நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - கண் குத்திய கை
நண்பர்களாக இருக்கும் சிலர், சில சமயம், நமக்கு துன்பம் தரும் ஒன்றைச் சொல்லியோ அல்லது செய்தோ விடலாம்.
என்ன செய்வது அப்போது?
அவர்கள் நட்பே வேண்டாம் என்று துண்டித்து விடலாமா?
அல்லது
நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கிறார்கள், இது ஒன்று சரி இல்லைதான் இருந்தாலும், அவர்களால் பின்னும் நன்மை வரக் கூடும் என்று நினைத்து பொறுத்துப் போவதா?
நாலடியார் சொல்கிறது,
சில சமயம் நம் கை விரல் தெரியாமல் நம் கண்ணை குத்தி விடும். வலி உயிர் போகும். அதற்காக விரல் மேல் கோபித்து அதை வெட்டி எறிந்து விட முடியுமா? அப்படிச் செய்தால் அது புத்திசாலித்தனமா?
என்று.
பாடல்
இன்னா செயினும், விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ? துன்னு அருஞ்சீர்
விண் குத்தும் நீள் வரை வெற்ப!- களைபவோ,
கண் குத்திற்று என்று தம் கை?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_11.html
(pl click the above link to continue reading)
இன்னா செயினும் = (நமக்கு) துன்பம் தருவன செய்யினும்
விடுதற்கு அரியாரைத் = விட முடியாதவரை, விடுவதற்கு கடினமானவரை
துன்னாத் = கூடாமல், சேர்ந்து இருக்காமல்
துறத்தல் = துறந்து விடுவது, விட்டு விடுவது
தகுவதோ? = சரியானதா? (இல்லை)
துன்னு = நெருங்கிய, அடர்ந்த
அருஞ்சீர் = அருமையான, அழகான, சிறப்பான
விண் குத்தும் = வானத்தை குத்துவதைப் போல
நீள் = நீண்ட (மூங்கில் மரங்கள் நிறைந்த)
வரை = மலை
வெற்ப!- = தலைவனே
களைபவோ = வெட்டி எடுத்து தூர எறிந்து விடுவோமா?
,
கண் குத்திற்று = கண்ணை குத்திற்று
என்று தம் கை? = என்று நம் கையை?
சில சமயம் பல் நாக்கைக் கடித்து விடும். அதற்காக எல்லா பல்லையும் பிடுங்கி எறிந்து விட முடியுமா?
நட்பு, உறவு என்றால் சில பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த பொறுமையில் பல நன்மைகள் உண்டு.
கண்ணைக் குத்தியது என்று விரலை எடுத்து விடாமல் இருந்தால், அந்த விரலால் மேலும் பல பயன்கள் கிடைக்கும். நீக்கி விட்டால் நட்டம் நமக்குத்தான்.
No comments:
Post a Comment