Pages

Friday, October 7, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீறு பட இலங்கை

      

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   நீறு பட இலங்கை 



குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் பற்றிக் கூறினார். 


பின்னர் நரசிம்ம அவதாரம் பற்றிக் கூறினார். 


அடுத்து இராம அவதாரம் பற்றி கூற இருக்கிறார். 



இலங்கையில் போர் நடக்கிறது.  நாம் இப்போது அங்கே போய் விட வேண்டும். தொலைவில், ஒரு மலை மேல் நின்று அந்தப் போரைப் பார்க்கிறோம். 



இரண்டு பக்கமும் மிக உக்கிரமாக போர் புரிகிறார்கள். 



ஆயிரக்கணக்கான அம்புகள் பறக்கின்றன. அந்த அம்புகள்சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. அப்படி அவைஇடை விடாமல் மோதிக் கொள்ளும் ஒலி பயங்கரமாக ஒலிக்கிறது. 


இராம இலக்குவனர் அம்புகளால் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக மடிகிறார்கள். அவர்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டு எழுகிறது. அந்த இரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறு ஓடையாகி, பின் அந்த ஓடைகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆறாகி கடலில் சென்று சேர்கிறது. 



ஏற்கனவே உள்ள ஆற்று நீரோடு, இந்த இரத்த ஆறும் கலப்பதால் கடல் நீர் பொங்கி எதிர் வருகிறது. 


சாதாரண ஆற்று நீரும் இரத்தம் கலந்து நிறைகிறது. 


பாடல் 



மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே.



சீர் பிரித்தபின் 



மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள், இன

நூறு பிணம் மலை போல் புரள, கடல்

ஆறு மடுத்து உ திரப்புனலால்,  அப்பன்

நீறுபட இலங்கை செற்ற நேரே.


பொருள் 




(pl click the above link to continue reading)







மாறு  = இரு புறமும் மாறி மாறி 

நிரைத்து =  வான் வெளியே நிறைந்து போகும் படி 

இரைக்கும் = இரைச்சல் உண்டாக்கும் 

சரங்கள் = அம்புகள் 


இன = இனம் இனமாய், கொத்து கொத்தாக 


நூறு = நூற்றுக் கணக்கில் 


பிணம் மலை போல் புரள = பிணங்கள் மலை போல் புரண்டு கிடக்க 


கடல் = கடலானது 


ஆறு மடுத்து = ஆற்று நீர் எதிர்த்து வர 


உ திரப்புனலால் = இரத்த ஆற்றால் 


அப்பன் = இராம பிரான் 


நீறுபட = சாம்பலாகும்படி  


இலங்கை  = இலங்கையை 


செற்ற நேரே  = போர் செய்த போது 




இராவணன் எவ்வளவு பெரிய பலம் பொருந்தியவன். 



முக்கோடி வாழ் நாள், எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்ற வரம், திக்கோடு உலகு அனைத்தும் வென்று அடக்கிய புய வலம், சங்கரன் கொடுத்த வாள், என்று மிகுந்த பராகிரமம் உடையவன். 


அப்பேற்பட்ட இராவணனின் படைகளை கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டவன் இராமன். 


நம் துன்பம் எல்லாம் அவனுக்கு என்ன பெரிய விடயமா?  அவனைப் பற்றினால் வெற்றி நிச்சயம் என்று இந்த வெற்றிப் பாசுரத்தில் நம்மாழ்வார் கூறுகிறார். 










பொருள் 



(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


No comments:

Post a Comment