Thursday, May 18, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. இந்த உலகம் மூன்று குணங்களின் தொகுதியால் ஆனது. சத்துவம், தாமசம், ராஜஸம் என்ற இந்த  முக்குண கூட்டே இந்த உலகு. உலகம் என்பது பொருள்களால் ஆனது என்று நாம் அறிவோம். காடு, மலை, கடல், மரம், செடி, கொடி, கல், மண் என்று அமைந்து இருக்கிறது. இந்த பொருட்கள் எல்லாம் குணங்களின் தொகுதியே. குணங்களை எடுத்து விட்டால் பொருள் என்று ஏதும் தனித்து இல்லை. அப்படி அமைந்தவற்றில் பதி , பசு, பாசம் என்பவை நிரந்தரமானவை. அவற்றுள் முதலான பதி பற்றி முதலில் கூறினார். 


வான்சிறப்பு - திருக்குறள் என்பது ஒரு அற நூல். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களைப் பற்றி கூறும் நூல். இந்த இரண்டு அறங்களும் செவ்வனே நடக்க வேண்டும் என்றால் மழை இன்றி அமையாதது. மழை இல்லாவிட்டால் எல்லா அறங்களும்  பாழ்பட்டு விடும் என்பதால், அதை கடவுள் வாழ்த்துக்குப் பின் கூறினார். 


நீத்தார் பெருமை - அறம் என்றால் என்ன? அது காலத்தோடு மாறுவது. அதை சரியானபடி எடுத்துச் சொல்ல ஆள் வேண்டும். இல்லறத்தில் இருப்பவனுக்கு ஆயிரம் நெருக்கடிகள். மனைவி, குழந்தைகள், உற்றார், உறவு, மேலதிகாரி, அரசாங்கம் என்று அவன் பயந்து வாழ வேண்டும். அவனால் தைரியமாக உண்மையை சொல்ல முடியாது. முற்றும் துறந்த துறவியால்தான் அறத்தை உள்ளது உள்ளபடியே கூற முடியும் என்பதால், முற்றும் துறந்தாரைப் பற்றி "நீத்தார் பெருமை" என்று அடுத்த அதிகாரத்தில் கூறினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


(please click the above link to continue reading)


"அறன் வலியுறுத்தல்" - அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வை நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்ளலாம். இதில் இன்பம்தானே எல்லோரும் விழைவது. அதை முதலில் கூறினால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கலாம். மக்களுக்கு ஒரு ஈர்ப்பு வரும் அல்லவா? இன்பத்துப் பாலை முதலில் சொன்னால் என்ன?  


அறம் என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தரும். 


பொருள் என்பது இம்மை, மறுமைக்கு இன்பம் தரும். வீடு பேற்றைத் தராது. 


இன்பம் என்பது இம்மைக்கும் மட்டும் நலம் பயக்கும். மறுமையும், வீடும் அதில் வராது. 


எனவே, இந்த மூன்றில் அதிகமான பபாலன் தரும் அறத்தை முதலில் சொல்லத் தொடங்கி, "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார்.  


"இல் வாழ்க்கை". வீடு பேறு வாழ்வின் நோக்கம். அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தில் அன்பு விரியும். விரிந்து கொண்ட போகும் அன்பு அருளாக மாறும். அருள் , துறையில் கொண்டு சேர்க்கும். துறவு வீடு பேற்றினைத் தரும் என்பதால், முதலில் இல்லறம் பற்றி கூறினார். 


"வாழ்க்கைத் துணை நலம்" , இல்வாழ்க்கை என்பது பொறுப்புகளும், கடமைகளும் நிறைந்தது. அவற்றை தனி ஒருவனாக ஒருவனால் செய்து முடிக்க முடியாது.  அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது தான் மனைவி. அவளின் சிறப்பு மற்றும் நன்மைகளை அடுத்து "வாழ்க்கை துணைநலம்" என்ற அதிகாரத்தில் கூறினார். 






2 comments:

  1. வணக்கம் அண்ணா . மகிழ்ச்சி

    ReplyDelete
  2. எப்போதும் போல் சிறப்பு

    ReplyDelete