நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும்
நான் சில பல ஊர்களில் கடைத் தெருவில் பார்த்திருக்கிறேன்...ஏதேதோ கடைகள் இருக்கும்...ஒரு நல்ல புத்தக கடை இருக்காது....இருந்தாலும் ஏதோ பேருக்கு சில புத்தகங்கள் இருக்கும்.
என்ன அர்த்தம்...ஊரில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.
நள சக்கரவர்த்தி ஆளும் ஊரை வர்ணிக்கிறார் புகழேந்தி.
அந்த ஊரில் தெரிவது எல்லாம் புத்தகங்களும், படிப்பவர்களும் தான். எங்கு பார்த்தாலும் ஒரே புத்தகங்கள்.
தெரியாதது ஒன்று இருக்கிறது அந்த ஊரில்...அது பெண்களின் இடையாம்.....தேடினாலும் கிடைக்காது....அவ்வளவு சின்ன இடை.
அந்த ஊரில் இல்லாதாது ஒன்று உண்டு - பிச்சைகாரர்கள். பிச்சைக்காரர்களே கிடையாது.
அந்த ஊர் மக்கள் ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக் கொள்ளவில்லை - அது தான் வஞ்சம்.
பாடல்
தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.
பொருள்
தெரிவனநூல் = எங்கும் தெரிவது நூல்கள், புத்தகங்கள். புத்தகத்திற்கு ஏன் நூல் என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா ?
என்றும் தெரியா தனவும் = எங்கேயுமே தெரியாதது
வரிவளையார் தங்கள் மருங்கே = வளையல் அணிந்த பெண்களின் இடுப்பே
ஒருபொழுதும் = எப்போதும்
இல்லா தனவும் இரவே = இல்லாதது பிச்சை (இரத்தல் = பிச்சை பெறுதல்)
இகழ்ந்தெவரும் = இகழ்ந்து எவரும்
கல்லா தனவும் கரவு = கற்றுக் கொள்ளாதது வஞ்சம்.
இனிமையான கற்பனை.
ReplyDelete