Wednesday, November 29, 2017

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர்

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர் 


108 திவ்ய தேசங்களை பற்றி பிள்ளை பெருமாள் ஐயங்கார் அந்தாதி முறையில் பாடி அருளி இருக்கிறார்.

இறைவனைப் பாடலாம், அவன் பெருமைகளை பாடலாம். அவன் அடியார்களைப்  பாடலாம்.  அவன் கோவில் கொண்ட இடங்களைப் பற்றி பாட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ? எல்லா இடமும் ஒன்றுதானே.

ஒரு ஊரு, ஒரு கோவில், பக்கத்தில் ஒரு திருக்குளம் ....இதில் பாடுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்போம் .

பிள்ளை பெருமாள் ஐயங்கார் உருகி உருகி பாடி இருக்கிறார்.

அவ்வளவு அழகான எளிமையான பாடல்கள்.

இவற்றை படித்து அறிவதால் நமக்கு என்ன பலன் என்று கேட்டால் எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ?

இவற்றில் ஏதோ ஒரு அழகு, ஒரு வசீகரம், ஒரு ஊடாடும் இலயம் இருக்கிறது.

ரோஜா இதழின் மேல் இருக்கும் ஒரு பனித்துளியைப் போல, விரல் பிடிக்கும் குழந்தையின் ஸ்பரிசம் போல,  தனிமையில் நடக்கும் போது எங்கோ ஒலிக்கும் அந்த இனிய பழைய பாடல் போல...இந்த அந்தாதி மனதை வருடத்தான் செய்கிறது.

படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.


அந்தாதியை தொடங்குமுன், ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

நான்கு ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

அதில் , உடையவர் என்று போற்றப் படும் இராமானுஜர் மேல் பாடிய பாடலைப் பார்ப்போம்.


தித்திக்கும் பாடல்




வீட்டில் , பையன் வேகமாக ஓடி வருவான். வந்த வேகத்தில் நிலை தடுக்கி கீழே விழுவான்.

அம்மா "ஏம்பா பாத்து வரக் கூடாதா ? போன வாரம் தான இந்த மாதிரி ஓடி வந்து தடுக்கி விழுந்த...சரி சரி கால உதறு ...இனிமேலாவது பாத்து வா " என்று அன்போடு கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா ?


அந்த அன்போடு பிள்ளை பெருமாள் ஐயங்கார் நம்மிடம்  கூறுகிறார்.

இதற்கு முன் எத்தனை பிறவிகள் எடுத்து , பிறந்து இறந்து , பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் ஞாபகம் இல்லையா ? இனிமேலும் பிறவிகள் வேண்டாம் என்றால், ஒரு எளிய வழி இருக்கிறது.

எதிராஜன் என்ற இராமானுஜன் நாமத்தைச் சொல் என்கிறார்.



பாடல்

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி


பொருள் 


முன்னே = முன்பு

பிறந்திறந்து = பிறந்து இறந்து

மூதுலகிற் = மூதுலகில் , மூத்த இந்த உலகில், பழமையான இந்த உலகில்

பட்டவெல்லாம் = பட்ட துன்பமெல்லாம்

என்னே = எத்தனை எத்தனையோ

மறந்தனையோ = அவை அனைத்தையும் மறந்து விட்டாயா

வென்னெஞ்சே!- = என் நெஞ்சே. என் மனமே

சொன்னேன் = சொன்னேன்

இனி = இனிமேல் , இன்றிலிருந்து

எதிரா சன்மங்கள் = பிறவிகள் இனி மேல் வராது

ளின்றுமுதற் = இன்று முதல்

 பூதூர் = திருப்பூதுர்

முனியெதிரா சன் =முனி எதிராசன்

பேர் மொழி = பேரைச் சொல்


அதெப்படி, எதிராஜன் பேரைச் சொன்னால் பிறவி வராமல் போய் விடுமா ? என்று கேட்கலாம். 


கடலிலே போய் கொண்டிருக்கிறீர்கள். போகின்ற கப்பல் பாறையில் மோதி உடைந்து போகிறது. உங்களுக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வீர்கள் ?

அங்கே மிதக்கும் கட்டையை பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா ? அந்த கட்டை மிதந்து மிதந்து சென்று கரை சேரும் என்றால் , அதோடு சேர்ந்து நீங்களும் கரை சேர முடியும் அல்லவா ? நீச்சல் தெரியாவிட்டாலும், கட்டையை பிடித்துக் கொண்டால், கரை சேர்ந்து விடலாம். 

பிறவி என்ற பெருங்கடலை நம்மால் நீந்தி கடக்க முடியாது. 

பெரியவர்களின் வழி காட்டுதலாகிய தெப்பமே நம்மை கரை சேர்க்கும். 

எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். அதுவே பிறவி பெருங்கடலை கடக்க வழி. 

அடடா, இது தெரியாமல் இத்தனை நாள் வீணே பொழுதை கழித்து விட்டேனே என்று  வருத்தப் படாதீர்கள். 

பிள்ளை பெருமாள் சொல்கிறார், "இன்று முதல் எதிராஜன் பெயரை மொழி".

இத்தனை நாள் எப்படியோ போய்விட்டுப் போகட்டும். இன்றிலிருந்து தொடங்கு  என்கிறார். 

இன்னைக்கு விட்டுட்டு நாளை முதல் தொடங்கலாமா என்றால். இல்லை. இன்றிலிருந்து  தொடங்கினால், "ஜன்மங்கள் இனி எதிரில் வராது"

பிறவி பெரிய பிணி. இதை மற்றவர்கள் சொல்ல வேண்டாம். "நீயே எத்தனை முறை பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறாய் ...பட்ட பின்பும் அறிவு வரவில்லையா " என்று தன் மனதிடம் கேட்பதைப் போல நம்மிடம் சொல்கிறார். 


"சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி"

இப்போது தானே சொல்கிறார் , சொன்னேன் என்று இறந்த காலத்தை குறிக்கும் சொல்லால் கூறுகிறாரே என்றால், "நான் இப்போது மட்டும் சொல்லவில்லை, முன்பும் பல முறை கூறி இருக்கிறேன். நீ தான் கேட்காமல்  பல  பிறவிகள் எடுத்து துன்பப் படுகிறாய். இப்போதாவது கேள் " என்று கூறுவதைப் போல "சொன்னேன்" என்றார்.

இதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் எதிராஜனின் பேரைச் சொல். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறியும் ஆவல் வரும், பின் அவர் என்ன சொன்னார் என்று அறியும் ஆவல் வரும், பின் அவற்றை கடைபிடித்தால் என்ன என்று தோன்றும், கடை பிடிப்பாய் , உன் பிறவிப் பிணி போகும் ...எனவே எதிராஜன் பெயரைச் சொல்லி ஆரம்பி.

மற்றதெல்லாம் தானே நடக்கும்.


நமக்கு மறதி அதிகம். நடந்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது.  உள்ளுணர்வு கூர்மையாக இருந்தால் ஞாபகம் இருக்கும்.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் "

என்பார் மணிவாசகர்.

சடையவனே , தளர்ந்தேன் ,எம்பெருமான் என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கெஞ்சுவார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும் எழுத ஆசை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_29.html


5 comments:

  1. கவிதை அழகா அல்லது விளக்கம் அழகா என்று இருக்கிறோம். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். இந்தப் பாடல்களை அறிந்திருக்கவில்லை. இப்பொழுதாவது அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
    வாட்ஸ்-அப்-ல் பகிரலாமா?

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்கத்தானே எழுதுவது. நல்ல விஷயங்கள் நாலு பேரை சென்றடைந்தால் நல்லது தானே.

      Delete
  2. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே! இன்னும் இலையில் என்ன என்ன ருசிகரமான, நாவிலோ/மனதிலோ பிரியாத இனிப்புக்களை சாதிக்கப் போகிறீர்களோ என்கிற ஆவலுடன் காத்திருக்கிறேன். 108 திருப்பதிகளை பற்றி பெருமாள் அய்யங்கார் அனுபவித்து பாடியதை எழுதியதை உங்கள் வாயிலாக கேட்க காத்திருக்கிறேன்.
    இந்த கட்டுரையில் மனதில் நறுக்கென்று பட்ட இடம்
    “எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும்.”
    அருமையாக எழுதுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  3. அழகுபட சிற்றறிவிற்கு எட்டும் வகையில் எழுதுகிறீர்! தொடரட்டும் இந்த நற்பணி !!

    ReplyDelete
  4. சின்னப் பையன் ஓடி வருவது அருமையான உதாரணம்.

    இந்தப் பாடலை எழுதிய பெருமாள் ஐயங்கார் தன் மனதுக்கு எவ்வளவோ சொல்லி இருக்கிறார் போல இருக்கிறது. அதெல்லாம் உதவாமல் இப்போது ஒரு புது முயற்சி ஆரம்பிக்கிறார்!

    ReplyDelete