நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே
அவன் போர் முடிந்து அவன் காதலியை தேடி வருகிறான்.
அவன் உயிர் எல்லாம், மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே சென்று அடைந்து விட்டது.
அவன் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.
அவ்வளவு அவசரம்.
மேலே பார்க்கிறான். மேகங்கள் வேகமாக செல்வது போல் தெரிகிறது.
நமக்கு முன்னால் இந்த மேகங்கள் சென்று விடும் போல் இருக்கிறது, இந்த மேகங்களிடம் நாம் வரும் சேதியையை சொல்லி அனுப்பலாம் என்று அவைகளிடம் சொல்கிறான்
"ஏய், மேகங்களே, ஓடாத தேரில் , ஒரு உயிர் இல்லாத வெறும் உடம்பு மட்டும் வருகிறது என்று என் காதலியிடம் சொல்லுங்கள்" .
அப்புறம் யோசிக்கிறான்.
இந்த மேகங்கள் எங்கே அவளை கண்டு பிடிக்கப் போகின்றன. அதுகளுக்கு ஆயிரம் வேலை, நம்ம வேலயத்தானா செய்யப் போகின்றன என்று ஒரு சந்தேகம் ..."அவளைப் பார்த்தால் சொல்லுங்கள்" என்று முடிக்கிறான்.
அந்த இனிமையான பாடல்....
ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்
கூடு வருகுதென்று கூறுங்கள்-நாடியே
நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்''
ஓடுகிற மேகங்காள்! = ஓடுகின்ற மேகங்களே (தன்னை தவிர எல்லாம் வேகமாக போவது போல் தெரிகிறது அவனுக்கு)
ஓடாத தேரில் = ஓடாமல் இருக்கின்ற தேரில் (தேர் என்னவோ ஓடுகிறது. அவனுக்கு அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது போல் தெரிகிறது)
வெறும் கூடு வருகுதென்று கூறுங்கள் = உயிர் அற்ற ஒரு உடல் மட்டும் வருகிறது என்று சொல்லுங்கள். (உயிர் தான் அவளிடம் முன்னமேயே சென்று விட்டதே)
நாடியே = அவளை நாடி
நந்திச்சீ ராமனுடை = நந்தி வர்மனின்
நல்நகரில் = நல்ல ஊரில்
நல்நுதலைச் = அழகிய நெற்றியையை உள்ள அவளை
சந்திச்சீர் ஆமாகில் தான் = பார்த்தால் சொல்லுங்கள் (தன் சேதி போய் சேருமோ சேராதோ என்று சந்தேகம் வேறு...)
No comments:
Post a Comment