திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும்
தீவினைகளை செய்து பழகியவர்கள் பயம் இல்லாமல் அவற்றைச் செய்வார்கள் என்றும், அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் தீயவை செய்ய பயம் கொள்வார்கள் என்றும் முந்தைய குறளில் கூறினார்.
தீயவை செய்தால் என்ன? தீயவை செய்பவர்கள் எல்லோரும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். இந்த பாவம், புண்ணியம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் ஒரு பலனும் இல்லை என்று சிலர் நினைக்கலாம்.
தீயவை செய்தால் என்ன நிகழ்ந்து விடும்? ஒரு கை பார்த்து விடலாம் என்று கூட சிலர் நினைக்கலாம்.
வள்ளுவர் சொல்கிறார், "தீயவை செய்தால் தீமையே வந்து சேரும் என்பதால், தீயவற்றை தீயை விட மோசமானது என்று எண்ண வேண்டும்" என்கிறார்.
பாடல்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_11.html
(pl click the above link to continue reading)
தீயவை - தீய வினைகள்
தீய பயத்தலால் = தீமை தருவதால்
தீயவை = அந்தச் தீச் செயல்கள்
தீயினும் = தீயைவிட
அஞ்சப் படும் = அச்சம் கொள்ள வைக்கும்.
அது என்ன தீயை விட?
தீ, சுட்ட போது வலிக்கும். போன வருடம் தீபாவளியின் போது வெடி வெடித்த போது கையை சுட்டுக் கொண்டாலும், அது இந்த வருடம் வலிக்காது. அது ஒரு சில நாள் இருக்கும், அப்புறம் போய் விடும். ஆனால், தீமை ஒரு காலத்தில் செய்தால் அது எப்போது வேண்டுமானாலும் வந்து சுடும். எப்போது சுடும் என்று தெரியாது. எப்ப வருமோ, எப்ப வருமோ என்ற வலி ஒருபுறம், பின் எதிர் பாராத நேரத்தில் வந்து தாக்கும் போது வலி பல மடங்காக இருக்கும்.
தீயால் சில சமயம் நன்மைகளும் உண்டு. உணவு சமைக்கலாம், குளிர் காயலாம். ஆனால், தீய செயல்களால் ஒரு காலத்திலும் ஒரு நன்மையையும் கிடையாது என்பதால் தீயினும் அஞ்சப்படும் என்றார்.
நாம் யார்க்கும் ஒரு தீங்கும் செய்து இருக்க மாட்டோம். ஒருத்தரைப் தவறாக பேசி இருக்க மாட்டோம். சட்ட திட்டங்களுக்கு பயந்து நடப்போம். இருந்தும் பெரிய துன்பங்கள் சில சமயம் நம்மை தாக்கியிருக்கும். ஏன்? என்றோ, எந்தப் பிறவியிலோ செய்த தீமை இந்தப் பிறவியில் வந்து தாக்குகிறது. தீ ஒரு பிறவியில் சுட்டால், அந்தப் பிறவியோடு போய் விடும். ஆனால், தீய வினைகள் மறு பிறவியில் கூட வந்து தாக்கும்.
தீமை செய்பவர்கள் நினைக்கலாம், தப்பிவிட்டோம் என்று. ஆனால், அறம் விடாது. எங்கு எப்படி திருப்பித் தர வேண்டுமோ, அப்படித் தரும்.
எனவே, தீயவை செய்ய அச்சம் கொள்ள வேண்டும். ரொம்ப பயப்பட வேண்டும்.
No comments:
Post a Comment