நந்திக் கலம்பகம் - தழுவாத போது....
அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."
நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....
அந்த இனிய பாடல், உங்களுக்காக...
செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்'
செந்தழலின் = சிவந்த தீயின்
சாற்றைப் பிழிந்து = வெம்மையை பிழிந்து எடுத்து
செழுஞ்சீதச் = செழுமையான குளிர்ந்த
சந்தனமென் றாரோ = சந்தனம் என்றும் யாரோ
தடவினார் = என் மேல் தடவினார்கள்
பைந்தமிழை = பசுமையான தமிழை
ஆய்கின்ற = ஆராய்ச்சி செய்கின்ற
கோன்நந்தி = அரசனான, தலைவனான நந்தி வர்மனின்
ஆகம் = அகம், மேனி
தழுவாமல் = கட்டி அணைக்காமல்
வேகின்ற பாவியேன் மேல் = வேகின்ற பாவியாகிய என் மேல்
சந்தனம் நெருப்பு போல் இல்லை, அது நெருப்பேதான் என்பது சுவையானது.
ReplyDelete