வில்லி பாரதம் - யார் அறிவார், ஆதி மூர்த்தி
எல்லாம் அவன் செயல் என்று எல்லோரும் சொல்கிறோம்.
நம்புரோமா ?
நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பு நமக்கு.
வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசமும் முடிந்து விட்டது.
துரியோதனன் ஆட்சியை தருவதாய் இல்லை.
கிருஷ்ணன் தூது போவதாய் ஏற்பாடு.
துரியோதனனிடம் என்ன கேட்க வேண்டும் என்று சர்ச்சை.
தர்மன் உட்பட எல்லோரும் ஒவ்வொன்று சொன்னார்கள்.
கடைசியில் சகாதேவன் முறை.
எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று உண்மையாக அறிந்தவன் அவன்தான்.
அவன் கிருஷ்ணனிடம் சொல்கிறான்....
"நீ தூது போனால் என்ன ? போகாவிட்டால் என்ன ?
துரியோதனன் நிலம் தந்தால் என்ன ? தராவிட்டால் என்ன ?
பாஞ்சாலி குழல் முடித்தால் என்ன ? முடியாவிட்டால் என்ன ?
என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு என்ன தெரியும்...எல்லாம் உனக்குத் தான் தெரியும்...தூது போவது என்று நீ முடிவு பண்ணி விட்டாய்...என்னிடம் ஏன் கேட்கிறாய்"
சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
தெரியுமோ?-ஆதி மூர்த்தி!
சிந்தித்தபடி = முன்பே சிந்திந்து முடிவு செய்தபடி
நீயும் சென்றால் என்? = நீ தூது போனால் என்ன ?
ஒழிந்தால் என்? = போகாவிட்டால் என்ன ?
செறிந்த = அடர்ந்த
நூறு மைந்தர்க்குள் = நூறு பிள்ளைகளுள்
முதல்வன் = மூத்தவன் (துரியோதனன்)
நிலம் = ஆட்சியை
வழங்காமல் இருந்தால் என்? = கொடுக்காமல் இருந்தால் என்ன ?
வழங்கினால் என்? = கொடுத்தால் என்ன ?
கொந்துற்ற குழல் = கொத்தாக உள்ள குழலை
இவளும் முடித்தால் என்? = இவள் முடித்தால் என்ன ?
விரித்தால் என்? = முடியாமல், விரித்தே வைத்தால் என்ன ?
குறித்த செய்கை = நீ குறித்த செயல்களை
அந்தத்தில் முடியும்வகை = கடைசியில் முடியும் விதம்
அடியேற்குத் தெரியுமோ? = எனக்கு தெரியுமா (தெரியாது)
ஆதி மூர்த்தி! = எல்லாவற்றிற்கும் மூலமாணவனே
நல்ல பாடல். இதைப் படித்தால் எனக்குப் பல வருடங்கள் முன்பு படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது. பாண்டவர்கள் கூடி ஆலோசனை செய்யும்போது முதலில் சகாதேவனைத்தான் கேட்டார்கள். ஏனென்றால் முதலில் சிறியவர்களைத்தான் கேட்க வேண்டுமாம். அப்போதுதான் பெரியவர்களுக்குப் பயப்ப்டாமல் அவர்களால் பேச முடியுமாம். எனக்கு இது மிகவும் பிடித்தது.
ReplyDeleteதெரியும்(ஓ) ஆதிமூர்த்தி......
ReplyDeleteஇரண்டு அர்த்தங்கள் வரக்கூடிய பாடல்....
எனக்கும் முக்காலமும் தெரியும் என்று சகா தேவன் கூறுகின்றார்.ஏனென்றால் சகாதேவன் ஒரு ஞானி. நீ நினைத்தபடி யுத்தத்தை நடத்திக்கொள் என்று கிருஷ்ணரிடம் மற்றவர்களுக்கு தெரியாமல் சொல்கின்றார்....