இராமாயணம் - நெறியின் புறம் செல்லா
இராமாயணம் படிப்பவர்களும், சொல்பவர்களும் பொதுவாக அதன் கதை போக்கு, கதை மாந்தர் பற்றி படிப்பார்கள், சொல்லுவார்கள்.
ஊர் வர்ணனை பற்றி யாரும் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை. என்ன வர்ணனை தானே, அதை படிக்காவிட்டால், சொல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்....கதையின் போக்குக்கு இவை ஒரு முட்டு கட்டை என்று நினைப்பாரும் உண்டு.
ஊர் வர்ணனை, அங்கு ஓடும் ஆறு, குளம், ஏறி, வீடு வாசல்கள், பொது மக்கள் இவை பற்றிய குறிப்புகள் மிக சுவாரசியமானவை.
இன்னும் சொல்லப் போனால் கதையின் சில சூட்சுமங்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.
என்ன, கொஞ்சம் பொறுமையும், நேரமும் வேண்டும்....நிதானமாக படிக்க வேண்டும்.
கோசல நாடு.
கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விழையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.
அந்த ஊரில், சில விஷயங்கள் நெறி பிறழாமல் இருக்கின்றன.
அவை எவை ?
மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள். அவை தூண்டும் ஆசைகள். கோசலத்தில் சலனம் தரும் ஐம்புலன்களும் நெறியில் நின்றன.
எல்லை தாண்டாமல் ஒரு கட்டுக்குள் இருந்தன.
புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும். பாய்கின்ற அம்பு இலக்கை தைக்கும். விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது. ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால். விட்டால், பிடிக்க முடியாது என்பதால். வேகமாக செல்வதால்.
எல்லோருக்கும் ஐம்புலன்களும் சலனம் தந்தாலும், பெண்களுக்கு கண்கள் ஒரு படி மேலே. அலை பாயும். மயக்கும். ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும். உயிர் உண்ணும் கண்கள் என்பார் வள்ளுவர்.
பெண்களின் கண்களும் ஒரு நெறியில் நின்றன. பெண்களின் கண்கள் நெறியில் நிறக்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.
பாடல்
ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:
பொருள்
ஆசலம் = சலம் என்ற சொல்லுக்கு நடுக்கம், உதறுதல், அலைபாயுதல் ( Trembling, quivering, wavering; ) என்று பொருள். ஆ + சலம் மிகுந்த, அல்லது பெரிய சலம். புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். விளக்கிருக்க தீ தேடும் மனம்
புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற
ஐம் பொறி = ஐந்து பொறிகளான
வாளியும் = அம்புகளும்
காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட (அலம்ப). காசும் பிறப்பும் கலகலப்பக் என்பது திருப்பாவை.
(கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் )
முலையவர் = மார்பங்களை உடையவர் (பெண்கள்)
கண் எனும் = கண்கள் என்ற
பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும். பூசல் என்பதற்கு பூஜைக்குரிய என்று ஒரு பொருளும் உண்டு என்றாலும் வாளி , அலை பாயும் என்று பேசும் இந்த இடத்தில் அது அவ்வளவாக பொருந்தாது
நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத
கோசலம் = கோசலம் என்ற ஊரின்
புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை (river ) அணியாக அணிந்த நிலை கூறுவாம். அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.
ஊர் வர்ணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கம்.
அதிலும் வாழ்வியலை படம் பிடிக்கிறான் கம்பன்.
இத்தனை நாள் இதை எல்லாம் அறியாமலே இருந்து விட்டோமே என்று கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது.
இப்படி ஒரு புதையலை நம் சந்ததிகள் அறியாமலே போய் விடுவார்களோ என்று கவலையாகவும் இருக்கிறது.
உண்மைதான் - ஊர் வர்ணனையில் கூட இத்தனை நுணுக்கம்!
ReplyDelete