திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும்
நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் யாரைப் போய் பார்ப்போம்? மருத்துவரை அணுகுவோம்.
படிக்க வேண்டும் என்றால்? ஆசிரியரை அணுகுவோம்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் அந்தத் துறையில் திறமை உள்ளவர்களை அணுகுவோம் அல்லவா?
முக்தி அடைய?
முக்தி அடைய யாரை அணுக வேண்டும்?
யாரை அணுக வேண்டும் என்பது கூட இரண்டாவது பட்சம். யாரை அணுகக் கூடாது என்று தெரிய வேண்டும் அல்லவா?
பல் வலிக்கு கண் மருத்துவரை பார்த்தால் என்ன ஆகும்?
மணிவாசகர் சொல்கிறார்
"எனக்கு முக்தி அடைய ஆசை. ஆனால், முக்தி அடையும் வழி எது என்றே தெரியாத முட்டாள்களோடு நான் சேர்ந்து திரிந்து கொண்டிருந்தேன். நான் எந்தக் காலத்தில் முக்தி அடைவது? நல்ல வேளை நீ (சிவ பெருமான்) வந்து எனக்கு பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகளை அறுத்து, என் புத்தியில் உள்ள குற்றங்களை எல்லாம் போக்கி, என்னையும் உன் போல் ஆக்கினாயே , உன்னைப் போல கருணை செய்யக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் "
என்று ஆச்சரியப் படுகிறார்.
நாம என்ன செய்து விட்டோம், இந்த சிவன் நமக்கு இவ்வளவு உதவி செய்கிறானே என்று ஒரு ஆச்சரியம்.
பாடல்
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_26.html
(please click the above link to continue reading)
முத்தி = முக்தி
நெறி = வழி. முக்தி அடையும் வழி
அறியாத = எது என்று அறியாத
மூர்க்கரொடும் = முரடர்களோடு
முயல்வேனை = முயற்சி செய்யும் என்னை
பத்தி நெறி = பக்தி என்ற நெறியைக்
அறிவித்து = அறியத் தந்து
பழ வினைகள் = என்னுடைய பழைய வினைகள் யாவும்
பாறும்வண்ணம் = பாறுதல் என்றால் அழித்தல், சிதற அடித்தல்
சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தில் உள்ள மலங்களை (குற்றங்களை) நீக்கி
சிவம் ஆக்கி =சிவத் தன்மையை தந்து
எனை ஆண்ட - என்னை ஆட்கொண்ட
அத்தன் = அத்தன்
எனக்கு = எனக்கு
அருளிய ஆறு = அருள் செய்த மாதிரி
ஆர் பெறுவார்? அச்சோவே! = வேறு யாரு செய்வார்கள், அச்சச்சோ ...
முதலில், முக்தி அடைய வேண்டும் என்றால் அது அடையும் வழி தெரிந்தோரை அணுக வேண்டும். அல்லாமல், அது தெரியாத ஆட்கள் பின்னால் போகக் கூடாது.
அடுத்து, பக்தி நெறியில் போனால் முக்தி கிடைக்கும். இறைவன் மணிவாசகருக்கு பக்தி நெறியை காட்டினான். சைவ சமயத்தில் மணிவாசகரை ஞான மார்கத்தின் தலைவர் என்று கொண்டாடுவார்கள். ஞானத்தில் பக்தி.
அடுத்து, பக்தி நெறியில் சென்றால், பழைய வினைகள் அறுபடும். தொடராது.
அடுத்து, மிக முக்கியமானது, சித்தத்தில் உள்ள குற்றங்கள் (மலம்) தெளிந்தால், சீவன் சிவமாகி விடும். தெளிவித்து என்றார். நீக்கி என்று சொல்லவில்லை. சித்தம் சலனப்பட்டு கிடக்கிறது. அது சலனம் இல்லாமல் இருந்தால், தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்துவிட்டால், சீவன், சிவமாம் தன்மை பெறும் என்கிறார்.
அடுத்து, அத்தன் எனக்கு அருளியவாறு என்கிறார். நானே படித்துத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. அவன் அருளாலே கிடைத்தது என்கிறார்.
அதாவது, மூடர்கள் தொடர்பை விட்டு, நல்லோர் தொடர்பைப் பற்றி, இறைவனை நாடினால், அவன் பக்தி நெறியில் நம்மை செலுத்தி, நம் பழைய வினைகளை மாற்றி, சித்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சிவமாம் தன்மை தருவான் என்பது தெளிவு.
No comments:
Post a Comment