Monday, August 14, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை 


அன்புப் பெருக்கமே இல்லறம் என்று சிந்தித்தோம். தன் வீடு, சுற்றம், நட்பு தாண்டி, தான் வாழும் சமுதாயத்துக்கு ஒருவன் செய்யும் உதவிகள் ஒப்புரவறிதல் எனப்படும். 


ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்துகிறான் என்றால், அவன் அன்பு நாளும் விரிந்து சமுதயாத்தின் மேலும் அவன் அன்பு செலுத்த நினைப்பான்.


அதில் முதல் குறள் 


உலகுக்கு மழை தந்து உதவும் அந்த மேகங்களுக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?


பாடல் 


 கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ வுலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_14.html


(pl click the above link to continue reading)


கைம்மாறு = பிரதிபலன், 


வேண்டாக் = வேண்டாத, விரும்பாத, எதிர்பார்க்காத 


கடப்பாடு = கடமையாக 


மாரிமாட்டு = மழைக்கு 


என்ஆற்றும் = என்ன செய்யும் 


கொல்லோ = கொல் என்பது அசைச் சொல். அதாவது பொருள் இல்லாத, இலக்கணத்தை சரி செய்யும் ஒரு சொல். 


 வுலகு = இந்த உலகம் 


மழை இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த மழையைத் தரும் மேகத்துக்கு இந்த உயிர்கள் என்ன நன்றியைச் திருப்பிச் செய்கின்றன?


யாராவது அவர்கள் வீட்டில், ஒரு மேகத்தின் படத்தை வைத்து பூஜை செய்கிறார்களா? மேகத்துக்கு ஒரு திருவிழா உண்டா?  பொங்கல், தீபாவளி போல் ஒரு சிறப்பு நாள் உண்டா? 


மேகம் ஏதோ ஒரு இடத்தில் இருந்து பெய்வது கிடையாது. அங்கும் இங்கும் அலைகிறது. அங்கு போய் பெய்கிறது. பின் ஓடிச் சென்று இன்னொரு இடத்தில் பெய்கிறது. உலகம் அனைத்தையும் உயிர் வாழச் செய்கிறது. 


அது மட்டும் அல்ல, மேகம், அது ஏதோ அதன் கடமை போலச் செய்கிறது. 


அது போல, ஒப்புரவு செய்பவன், யாராவது வந்து என்னிடம் கேட்டால் செய்வேன் என்று இருக்கக் கூடாது. இந்த சமூகத்துக்கு என்ன தேவை என்று அங்கும் அலைந்து சென்று, அறிந்து செய்ய வேண்டும். 


அது அவன் கடமை. 


அவன் கடமை என்றால் ஏதோ அவன் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


அது நம் கடமை. 


இல்லறம் நல்ல படியாக நடந்தால், அன்பு தானே பெருகும். 


எங்கே பெருகுகிறது?


கணவன் மனைவிக்கு நடுவில், யார் பெரியவர், எந்த வேலையை யார் செய்வது என்று சண்டை. உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஆணவம் கொள்ளும் பிள்ளைகள், முதியோர் இல்லங்களும், குழந்தை காப்பகங்களும் (Creche) நிறைந்து வரும் இந்நாளில் ஒப்புரவு பற்றி பேசுவது கூட கடினம். 


அண்ணன் தம்பிக்குள் சண்டை, கணவன் மனைவிக்குள் சிக்கல், பெற்றோர் பிள்ளைகளுக்குள் கருத்து, மன வேறுபாடு...இல்லத்திலேயே அன்பு இல்லை. பின் எப்படி அது சமுதாய தோட்டத்துக்குப் பாயும். 


சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்று குடும்பம் என்பது ஒரு போராட்ட களமாக மாறிவிட்டது. 


இருந்தாலும், அன்பின் நீட்சி பற்றி வள்ளுவர் சொல்லி இருப்பதை அறிந்து கொள்வோம். அதை விட்டு நாம் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று தெரியும். 


மீண்டும் அந்த அன்புப் பாதைக்கு செல்ல முயற்சி செய்யலாம். 





1 comment: