இராமானுஜர் நூற்றந்தாதி - சுடரொளியால் இருளை துரத்தி
ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்கள் எது அறம், எது அறம் அல்லாதது என்று வழி தெரியாமல் தவித்து இருக்கிறார்கள்.
ஓரினத்தில் திருமணம் செய்து கொள்வது அறமா, அறம் அற்ற செயலா ?
பல பெண்களை மணந்து கொள்வது சரியா தவறா ?
மாமிசம் உண்பது சரியா, தவறா ?
சூதாடுவது சரியா, தவறா?
வட்டி வாங்குவது சரியா, தவறா ?
இப்படி பல குழப்பங்களில் மக்கள் தடுமாறி இருக்கிறார்கள். தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி, மக்கள் திசை தெரியாமல் தவிக்கும் போது, பெரியவர்கள் தோன்றி மக்களை வழி காட்டி இருக்கிறார்கள்.
திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்
"கடல் போல அஞ்ஞான இருள் உலகமெங்கும் சூழ்ந்து இருந்த போது, இராமானுஜர் மட்டும் வந்து நான்கு வேதத்தின் சாரத்தை எடுத்து அறிவொளி தந்து இருக்கா விட்டால், இந்த ஆன்மாக்களை உடையவன் நாராயணன் என்று யாருமே உற்று உணர்ந்து அறிந்து இருக்க மாட்டார்கள்"
பாடல்
கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.
பொருள்
கடலள வாய = கடல் அளவான
திசையெட்டி னுள்ளும் = திசை எட்டினுள்ளும்
கலியிருளே = கலி புருஷனின் இருள். அதாவது அஞ்ஞான இருள்
மிடைதரு காலத்தில் = அடர்ந்து இருந்த காலத்தில்
இராமா னுசன் = இராமானுஜன்
மிக்க = சிறந்த
நான்மறையின் = நான்கு வேதத்தின்
சுடரொளியால் = சுடர் ஒளியால்
அவ் விருளைத் = அந்த இருளை
துரத்தில னேல் = துரத்தி இருக்காவிட்டால்
உயிரை = உயிரை
உடையவன் = உடையவன்
நாரணன் = நாராயணன்
என்றறி வாரில்லை = என்று அறிவாரில்லை
உற்றுணர்ந்தே = உற்று உணர்ந்தே
முதலாவது, குழப்பத்தில் இருந்த மக்களை வழி காட்டி நடத்த அவர் வந்தார்.
இரண்டாவது, என்ன குழப்பம்? மக்களுக்கு புரியவில்லை. யார் இறைவன், யாரை வழிபடுவது போன்ற குழப்பங்கள். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்கின்றன. ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒரு மதம், மதத்துக்கு ஒரு கடவுள் என்ற குழப்பங்கள்.
மூன்றாவது, அவர் இருளை விலகினார். உடனே எல்லோருக்கும் புரிந்து விட்டதா? இல்லை. ஒரு அறையில் நல்ல புத்தகம் இருக்கிறது. ஆனால், அறை முழுவதும் ஒரே இருள். இராமானுஜர் வந்து விளக்கை ஏற்றி வைத்தார். புத்தகம் இருக்கிற இடம் தெரிகிறது. ஆனால், புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது நம் பொறுப்பு. "அறிவாரில்லை உற்று உணர்ந்தே" என்கிறார்.
அறியவும் வேண்டும். உணரவும் வேண்டும்.
அறிவது எளிது. உணர்வது கடினம்.
இரண்டையும் அடைய இராமானுஜர் ஞான ஒளி ஏற்றினார்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_28.html
நன்றி.நல்ல விளக்கம்.
ReplyDelete