Pages

Monday, October 10, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2

         

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2




பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 





சுமந்த என்ற வார்த்தையின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம். 






(pl click the above link to continue reading)



"பண் சுமந்த பாடல்" - பாடல் தனக்குள் அர்த்தத்தை மட்டும் அல்ல, இசையையும் சேர்ந்து சுமந்து கொண்டு வருகிறது.  திருவாசகம் போன்ற பாடல்களை இசையோடு பாடும் போது உள்ளம் உருகும். சிலர், காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து கொண்டே தேவாரம், திருவாசகம், பிரபந்தம், சுப்ரபாதம், என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். கை ஒரு வேலை பார்க்கும், கண் அடுப்பில் உள்ள சாமானை பார்க்கும், காது குக்கர் எத்தனை விசில் அடித்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும், கால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும், இதற்கிடையில் வாய் பக்திப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.  உணர்ச்சியே இல்லாமல், அது என்ன பக்தியோ?

  
பாடல்களை வசனம் போல படிக்கக் கூடாது. 


அப்படி பாடல்களை இசையோடு உள்ளம் உருகி பாடுபவர்களுக்கு வேண்டிய பரிசுகளைத் தருவான். இமய மலையின் அடியில் மாட்டிக் கொண்ட இராவணன் சாம கானம் பாட, சிவன் அதில் மயங்கி, அவனை விடுவித்தது மட்டும் அல்ல சந்ந்தரகாந்தம் என்ற தன் வாளினையும் கொடுத்தார் என்பது புராணம். 


"பெண் சுமந்த பாகத்தன்":  பெண் ஆயிரம் பாரம் சுமப்பாள். அவளை யார் சுமப்பது? அவளுக்கும் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் தேவைப்ப்படும்தானே? 


கம்ப இராமாயணத்தில், தயரதன், விழுந்து கிடக்கும் கைகேயியை ஒரு யானை, மான் குட்டியை தூக்குவது போலத் தூக்கினான் என்பான். சுமக்கத்தான் வேண்டும். சுகமான சுமை. 


"கலி மதுரை" - ஆராவாரம் மிகுந்த மதுரை.  எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரை. தூங்கா நகரம் என்று சொல்லுவார்கள். 



"மதுரை மண் சுமந்த" -  மதுரை மண்ணுக்கு அவ்வளவு பெருமை. அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. 


கதைகளில் சிவன் முதலில் புட்டு வாங்கி உண்டு விட்டு, வேலை செய்யாமல் நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பாண்டியன் வந்து அடித்ததாகவும் வரும். மாணிக்க வாசகர் அதை திருத்துகிறார். 


"மண் சுமந்த கூலி கொண்டு" - முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார். சுமந்த கூலி.  கூலி கொண்டு மண் சுமந்த அல்ல, மண் சுமந்த கூலி கொண்ட.


மணிவாசகரை பாண்டிய மன்னன் இரண்டு முறை தண்டித்தான். முதலில் குதிரை வாங்க பணத்தில் கோவில் கட்டியதற்காக, அதாவது அரசாங்க பணத்தை சொன்ன விதத்தில் செலவழிக்காததால் ஒரு தண்டனை.  


பின் குதிரை வந்து விட்டது. மணி வாசகரை விடுதலை செய்து விட்டான். அன்று இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடி விட்டன. எனவே, மீண்டும் அவருக்கு தண்டனை கொடுத்தான். 


முதல் குற்றம் மணி வாசகருடையது. குதிரை வந்த பின், அதை சரி பார்த்து வாங்க வேண்டியது பாண்டிய மன்னனின் கடமை.  பெற்றுக் கொண்ட பின் இனி அது அவன் பொறுப்பு. பரிகள் நரிகளானால் அது பாண்டிய மன்னனின் நிர்வாகப் பிழை. அதற்கு மணி வாசகர் என்ன செய்வார்? அவரைத் தண்டித்தது பிழை. அதை உணர்த்த, அரசன் தவறு செய்தால் அது குடிகள் எல்லோரையும் பாதிக்கும் என்று  காட்ட வைகையில் வெள்ளம் வர வைத்தார் சிவ பெருமான். 



என்னதான் மணிவாசகர் செய்தாலும், அவருக்குள் இருந்து அப்படி பொதுப் பணத்தில் கோவில் கட்ட வைத்தது இறைவன் தானே. கோவில் கட்டியது தவறு என்றால், மணி வாசகரை மட்டும் எப்படி தண்டிப்பது? எனவே, இறைவனும் தண்டனை பெற்றுக் கொண்டான் என்று காட்டவே அந்த 


"கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி" ஆனாரோ ?


உயிர்கள் வாடினால் இறைவனும் வாடுவான் என்று உணர்த்தவோ? 


"ஆயர் தம் கொழுந்தே" என்று பேசும் பிரபந்தம்.  வேர் வாடினால் கொழுந்து வாடும். பக்தன் வாடினால், இறைவன் வாடுவான். 


சிவ பெருமான் என்ன நிறம்?


பொன் நிறம்.  படத்தில் வரைபவர்கள் கறுப்பாக வரைந்து விடுகிறார்கள். 

"பொன்னார் மேனியனே"

"பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்"

"புண் சுமந்த பொன் மேனி" 

"சோதியே, சுடரே சூழ் ஒளி விளக்கே"


திருவாசகத்தில் ஒரு பாடலை ஒரு முறை படித்துவிட்டால் மேலே போக மனம் வராது. மனம் அதிலேயே சுத்திக் கொண்டு இருக்கும். 


சொல்லிக் கொண்டே போகலாம். படிக்கப் படிக்க, ,சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் பாடல்கள் திருவாசகப் பாடல்கள். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


)


No comments:

Post a Comment