கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி
கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை, ஏதோ அதில் உள்ள கதைக்காக படிக்காமல்,அதில் உள்ள வாழ்வியல் பாடங்களுக்காக படித்ததால் நமது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தின் மிகப் பெரிய பாடம், எளியவர்களை ஏளனம் செய்யாதே என்ற பாடம் தான்.
மற்றவர்களை கிண்டல் பண்ணுவது,நக்கல், நையாண்டி போன்றவை செய்பவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கலாம். யாரை நக்கல் பண்ணுகிறார்களோ, பெரும்பாலான சமயங்களில், கிண்டல் பண்ணப்பட்டவரின் மனம் புண் படும் என்பதே உண்மை.
ஒருவரின் உடல்வாகைப் பற்றி, அவர்கள் பேச்சு பற்றி, அவர்கள் செய்த ஏதோ ஒரு தவறு பற்றி கிண்டல் பண்ணுவது எளிது. அதுவும் பலர் முன்னால், அப்படிச் செய்தால், நிச்சயம் அவர்கள் மனம் புண் படும்.
மனைவியை மற்றவர்கள் முன் விமர்சினம் செய்வது, வேலையாட்களை எள்ளி நகையாடுவது, கீழே வேலை பார்ப்பவர்களை கிண்டல் பண்ணுவது போன்றவை மற்றவர்களுக்கு வருத்தம் தரும் செயல் என்று நாம் உணர வேண்டும். என் மனைவியை கிண்டல் பண்ண எனக்கு உரிமை இல்லையா என்று மார்தட்டக் கூடாது. இல்லை. அவளின் மனதை புண் படுத்த அதிகாரம் இல்லைதான்.
இராமன், இராசா வீட்டு கன்னுக்குட்டி. அரண்மனையில் ஆடிப் பாடி சுதந்திரமாக திரிந்திருப்பான். அங்கே, கூனி அங்கும் இங்கும் செல்வதைப் பார்த்து இருப்பான். அம்பில் மண் உருண்டையை வைத்து, அவள் கூன் மேல் அடித்து விளையாடி இருக்கிறான். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. [பொழுது போக்கு. அவள் முதுகில் அடித்து விட்டு,கை கொட்டிச் சிரித்து இருப்பான்.
விளையாட்டுப் பிள்ளைதானே. அதுவும் மூத்த இளவரசன். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்.
ஆனால், அந்த வலி கூனிக்கு இருந்து கொண்டே இருந்தது.
அவள் சமயம் பார்த்து திருப்பி அடித்தாள். அந்த வலியை இராமானாலும் தாங்க முடியவில்லை. பின்னால், சுக்ரீவனிடம் சொல்லி அங்கலாய்க்கிறான்.
கூனி அடித்த அடி எப்படி இருந்தது ?
தயரதன் இறந்தான், இராமன் கானகம் போனான், இலக்குவன் மனவியைப் பிரிந்து கானகம் போனான். பரதன் மனவியைப் பிரிந்து 14 வருடம் அரசை விட்டு விட்டு , நந்திக் கிரமாத்தில் தவம் கிடந்தான். சீதை, இராவணனிடம் சிறை பட்டு துன்பம் அனுபவித்தாள்.
இராஜ குலத்தையே திருப்பி போட்டது, கூனியின் கோபம்.
இராமன், கூனியை அம்பால் அடித்த போது, யாராவது அவனுக்குச் சொல்லி இருக்க வேண்டும். "வயதானவர்களை, உடல் ஊனம் உற்றவர்களை இப்படிச் செய்யக் கூடாது. போ, போய் மன்னிப்பு கேள்" என்று சொல்லி இருக்க வேண்டும்.
அங்கே திருத்தாமல் விட்ட சின்ன தப்பு, எப்படி வளர்ந்து என்ன பாடு படுத்தியது? இராமன் நினைத்து இருப்பானா, இந்த கூனி எனக்கு வரும் அரசையே தடுத்து நிறுத்தி விடுவாள் என்று. இவளால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக இருந்திருப்பான்.
இப்பவும், வீட்டில் பிள்ளைகள் தவறு செய்வார்கள். மரியாதைக் குறைவாக பேசுவார்கள், மட்டு மரியாதை இல்லாமல் பேசுவார்கள், எளியவர்களை ஏளனம் செய்வார்கள். "ஆஹா, என் பிள்ளை எப்படி பேசுகிறான் பார்...அவங்க அப்பாவை அவன் குரங்குனு தான் சொல்லுவான், அவருக்கு அறிவே இல்லேனு அவர் முன்னாலேயே சொல்லுவான்" என்று பிள்ளையின் சாமர்த்தியத்தை பெருமிதப் படும் தாய்மார்கள், இராமனை நினைக்க வேண்டும்.
அப்பேற்பட்ட இராமனே அந்த பாடுபட்டான் என்றால், நம் பிள்ளை என்ன பாடு படுவானோ என்று பதற வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தால் உடனே அதை திருத்த வேண்டும். மாறாக, "அடடா, வேலைக்காரியின் பிள்ளையை விட்டான் பாரு ஒரு அடி" என்று சொல்லி மகிழக் கூடாது.
அரண்மைனையில் ஒரு வயதான கிழவிக்கு செய்த சின்ன தீங்கே இவ்வளவு பெரிதாக முடியும் என்றால், வீட்டில் கணவனை/மனைவியை/ பிள்ளைகளை/பெற்றோரை/ மாமனார்/மாமியாரை/ நண்பர்களை என்று யாரையுமே உதாசீனம் செய்யக் கூடாது.
யாருடைய அறியாமையையோ, இயலாமையையோ கண்டு ஏளனம் செய்யக் கூடாது.
பாடல்
தொண்டை வாய்க் கேகயன்
தோகை கோயில் மேல்
மண்டினாள், வெகுளியின்
மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன்
பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன்
உள்ளத்து உள்ளுவாள்.
பொருள்
தொண்டை = கோவை பழத்தைப் போல சிவந்த
வாய்க் = இதழ்களை உடைய
கேகயன் தோகை = கேகய மன்னன் மகள் (கைகேயி)
கோயில் மேல் = இருக்கும் அரண்மனைக்கு
மண்டினாள் = வந்து சேர்ந்தாள் (யார்? கூனி)
வெகுளியின் = கோபத்தால்
மடித்த வாயினாள் = உதட்தை கடித்துக் கொண்டு
பண்டை நாள் = முன்பு ஒரு நாள்
இராகவன் = இராமன்
பாணி = கை. பாணி என்றால் கை. பாணி கிரஹணம் என்றால் கையைப் பிடித்தல். சப்பாணி என்றால், சப் சப் என்று கையால் தாளம் போடுதல்
வில் உமிழ் = வில் உமிழ்ந்த
உண்டை = மண் உருண்டை
உண்டதனைத் = தன் மேல் பட்டு வலி உண்டாக்கியதை
தன் = தன்னுடைய
உள்ளத்து = மனதில்
உள்ளுவாள். = நினைப்பாள்
இராமன், பாடம் படித்தான் இல்லை. பின்னாளில், சூர்பனகையிடமும் கொஞ்சம் நக்கலும் நையாண்டியுமாக பேசி இருக்கிறான். அது அவனைப் புரட்டிப் போட்டது.
யாரையும் மனம் புண் படும்படி பேசவோ, செய்யவோ கூடாது.
வார்த்தைகளை பண் படுத்த படிக்க வேண்டும்.
மரியாதை, இனிமை, அடக்கம் இவற்றை எப்போதும் கை கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.
நல்ல பாடம் தானே?
https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_9.html
ரொம்ப அழகாக விளக்கி உள்ளீர்கள். நன்றி
ReplyDeleteமிக நல்ல விளக்கம். நன்றி.
ReplyDelete