திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?
எவ்வளவோ படிக்கிறோம் ? எதை எதையோ அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல விதங்களில் அறிகிறோம்.
இவையெல்லாம் எதற்காக என்று வள்ளுவர் கேட்கிறார்.
படித்து என்ன செய்யப் போகிறாய் என்பது அவர் கேள்வி.
ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டும். கல்வியின் பயன் என்ன ?
பாடல்
கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.
சீர் பிரித்த பின்
கற்றதனால் ஆய பயன் என் கொல், வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
பொருள்
கற்றதனால் = படித்ததனால்
ஆய பயன் என் கொல் = கிடைக்கும் பயன் என்ன ?
வாலறிவன் = இறைவன்
நற்றாள் = நன்மை பயக்கும் திருவடிகளை
தொழார் எனின் = தொழவில்லை என்றால்
வள்ளுவர் இறைவனை தொழுங்கள் என்று சொல்லவில்லை.
இறைவனை தொழவில்லை என்றால், கற்றதனால் ஆய பயன் என்ன என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார்.
அதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?
வாசிப்பதால் என்று சொல்லவில்லை. கற்றதனால் என்கிறார்.
இறைவன் திருவடிகளை தொழுவது என்பது கற்றதனால் வரும் ஒரு பயன்.
அது இல்லை என்றால், வேறு என்ன பயன் இருக்கிறது என்கிறார் ?
ஆணவங்களில் முதலாவது நிற்பது கல்வியினால் வரும் ஆணவம். வித்யா கர்வம் என்று சொல்வார்கள்.
நாம் எல்லாம் அறிந்து விட்டோம். என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த உலகில் . எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்ற கர்வம் வரும்.
அந்த கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்.
இறைவனை தொழுவது ஆணவத்தை அழிக்கும்.
நம் அறிவை, ஏதோ மார்கத்தில் தூண்டிச் செலுத்துவது எது ? அந்தத் துறையில் நாம் வெற்றி பெறச் செய்வது எது ?
சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
கற்றதனால் ஆய பயன் என் கொல் ?
சிந்திப்போம்.
ஆணவம் இல்லாமல் இறைவனையும் தொழாமல் இருக்கலாமே!
ReplyDelete