இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்
தசரதன் இறந்து போனான். இராமன் கானகம் போனான். இறந்த தசரதனுக்கு இறுதிக் கடன்கள் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.
மீண்டும் மந்திரி சபை கூடுகிறது. அரசன் ஆணைப்படி, பரதன் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்று மந்திரிகள் பரதனை வேண்டுகிறார்கள்.
அதைக் கேட்ட பரதன் "விஷத்தை குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி பயந்து நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.
பாடல்
‘தஞ்சம் இவ் உலகம், நீ
தாங்குவாய் ‘எனச்
செஞ் செவ்வே முனிவரன்
செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர் ‘என,
நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன்
அருவிக் கண்ணினான்.
பொருள்
‘தஞ்சம் = அடைக்கலம்
இவ் உலகம் = இந்த உலகம்
நீ = நீ
தாங்குவாய் = காப்பாய்
எனச் = என்று
செஞ் செவ்வே = செம்மையாக
முனிவரன் = முனிவர்கள்
செப்பக் கேட்டலும் = சொல்லக் கேட்டதும்
‘நஞ்சினை நுகர் ‘ = விஷத்தை அருந்து
என = என்று சொல்லக் கேட்டு
நடுங்குவாரினும் = நடுங்குபவர்களை விட
அஞ்சினன் = பயந்தான்
அயர்ந்தனன் = தளர்ந்தான்
அருவிக் கண்ணினான் = அருவியே கண்ணாகக் கொண்ட பரதன்
அரசனின் ஆணை. ஆட்சிக்கு உரிய இராமனோ கானகம் போய் விட்டான். நாட்டுக்கு அரசன் இல்லை. மந்திரிகள் எல்லோரும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளும்படி சொல்கிறார்கள்.
ஒரு வேளை பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் , அவனை பழி சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அவன் ஏற்றுக் கொண்டான் என்றுதான் உலகம் சொல்லும்.
பரதன் அப்படிச் செய்யவில்லை.
மந்திரிகள் அப்படிச் சொன்னவுடன், "விஷத்தைக் குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.
எவ்வளவு பெரிய பதவி. சக்கரவர்த்தி பதவி. அதிகாரம். செல்வம். ஆள். அம்பு. சேனை. புகழ். என்று கணக்கில் அடங்காத செல்வம்.
அதை எடுத்துக் கொள் என்றால், உயிர் போவது போல (விஷத்தைக் குடிப்பது) நடுங்குகிறான்.
பதவியின் மேல் கொஞ்சம் கூட ஆசை இல்லாமல் இருந்தவர்கள் இருந்த நாடு.
தந்தை சொல் உயர்ந்தது என்று பதவியை விட்டு விட்டு இராமன் கானகம் போனான்.
அறம் உயர்ந்தது என்று வந்த பதவியை வேண்டாம் என்று விலக்கி நிற்கிறான் பரதன். எப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.
இன்று நடக்கும் பதவிச் சண்டைகளை பார்த்தால் மனம் வலிக்கிறது.
சொத்துக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்கிறார்கள். நீதி மன்றத்தின் படி ஏறுகிறார்கள்.
சொந்த தாய் தந்தையரை கொலை கூட செய்து விடுகிறார்கள்.
அரசியலில் கேட்கவே வேண்டாம்.
சொத்து அல்ல. பதவி அல்ல. அதிகாரம் அல்ல.....தர்மம் தான் உயர்ந்தது என்று வாழ்ந்து காட்டினார்கள் .
கதையை பிடித்துக் கொண்டோம். கருத்தை விட்டு விட்டோமோ என்று சந்தேகம் வருகிறது.
பரதன் ஏன் இராமனை விட பல மடங்கு உயர்ந்தவன் என்பதற்கு கம்பன் அமைக்கும் அடித்தளம் இது.
போகப் போகத் தெரியும். பரதன் எப்படி உயர்ந்தவன் என்று.
போவோமா ?
No comments:
Post a Comment