கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி
(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)
போருக்கு முன்னால் இராவணனுக்கு ஒரு தூது விட வேண்டும் இராமன் கூறுகிறான்.
அதை மறுத்து இலக்குவன் கூறுகிறான்.
"இராவணன் அயோக்கியன். சீதையை சிறை பிடித்து வைத்து இருக்கிறான். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், அந்தணர்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை செய்து கொண்டிருக்கிறான். யாருக்கும் எதுவும் கொடுக்காமல் எல்லாம் தனக்கே என்று எடுத்துக் கொள்பவன். வழி அல்லாத வழியில் செல்பவன்" என்று கூறினான்.
பாடல்
தேசியைச் சிறையில் வைத்தான்;
தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
வழி அலா வழிமேல் செல்வான்.
பொருள்
(pl click the above link to continue reading)
தேசியைச் = தேசு என்றால் ஒளி. ஒளி பொருந்திய தேவியை
சிறையில் வைத்தான் = சிறையில் வைத்தான்
தேவரை = தேவர்களுக்கு
இடுக்கண் செய்தான் = துன்பம் செய்தான்
பூசுரர்க்கு = பூ உலகின் தேவர் போன்ற அந்தணர்களுக்கு
அலக்கண் ஈந்தான் = பல துன்பங்களை தந்தான்
மன்னுயிர் = நிலைத்த உயிர்களை
புடைத்துத் தின்றான்; = கொன்று தின்றான்
ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையால்
எல்லா = அனைத்து
உலகமும் தானே ஆள்வான் = அனைத்து உலகங்களையும் தானே ஆள்வான்
வாசவன் = இந்திரனின்
திருவும் கொண்டான் = செல்வங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டான்
வழி அலா வழிமேல் = வழி அல்லாத வழியில்
செல்வான் = செல்வான்
அது என்ன வழி அலா வழி?
பேசாமல் தீய வழி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே?
பெரியவர்கள் எப்போதும் உயர்ந்தவற்றையே நினைப்பார்கள். அவர்கள் வழி என்று சொன்னால் அது நல்ல வழி என்றுதான் கொள்ள வேண்டும்.
எனவே வழி அலா வழி என்பது தீய வழி.
ஒளவையார் "வழியே ஏகுக, வழியே மீளுக" என்றாள். நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம்.
நெறியல்லா நெறி என்பார் மணிவாசகர்.
நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
றார்பெறுவார் அச்சோவே
இராவணன் கொடியவன். ஏன் ?
இலக்குவன் மூலம் கம்பர் பட்டியல் இடுகிறார்.
1. மாற்றான் மனைவியை கவர்ந்தான்.
2. நல்லவர்களுக்கு தீமை செய்தான்
3. எல்லாம் தனக்கு என்று வைத்துக் கொண்டான். யாருக்கும் எதுவும் கொடுக்கும் மனம் இல்லை.
4. பேராசை. இருக்கின்ற செல்வம் போதாது என்று மேலும் மேலும் அலைந்தான்.
இவை எல்லாம் தீய குணங்கள். இந்தக் குணங்கள் இருப்பவர்கள் தீயவர்கள்.
நம்மிடம் இந்தத் தீக் குணங்கள் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.
[ ஒரு முன்னோட்டம்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html
கருணையின் நிலையம் அன்னான்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_30.html
அழகிற்றே யாகும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_7.html
]
No comments:
Post a Comment