கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 6
(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் .
பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html
பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html
பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html
பாகம் 4: https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html
பாகம் 5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html
)
அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை.
முதன் முதலாக சீதை அனுமனிடம் பேசப் போகிறாள்.
எவ்வளவு பேசி இருப்பாள்? என்னென்ன கேட்டு இருப்பாள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சீதை என்ன பேசினாள் என்பதை காண இருக்கிறோம்.
அதற்கு முன் ....
பேச்சு என்பது வெறும் சொல் அல்ல. அது தரும் ஒலி அல்ல அந்த சொல்லின் பொருள் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலே, பேச்சோடு கூடிய உணர்சிகள். உணர்ச்சிகள்தான் நாம் பேசும் பேச்சுக்கு வலிமை சேர்கிறது.
உணர்வு கலவாத சொற்கள் வெற்றுச் சொற்கள்.
நமக்கு கோபம் வந்தால் அந்த உணர்ச்சி சொல்லில் தெறிக்கும். வெறுப்பு, எரிச்சல், வருத்தம் கூட சொல்லில் வெளிப்படும். அன்பு வெளிப்படுமா?
கடைசியாக யாரிடம் அன்பு கலந்து பேசினீர்கள்? பேச்சு வெறும் இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது.
கணவனிடம, மனைவியிடம், குழந்தைகளிடம் அன்போடு, காதலோடு பேசி இருக்கிறோமா?
சீதை நினைக்கிறாள்
"இவன் பேசுவதைக் கேட்டு என் உள்ளம் உருகுகிறது. இவனைப் பார்த்தால் கள்ள உள்ளம் கொண்ட வஞ்சகர் மாதிரி தெரியவில்லை. மனதில் பதியும்படி நினைத்து பேசுகிறான். கண்ணில் நீர் வழிந்து தரையில் விழுகிறது. இவனிடம் கேட்கலாம் " என்று எண்ணி "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.
பாடல்
என நினைத்து எய்த நோக்கி,
‘இரங்கும் என் உள்ளம் : கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய
வஞ்சகர் மாற்றம் அல்லன் :
நினைவு உடைச் சொற்கள் கண்ணீர்
நிலம்புகப் புலம்பா நின்றான் :
வினவுதற்கு உரியன் என்னா,
‘வீர! நீ யாவன்? என்றாள்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html
(pl click the above link to continue reading)
என நினைத்து = என்று நினைத்து
எய்த நோக்கி, = அவனை பார்த்து
இரங்கும் என் உள்ளம் = என்ன உள்ளம் உருகுகிறது
கள்ளம் மனன் = கள்ள மனத்தை
அகத்து உடையர் ஆய = உள்ளே உள்ளவர்களான
வஞ்சகர் மாற்றம் அல்லன் = வஞ்சகர் போன்றோர் அல்லன் இவன்
நினைவு உடைச் சொற்கள் = சொற்களை நினைத்து பேசுகிறான்
கண்ணீர் நிலம்புகப் = கண்ணீர் நிலத்தில் விழுகிறது
புலம்பா நின்றான் = புலம்பியபடி நிற்கிறான்
வினவுதற்கு உரியன் என்னா, = இவனிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி
‘வீர! நீ யாவன்? என்றாள். = வீரனே, நீ யார் என்று கேட்டாள்
நமக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆண்கள் அழக் கூடாது. அழுவது என்பது பலவீனம். என்ன நடந்தாலும் கல்லு போல நிற்பவன் தான் ஆண் மகன் என்று நமக்கு நாமே ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறோம்.
சிறு வயதில், ஆண் பிள்ளைகள் அழுதால் " பொம்பள பிள்ளை மாதிரி என்னடா அழுதுகிட்டு" என்று அவனை ஏளனம் செய்வோம். ஆண் அழுவது தவறு என்று சிறுவயது முதலே மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்க்கப் படுகிறோம்.
அது தவறு.
இராமாயணத்தில் ஆண்கள் அழுகை என்று புத்தகமே எழுதலாம்.
தயரதன் அழுதான், இராமன் பல இடங்களில் அழுது இருக்கிறான், இலக்குவன் அழுதிருக்கிறான், இராவணன் அழுதிருக்கிறான்.
உள்ளே அடக்கி வைத்து, அடக்கி வைத்து புரையோடிப் போய் விடுகிறது.
"அழுதால் உன்னைப் பெறலாமே" என்பார் மணிவாசகர்.
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் திருஞானசம்பந்தர்.
இங்கே அனுமன் சீதையின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தாவி வந்தவன், இலங்கினியை ஒரே குத்தில் நிலை குலைய வைத்தவன், சஞ்சீவி மலையை ஒரு கையால் தூக்கியவன், கண்ணீர் சிந்துகிறான். அதில் தவறு இல்லை. அந்த உணர்ச்சி கலப்பு அவனை உயர்த்துகிறது. அவன் சொல்லுக்கு வலிமை சேர்கிறது. அந்த உணர்வு வெளிப்பாடைக் கொண்டு சீதை "இவன் நல்லவன்" என்று முடிவு செய்கிறாள்.
உணர்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு, வெறும் சொல்லை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, "என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை" என்று புலம்புவதில் என்ன பலன்?
சீதை கேட்கிறாள் 'வீரனே, நீ யார்' என்று.
அனுமன் என்ன சொன்னான், எப்படிச் சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன சொல்லி இருப்பான், எப்படி சொல்லி இருப்பான் என்று யோசித்துப் பாருங்கள். நாமாக இருந்தால் என்ன பதில் சொல்லி இருப்போம் என்று சிந்திப்போம்.
அப்போதுதான் அனுமனின் பதிலின் மேன்மை புரியும்.
நாளை சந்திப்போமா?
அனுமனின் பேச்சு நயத்தை பற்றி ஆறு பாகங்கள் கொஞ்சமும் திகட்டாமல் ஆர்வமும் குறையாமல்
ReplyDeleteஇன்னும் எழுத மாட்டீர்களா என்கிற எண்ணமே மேல் நோக்கி உள்ளது.
பார்த்தசாரதி