Pages

Saturday, June 4, 2022

திருக்குறள் - ஒட்ட ஒழுகல்

திருக்குறள் - ஒட்ட ஒழுகல் 


திருக்குறளை படிக்கும் போது, அடேயப்பா, எவ்வளவு இருக்கிறது இந்த ஒரு குறளில் என்று தோன்றும். இதற்கும் மேல் என்ன சொல்லிவிட முடியும் என்று அடுத்த குறளுக்குள் போனால், அது முன்னதைவிட பல மடங்கு ஆழமாகவும், விரிவாகவும் இருக்கும். 


அப்படிப்பட்ட ஒரு குறள்தான் நாம் இன்று காண இருப்பது. 


ஒழுக்கம், ஒழுக்கம் என்று சொல்கிறோமே...யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் இலஞ்சம், பொய், புரட்டு, ஏமாற்று, ,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், என்று ஒழுக்கமின்மை தான் தலைவிரித்து ஆடுகிறது. 


யாரையும் நம்ப முடியவில்லை. தலைவர்கள், நீதி சொல்பவர்கள், ஆசிரியர்கள், துறவிகள், படித்தவர்கள் என்று யாரையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை. இவன் என்ன தவறு செய்து விட்டு வந்து இங்கு உக்கார்ந்து இருக்கிறானோ என்றுதான் நினைக்க முடிகிறது. 


இந்த ஒழுக்கம் இன்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் ஒழுக்கமாக இருந்து என்ன பலன். அல்லது இருக்கத்தான் முடியுமா?


வள்ளுவர் சொல்கிறார் 


"உலகத்தோடு ஒன்றி வாழத் தெரியாதவர்கள், பல கற்றும் அறிவில்லாதவர்கள்" என்று. 


இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தால், நாமும் ஒழுக்கம் அற்றவர்களாகி விட மாட்டோமா? வள்ளுவர் ஏன் அப்படி சொல்கிறார். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்தக் குறளை தவறாக புரிந்து கொண்டு, சரி தான் கலி காலத்தில் உலகம் இப்படிதான் இருக்கும்ம், நாமும் அதே போல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று எண்ணிக் கொண்டு தவறான வழியில் செல்ல முற்பட்டு விடுவோம். 


பரிமேலழகர் வள்ளுவருக்கு ஞாயம் செய்கிறார். 


எப்படி என்று பார்ப்போம். 


பாடல் 



உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html


(pl click the above link to continue reading)


உலகத்தோடு = இந்த உலகத்தோடு 


ஒட்ட ஒழுகல் = சேர்ந்து வாழ்வதை 


பலகற்றும் = நிறைய படித்தாலும் 


கல்லார் = படிக்காதவர்கள் 


அறிவிலா தார் = அறிவில்லாதவர் 


சொற்களை கொஞ்சம் இடம் மாற்றினால், சரியாக விளங்கும். 




உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  கல்லார்


பலகற்றும்  அறிவிலா தார்


என்று வாசித்தால் பொருள் நேராக விளங்கும். 


இருந்தும், நாம் முதலில் கேட்ட கேள்விவ்க்கு இன்னும் விடை வரவில்லை. 


பரிமேலழகரின் உரை, நாம் எண்ணியும் பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறது. 


இங்கே, உலகம் என்பது நல்லவர்களை, சான்றோரை.  அயோக்கியர்களை அல்ல. எந்த காலகட்டத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், தீயவர்களும் இருப்பார்கள். நாம் யாரைப் பார்த்து படிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை பார்த்து. ஆனால், பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், கல்வி அறிவு இல்லாதவன், ,ஒழுகக் குறைவு உள்ளவன், அனுபவம் இல்லாதவன் சொல்வதைக் கேட்டு நடப்பது தான் நடக்கிறது. 


காரணம், கற்றவர்கள், அறிஞர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை. முட்டாள்கள் மேடை போட்டு பேசுகிறார்கள். அதனால் அவர்கள் பேசுவது தான் சத்தமாக கேட்கிறது. 


இரண்டாவது, நல்லவன் யார், சான்றோன் யார் என்று இனம் காண முடியாமல் உலகம் தவிக்கிறது. யாரைக் கை காட்டுவது? அவரைப் போல் வாழ் என்று யாரைக் காட்ட முடியும்? 


மூன்றாவது சிக்கல் என்ன என்றால், நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று உலகம் கொண்டாடியவர்களை எல்லாம் அவன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, அவன் செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா என்று அவர்களை கீழே இறக்குவதில் ஒரு கூட்டம் முயன்று கொண்டு இருக்கிறது. என்னால் அந்த உயரத்துக்குப் போக முடியாது என்பதால், அவர்களை என் நிலைக்கு தாழ்த்துகிறேன் என்று கிளம்பி விட்டார்கள். 


இந்த சோகம் நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, ,உயர்ந்து நூல்களுக்கும் நிகழ்கிறது. 


அடுத்தது, "ஒழுகல்" என்றார். ஒழுகல் வாழ்தல், கடைபிடித்தல் என்று அர்த்தம். "உலகோடு ஒழுகல்" என்றால் நல்லவர்களை பின்பற்றி வாழ்வது என்று அர்த்தம். 


அடுத்தது, நல்லவர்கள் கண்ணிலேயே காணோம். எங்கு பார்த்தாலும் அயோக்கியர்கள் கூட்டமாகத் தான் இருக்கிறது. எங்கே ஒரு நல்லவனை காண்பியுங்கள் என்றால் சங்கடம் தான். அப்படியே கண்டு பிடித்தாலும், அவருடைய வாழ்கை முறை வேறாக இருக்கும். நம்மால் அவர் வாழ்கை முறையை கையாள முடியாது. 


உதாரணமாக, ஒரு சிறந்த மருத்துவர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார். ஆனால், நான் மருத்துவன் இல்லையே. நான் எப்படி இலவச மருத்துவம் செய்ய முடியும் என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார் "ஒட்ட" ஒழுகல் என்கிறார். அதாவது, பொருந்தும்படி வாழ்வது. அவர், அவர் சார்ந்த துறையில் பலருக்கு உதவி செய்கிறார் என்றால், நாம், நம் துறையில் அது போல செய்ய வேண்டும் என்கிறார். 


சரி சார், அப்படி ஒரு நல்லவன் யாரும் இல்லையே. எங்க ஊரில் அப்படி யாரும் இல்லை. இதுக்காக நான் ஊர் ஊராக சுற்றி நல்லவனை கண்டு பிடிக்க முடியுமா என்றால், வேண்டாம், அதுக்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


"பல கற்றும்" , "கல்லார்", "அறிவிலாதவர்" என்று மூன்று சொற்களை வைக்கிறார். 


அதாவது, நல்லவன் என்று யாரும் உன் கண்ணுக்குப் படவில்லையா, கவலை வேண்டாம். புத்தகங்களை எடு. அதில் எவ்வளவு நல்லவர்கள் பற்றி இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகில் உள்ள அத்தனை நாட்டிலும் உள்ள நல்லவர்களைப் பற்றி நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும் தானே?


புத்தர், ஆதி சங்கரர், ,மகா வீரர், இயேசு பிரான், இராமானுஜர், இராமர், தர்மர், விதுரர், அரிச்சந்திரன், சிபி சக்கரவர்த்தி, மார்டின் லூதர் கிங்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா? அவர்களைப் பற்றி "கற்று" அதன்படி "ஒட்ட ஒழுகு" என்கிறார். 


இங்கும், ஒட்ட என்பதில் நம் காலத்துக்கு ஏற்ப அதை நாம் அனுசரித்து நடக்க வேண்டும். 


அது மட்டும் அல்ல, கற்பது என்பது நல்லவர்களைப் பற்றி மட்டும் அல்ல. நல்லதையும் கற்க வேண்டும்.  திருக்குறளில் எந்த ஒரு பெயரும் இல்ல. நல்லவன் என்று யாரையும் அடயாளப் படுத்தவில்ல. அதற்காக அதை விட்டுவிடுவதா? இல்லை, திருக்குறளில் "நல்லது" நிறைய இருக்கிறது.  அதை கற்றுக் கொள்ள வேண்டும். 


இதை எல்லாம் கற்றுக் கொண்டாலும், நடைமுறையோடு சேர நடக்கத் தெரிய வேண்டும். இல்லை என்றால், என்ன படித்தும், அவன் முட்டாள்தான் என்கிறார் வள்ளுவர். 


சரிதானே, படித்ததை வாழ்வில் நடைமுறை படுத்தாவிட்டால், படித்தவனுக்கும், படிக்காத முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் ஒரே மாதிரி செயல் பட்டால் இருவருமே முட்டாள்தானே. 


நல்லவர்களைப் பார்த்து, 

நல்ல நூல்களைப் படித்து, ,


அதில் உள்ளவற்றை நடைமுறைக்கு ஏற்றவாறு அமைத்து, அதன் படி நடக்க வேண்டும். 


இதை படித்து முடித்துவிட்டு, கண் மூடி சிந்தித்துப் பாருங்கள். இன்னும் பல அர்த்தங்கள் தோன்றும். 


இந்தக் குறளோடு இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


நாளை,ஒரு தொகுப்புரை பார்ப்போம். அதன் பின் அடுத்த அதிகாரத்துக்குள் செல்வோம். 


காலம் அதிகம் இல்லாமையால், நீங்கள் நேரடியாகவே குறளையும், அதன் உரையையும் படித்து விடுங்கள். 


No comments:

Post a Comment