திருக்குறள் - புருவம்
துன்பங்கள் பலவகை.
உடல் உபாதை, பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல துன்பங்கள். இவற்றை கண்டு நாம் நடுங்குவது இல்லை. ஆனால், அவளோட கண்கள் இருக்கே, அதைப் பார்த்தால் நடுக்கம் வருகிறது. உடல் உதறுகிறது.
கூற்றுவனை நேரில் பார்த்தால் நடுக்கம் வருமா, வராதா ?
அவளோட கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாது. உயிரை உண்டு விடும் கண்கள் அவை.
அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வையை சற்று விலக்கி மேலே பார்க்கிறேன்.
அந்த புருவம். ஐயோ. அது அந்த கண்ணை விட கொடியதாய் இருக்கிறதே.
நல்லது செய்யணும் என்ற எண்ணமே கிடையாது அந்த புருவங்களுக்கு.
நல்லது செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் ? நேராக இருக்க வேண்டும், வளையாமல் இருக்க வேண்டும். அந்த புருவம் இருக்கிறதே என்னமா வளைந்து இருக்கிறது. பாத்தாலே தெரியுது, இது ஒண்ணும் சரி இல்லை என்று.
இந்த புருவம் மட்டும் வளையாமல் நேரா இருந்திருந்தா, இவளோட கண்கள் இப்படி நான் நடுங்கும் துன்பத்தை தந்து இருக்காது.
அவளுடைய புருவத்தில் நிறைய முடி இருக்கிறது. ஆனால் எல்லாம் குட்டி குட்டியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாக வளர்ந்து, அவளுடைய கண்ணை கொஞ்சம் மறைத்தால், எனக்கு இந்த நடுக்கம் குறையும்ல....
மொத்தத்தில் அவளுடைய கண்ணும் புருவமும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணுகின்றன என்கிறார் வள்ளுவர்
பாடல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
பொருள்
கொடும் புருவம் = கொடுமையான புருவம்
கோடா = கோடாமல் , வளையாமல் (நேரா இருந்தால்)
மறைப்பின் = மறைத்தால் (கண்ணை மறைத்தால், அவற்றின் முடி கொஞ்சம் நீண்டு வளர்ந்து கண்ணை மறைத்தால்)
நடுங்கஞர் = நடுங்கு + அஞர் = நடுங்கும் துன்பம்
செய்யல = செய்யாது
மன்இவள் கண் = இவளோட கண்கள்
அருமையான கற்பனை!
ReplyDelete