவது என்றால் பெண்கள் இருக்கிற நகைகளை அணிந்து கொண்டு கிளம்பி விடுவார்கள் என்று தெரிகிறது)

சிந்தைதொறு = ஒவ்வொருவர் மனத்திலும்

எய்யா ஆயிரம் வில்லை = எய்யா என்பது செய்யா எனும் வாய்பாட்டு வினை முற்று. அது என்ன செய்யா எனும் வாய்பாடு ? ...:) எய்யா என்றால் எய்த்த வில்.

அனங்கன் இறுத்தான் = மன்மதன் முறித்தான். எவ்வளவு பெண்கள், எவ்வளவு அம்பு போடுவது? ஒரு வில் எவ்வளவுதான் தாங்கும் ? முறிந்து போனபின் , இன்னொரு வில்லை எடுக்கிறான். இப்படி ஆயிரம் வில்.

ஒரு பாடலில் எவ்வளவு விஷயம்...

இதில் இன்னும் கொஞ்சம் பாடல்களை பார்ப்போமா ?

ஆம் என்றால் just type yes in comment box and submit . ஒரு பத்து பேர் விரும்பினால் தொடர்ந்து எழுத உத்தேசம்

என்ன சரிதானே ?



6 comments:

  1. yes.
    விருந்து சாப்பிட கசக்குமா என்ன? பரிமாறு. ரசித்து அனுபவிக்க நாங்கள் ready.

    ReplyDelete
  2. I got one YES...9 more to go...:)

    ReplyDelete
  3. இந்த ஒரு விஷயத்தில் நான் ராவணனாய் இருந்து விடுகிறேனே, ஒரு தலைக்கு பதில் பத்து தலை வழியாய் விஷயம் போனால் ஒருக்கால் புரியுமோ என்னவோ, அதனால் பத்து தலையை, பத்து பேராய், எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ்

    ReplyDelete