கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 7
(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் .
பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html
பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html
பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html
பாகம் 4: https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html
பாகம் 5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html
பாகம் 6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html
)
அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை.
முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.
அனுமன் என்ன சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நம்மிடம் யாராவது "நீ யார்" என்று கேட்டால் என்ன சொல்லுவோம்?
நம் பெயர், படிப்பு, தொழில், திருமணம் ஆகி விட்டதா இல்லையா, எத்தனை பிள்ளைகள், அவர்கள் என்ன செய்கிரார்கள், சொந்த ஊர் என்று அடுக்கிக் கொண்டே போவோம் அல்லவா?
அனுமன் இது எதையுமே சொல்லவில்லை. சொல்லவில்லை என்றால் முதலில் சொல்லவில்லை. பின்னால் சொல்கிறான். அப்படியானால் என்னதான் சொன்னான்?
மூன்று பாடல்களில் பதில் தருகிறான்.
இங்கே முதல் பாடலில்
"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"
என்றான்.
பாடல்
ஆயசொல் தலைமேல் கொண்ட
அம் கையன், ‘அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு, தேடிய
துணைவன், தொல்லைக்
காய்கதிர்ச் செல்வன் மைந்தன்,
கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன்
என்று உளன், நவையில் தீர்ந்தான். ‘
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html
(pl click the above link to continue reading)
ஆயசொல் = அந்த சொல்லை. "வீர நீ யார்" என்று சீதை கேட்ட அந்தச் சொல்லை
தலைமேல் கொண்ட =தலைமேல் கொண்ட
அம் கையன் = அழகிய கைகளை உடைய அனுமன்
‘அன்னை! = அன்னையே
நின்னைத் = உங்களைப்
தூயவன் = இராமன்
பிரிந்த பின்பு = பிரிந்த பின்
தேடிய துணைவன் = தேடி அடைந்த நண்பன்
தொல்லைக் = பழமையான
காய்கதிர்ச் செல்வன் = காய்கின்ற கதிர்களை உடைய சூரியன்
மைந்தன் = பிள்ளை
கவிக் குலம் = குரங்கு கூட்டம்
அவற்றுக்கு எல்லாம் = அவை அனைத்துக்கும்
நாயகன் = தலைவன், அரசன்
சுக்கிரீவன் = அவன் பெயர் சுக்ரீவன்
என்று உளன் = என்று ஒருவன் இருக்கிறான்
நவையில் தீர்ந்தான். = குற்றம் இல்லாதவன்
முதலாவது, இராமனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான். அவன் தனியாக காட்டில் இருந்தால் எப்படி இராவணனை வென்று சிறை மீட்க முடியும். எனவே, இராமனுக்கு ஒரு துணைவன் இருக்கிறான் என்று முதல் செய்தியை கூறுகிறான்.
இரண்டாவது, நண்பன் சரி, அவன் யார் ? சும்மா காட்டில போற ஒரு வேடனை பிடித்துக் கொண்டு வந்து நண்பன் என்றால் என்ன பலன். எனவே, அனுமன் சொல்கிறான் "சூரிய குமாரன்" என்று. தெய்வாம்சம் பொருந்தியவன் என்று.
மூன்றாவது, சரி நண்பன் பெரிய ஆள் தான். அவனுக்கு பின் பலம் ஏதாவது இருக்கிறதா? அல்லது அவன் தனி ஆளா என்ற கேள்விக்கு "குரங்கு குலம் அனைத்துக்கும் அவன் தலைவன்" என்றான். அவன் தனி ஆள் இல்லை. அவன் பின்னால் ஒரு பெரிய படையே இருக்கிறது என்றான்.
நான்காவது, சரி ஆள் பெரிய இடம் தான்.அரசன் தான். பெரிய படை இருக்கிறது. ஆனால், அவன் நல்லவனா? அல்லது அவனும் இராவணன் மாதிரி ஆளா? இராமனுக்கு உதவி செய்வானா? என்ற கேள்விக்கு "குற்றமற்றவன்" என்கிறான் அனுமன்.
அனைத்துக்கும் மேலாக, இவன் பழைய ஆள்.உங்களுக்குத் தெரியாது. உங்களைப் பிரிந்த பின் கிடைத்த நட்பு என்றும் சொல்கிறான்.
அதைச் சொன்ன விதம் அதை விடச் சிறப்பு....சீதை சொன்னதை தலைமேல் கொண்டு, அது ஏதோ கட்டளை போல சிரமேற்கொண்டு பணிவாக பதில் சொல்கிறான்.
இப்படி பேசிப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது?
சொக்கிப் போய் விட மாட்டோமா?
இன்னும் அனுமன் தான் யார் என்று சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.
அடுத்த பாட்டிலாவது சொல்கிறானா என்று பார்ப்போம்.
சொக்கித்தான் போய்விட்டோம் உங்கள் வர்ணனையில்! அபாரம்
ReplyDeleteபார்த்தசாரதி