நாலடியார் - நன்மையையும் தீமையும்
மனித உறவுகள் சிக்கல்கள் நிறைந்தது.
அவற்றை வெற்றிகரமாக சமாளித்து கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல.
நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நாம் செயலாற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் முடியலாம்.
அதே போல் அவர்கள் நமக்குச் செய்யும் காரியங்களும் அப்படியே.
இதில் சிக்கல் என்னவென்றால், நல்லவர்கள் அவர்களுக்கு நாம் ஒரு நல்லது செய்திருப்போம். பின்னாளில் ஏதாவது தீமை செய்தால் கூட, முன்னாளில் செய்த நன்மைகளை நினைத்து நம்மால் விளைந்த தீமைகளை பொறுத்து மன்னிப்பார்கள்.
ஆனால் கயவர்களோ, நாம் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், ஒரு தீமை செய்து விட்டால், முன்பு செய்த அத்தனை நல்ல காரியங்களையும் தீயதாகவே பார்ப்பார்கள்.
உதாரணமாக, நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் ஏதும் இருந்தால் சொல்லும்படி நம்மிடம் கேட்டு இருப்பார், நாமும் நமக்குத் தெரிந்த வரன் ஏதும் இருந்தால் சொல்லி இருப்போம். அது திருமணத்திலும் முடிந்து இருக்கும். பின்னாளில், அந்த திருமணத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால், அந்த நண்பர் நல்லவராக இருந்தால் " சரி,ஏதோ அவருக்கு தெரிந்த வரனை சொன்னார், நம் நேரம் சரி இல்லை..." என்று விட்டு விடுவார். அதுவே அந்த நண்பர் நல்லவர் இல்லை என்றால் "...நான் துன்பப் பட வேண்டும் என்றே இந்த மாதிரி ஒரு மோசமான வரனை எனக்குச் சொல்லி இருக்கிறான்/ள் " என்று நினைப்பதோடு மட்டும் அல்லாமல், நாம் அவருக்கு முன்பு செய்த நன்மைகளையும் தீமையாகவே கருதுவார்.
பாடல்
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீதுஆயின்,
எழுநூறும் தீதாய்விடும்.
பொருள்
ஒரு நன்றி = ஒரு நல்லது
செய்தவர்க்கு = செய்தவர்களுக்கு
ஒன்றி எழுந்த = பின்னால் வந்த
பிழை நூறும் = நூறு பிழைகள் (தீமைகள்)
சான்றோர் பொறுப்பர்; = சான்றோர் பொறுத்துக் கொள்வார்கள்
கயவர்க்கு = கயவர்களுக்கு
எழுநூறு = 700
நன்றி செய்து = நல்லது செய்த பின்
ஒன்று தீதுஆயின் = ஒரு தீமை செய்து விட்டால்
எழுநூறும் தீதாய்விடும் = முன்பு செய்த எழு நூறையும் தீமை என்றே கருதுவார்கள்.
சரி, கயவர்கள் எப்படியோ போகட்டும். இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ?
முதலாவது பாடம், நாம் கயவர்களா ? நல்லவர்களா ? நல்லவர்கள் என்றால் மற்றவர்கள் நமக்குச் செய்த தீமைகளை அவர்கள் நமக்குச் செய்த நல்லவற்றை நினைத்து மன்னித்து விடவேண்டும்.
இரண்டாவது பாடம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ஆராய்ந்து பின் உதவி செய்ய வேண்டும். நாம் நல்லதே நினைத்து உதவி செய்வோம். ஏதோ ஒரு காரணத்தால் அது சரியாக வர வில்லை என்றால், உதவி பெற்றவன் கயவனாக இருந்தால், நாம் இது வரை அவனுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் தீமையாகவே கருதி நமக்கு துன்பம் விளைவிக்க நினைப்பான்.
மூன்றாவது பாடம், மற்றவர்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்கள் நமக்கு தீமை செய்தால், முன்பு செய்த நன்மைகளை நினைத்து , தீமைகளை மன்னித்து விட வேண்டும்.
பாவத்திலேயே பெரிய பாவம் என்று வள்ளுவர் எதை கூறுகிறார் தெரியுமா ? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊருக்கு தீ வைத்தல், பொது நீர் நிலையில் நஞ்சைக் கலத்தல் , குரு நிந்தனை என்று இதை எல்லாம் பெரிய பாவமாக கருதவில்லை. இதை எல்லாம் விட பெரிய பாவம் ஒருவன் நமக்குச் செய்த நன்றியை மறந்து விடுவது ஆகும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறந்து விடுவதைப் போல பெரிய தீமை இல்லை என்கிறார்.
எனவே, மற்றவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மறந்து மன்னித்து வாழப் பழகுவோம்.
No comments:
Post a Comment