Monday, September 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)

   

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)



காலம் என்றால் என்ன?


மிகக் கடினமான கேள்வி. 


காலம் என்றால் வருடம், மாதம், வாரம், நாள், பகல், இரவு, மணி, நிமிடம், நொடி என்று சொல்லலாம். அவை காலங்கள் அல்ல. அவை கால இடைவெளிகள். இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள அளவைகள் அவை. சூரியன் உதித்து, மறைந்து மீண்டும் உதிக்கும் அந்த இரண்டு உதயங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி ஒரு நாள். நாளின் பகுதி பகல், இரவு. பகல் இரவின் பிரிப்பு மணி, நிமிடம் என்பது எல்லாம். 


நமக்கு ஒரு நாள் என்பது இருபத்தி நாலு மணி நேரம். ஆனால், செவ்வாயிலோ, வியாழன் கிரகத்திலோ இருபத்தி நான்கு மணியைவிட அதிகம் இருக்கும். அது, அந்தந்த கிரகங்கள் சுற்றும் வேகத்தைப் பொறுத்தது. 


யோசித்துப் பாருங்கள், சூரியன் இல்லாவிட்டால் நம் நாள் கணக்கு என்ன ஆகும். நாளும் இல்லை, பகலும் இல்லை. கோடை, குளிர் போன்ற காலங்கள் இல்லை. இராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லை.


காலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இல்லை என்று ஆகும். ஜோதிடம் கணிக்க முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் வாழும் இந்த பூமி வெகு வேகமாக சுற்றுகிறது. அது தன்னைத் தானே சுற்றுவது மட்டும் அல்ல, சூரியனையும் சுற்றுகிறது. பூமியும் சூரியனும் சேர்ந்து சுற்றுகின்றன. இப்படி எத்தனை சுற்றுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், நமக்கு ஏதாவது தெரிகிறதா? 


இவ்வளவு பெரிய பூமி, இவ்வளவு வேகமாக சுற்றினாலும், ஒன்றும் இடத்தை விட்டு அசைவது இல்லை. 


நம் வீடு அதே இடத்தில் தான் இருக்கிறது.நம் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில், தபால் நிலையம், கடைகள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே இருக்கின்றன. 



யோசித்துப் பாருங்கள், காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடு ஒரு ஐநூறு கிலோமீட்டர் வடக்கே நகர்ந்து போய் விடுகிறது, உங்கள் ஊருக்கு வெளியே இருந்த மலையைக் காணோம், புதிதாக உங்கள் வீட்டு வாசலில் ஒரு நதி ஓடுகிறது. எப்படி இருக்கும்?


சரி, அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


அது மட்டும் அல்ல, கடல் பொங்குகிறது, சூரியன் கொஞ்சம் நெருங்கி வந்ததில் பூமி பயங்கர சூடாகி எல்லாம் தீ பற்றி எரிகின்றன, கடல் நீர் உலை நீர் போல் கொதிக்கிறது...இதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். 


விண்மீன்கள் இடம் மாறிப் போகின்றன. அண்ட வெளியில் பூமிப் பந்து எங்கோ பறந்து கொண்டிருக்கிறது. 


அந்த பிரமாண்டத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


உலகமே கலங்குவதை உங்கள் கற்பனையில் நினையுங்கள். 


நம்மாழ்வார் சொல்கிறார் 


"காலம் என்ற ஒன்று மாறிப் போனது. கடல் நீர் இடம் மாறிப் போனது. ஊரெல்லாம் கடல் நீர். விண்ணில் கோள்கள் இடம் மாறிப் போயின. காற்று புயலாக அடிக்கிறது.  மலைகள் அடியோடு புரள்கின்றன. சூரிய, நட்சத்திரம் போன்றவை திசை கெட்டுத் திரிகின்றன."

"இது எப்போ ?" என்று கேட்டால்


ஊழிக் காலத்தில், இந்த உலகம் அனைத்தையும் திருமால் உண்டு தன் வயிற்றில் அடக்கிய அந்த நாளில். 



பாடல் 


நாளு மெழநில நீரு மெழவிண்ணும்

கோளு மெழேரி காலு மெழ,மலை

தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்

ஊளி யெழவுல கமுண்ட வூணே.



சீர் பிரித்த பின் 


நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்

கோளும்  எழ காலும் எழ  மலை

தாளும் எழ சுடர் தானும் எழ  அப்பன்

ஊளி எழ உலகம் உண்ட ஊண் 


பொருள் 





(pl click the above link to continue reading)




நாளும் எழ  = நாள், வாரம், மாதம் போன்ற காலங்கள் கலங்கி எழ 


நில நீரும் எழ  = நிலமும், நீரும் கலங்கி எழ 


விண்ணும், கோளும்  எழ = அண்ட வெளியும், அதில் உள்ள கோள்களும் எழ 


காலும் எழ = காற்று எழ 


மலை தாளும் எழ = மலைகளின் அடிவாரங்கள் (தாள் = அடி) பெயர்ந்து எழ 


 சுடர் தானும்  எழ  = சூரியன், நட்சத்திரம் போன்றவை எழ 


அப்பன் = என் தந்தை திருமால் 


ஊளி எழ = ஊழிக் காலத்தில்  


உலகம் உண்ட ஊண்  = இந்த உலகம் அனைத்தையும் ஒரு உணவாக வாயில் போட்டு விழுங்கிய போது 



உண்மையோ, பொய்யோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



எவ்வளவு பெரிய, விரிந்த, பிரமாண்டமான கற்பனை. 




அவர் காட்டும் அந்த நிகழ்வை மனதில் ஓட விட வேண்டும். 


இல்லாத ஒன்றை நினைக்க முடிகிறது அல்லவா?


நிகழாத ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது அல்லவா?


ஒரு பாடகர் கல்யாணி இராகத்தில் ஒரு பாடல் பாடுகிறார். எனக்கு இசை அறிவு இல்லை. எனக்கு அது கல்யாணி என்று தெரியாது. இசை தெரிந்தவருக்கு அது கல்யாணி என்று புரியும். 


எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அது கல்யாணி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். 


காதில் ஒலி விழுகிறது. காது நன்றாகக் கேட்கிறது. இருந்தும் கல்யாணி புரியவில்லை. 


இசை அறிவு பெருகினால், அது புரியும். 


அவர் ஏதோ சொல்கிறார். எனக்குப் புரியவில்லை.  


உங்களுக்கு?


(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html



)


No comments:

Post a Comment