Monday, November 10, 2014

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம்

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம் 


அது ஒரு பெரிய குளம்.

அது ஒரு கார் காலம்.

அந்த குளத்தின் நடுவில் ஒரு குவளை மலர் மலர்ந்து நிற்கிறது. கழுத்தளவு நீரில் நின்று கொண்டு என்ன இது தவம் ?

யாருக்காக இந்த தவம் ?

ஓ ....புரிந்து விட்டது....கூர்மையான வேலைக் கொண்ட, வண்டுகள் ரீங்காரம் இடும், குதிரையின் மேல் செல்லும் பாண்டிய மன்னனின் மார்பில் மாலையாக மாற இந்த குவளை மலர் ஒற்றைக் காலில் இந்த குளிர்ந்த நீரில் தவம் இருக்கிறது.

பாடல்

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்

பொருள்

கார் = கார் காலத்தில்

நறு = நறு மணம் பொருந்திய

நீலம் = குவளை மலர்

கடிக் = பெரிய

கயத்து = குளத்தில்

வைகலும் = தினமும்

நீர்நிலை நின்ற = நீர் நிலையில் நின்று

தவம்கொலோ = எதற்க்காக தவம் செய்கிறாய்

கூர் நுனை வேல் = கூர்மையான முனை கொண்ட வேலைக் கொண்ட

வண்டு இருக்கும் = வண்டு இருக்கும்

நக்க தார் = மலர்ந்த மாலையைக் கொண்ட (நக்க = மலர்ந்த; தார் = மாலை )

வாமான் = தாவி செல்லும் குதிரை

வழுதியால் = பாண்டிய மன்னனால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம் = அவனோடு இருக்க வேண்டி


இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்வதனால், அந்த மாதிரி தவம் இருந்ததால், அவன் மார்பில் இருக்கப் பெற்றது.



3 comments:

  1. இதைத்தான் கவிஞர் வைரமுத்து ஜீன்ஸ் படத்தில் கையாண்டுள்ளாரோ! நல்ல‍ பாட்டு, நல்ல‍ விளக்க‍ம். நன்றி.

    ReplyDelete
  2. ஜீன்ஸ் படத்தில் என்ன பாட்டு?

    ReplyDelete
    Replies
    1. வைரமுத்துவின் அந்தப் பாடல், (எனக்கே எனக்கா...) "ஒற்றைக் காலிலே பூக்க‍ள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான், பூமாலையே பூச்சூடவா.."

      Delete