Tuesday, September 20, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4

   

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் 

விந்து 

சதாக்கியம் 

ஈஸ்வரம் 

சுத்த வித்தை.


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும்.  முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 



மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


(pl click the above link to continue reading)


இனி உயிர்கள் செயல்படத் தொடங்க வேண்டும். உயிர்கள் செயல்பட என்ன வேண்டும் என்று அறிந்து, அவற்றை இறைவன் உருவாக்குகிறான். 


ஒரு பெரிய வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டைப் பார்த்து இரசிக்கிரோம். அடடா எவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவு பெரிய வீடு என்று.


வீட்டினுள் சென்று பார்க்கிறோம். பெரிய முன் அறை, மூன்று படுக்கை அறை, பெரிய சமையல் அறை, மூன்று குளிப்பறை என்று நன்றாக இருக்கிறது. 


சற்று சிந்திப்போம். வீடு என்பது ஒரு பொருள் அல்ல. பல பொருள்களின் தொகுதி. அவ்வளவே. ஒவ்வொன்றாகச் சொல்ல முடியாது என்பதால் எல்லாவற்றையும் சேர்த்து வீடு என்று ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். .


உண்மையில் அது சிமென்ட், இரும்பு கம்பிகள், மணல், கல், கண்ணாடி, மரம், துணி என்பவற்றின் தொகுதி. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டால், அவ்வளவு பெரிய வீடு, ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். 


அதில் இன்னும் உள்ளே போவோம். 


அங்கே உள்ள மேஜை, நாற்காலி எல்லாம் பிரித்துப் போட்டால் மரம் மிஞ்சும். 


படுக்கை, தலையணை, போர்வை, படுதா இவற்றை பிரித்தால் துணியும் நூலும் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் நூல், சாயம் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் பஞ்சு மிஞ்சும். 


இப்படி உள்ளே போய் கொண்டே இருக்கலாம். 


தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், எந்த பெரிய பொருளும் ஏதோ நுண்ணிய பொருள்களின் தொகுதி என்று. 


மனிதன் என்றால் உறுப்புகள், அதற்கு கீழே தோல், எலும்பு, இதயம் என்று அங்கங்கள், அவற்றிக்கு உள்ளே திசுக்கள், அவற்றிற்கு உள்ளே செல்கள் என்று போய்க் கொண்டே இருக்கும். 


ஏதோ ஒரு நுண்ணிய பொருளில் இருந்து பெரிய பொருள்கள் உருவாகின்றன என்று புரிகிறது அல்லவா?


அந்த நுண்ணிய பொருளை பிரித்தால் உள்ளே இன்னும் போகும். 


இப்படி போய்க் கொண்டே இருந்தால், இறுதியில் ஒரு மிக மிக நுண்ணிய பொருள் ஒன்று இருக்கும். அதை கண்ணால் காண முடியாது, காதால் கேட்க முடியாது. புலன்களுக்கு பிடிபடாது. அவ்வளவு நுண்மை வாய்ந்தது 


அந்த நுண்மையான ஒன்றை மாயை என்று சொல்கிறார்கள். மிக மிக நுண்மையானது. அதை விட நுண்மையான ஒன்று இல்லை என்றால் அது எவ்வளவு நுண்மையானது என்று சிந்திக்க முடியும்.  



அந்த மாயையில் இருந்து இறைவன் உலகைப் படைத்தான். 


இந்த மாயையை இரண்டாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று. 


அப்படியானால் இரண்டு மாயை உண்டா என்றால் இல்லை. 


என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?  


இது இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கப்படுகிறது. 


குன்றிமணி என்று ஒரு விதை உண்டு. அது ஒரு புறம் கறுப்பாக இருக்கும், மறு புறம் சிவப்பாக இருக்கும். இந்தப் பக்கம் பார்பவர்கள் அதை கறுப்பு என்பார்கள். மறு புறம் பார்பவர்கள் அது சிவந்த நிறம் உடையது என்பார்கள். அது ஒன்றுதான், இரண்டும் தான். 


நம் காற்று மண்டலம் இருக்கிறதே, ,அது பூமிக்கு அருகில் மாசு உடையதாக இருக்கும். குப்பைகள், புகை, தூசி என்று. மேலே போகப் போக சுத்தமாக இருக்கும். ஒரே மண்டலம் தான் கீழே அசுத்தம், மேலே சுத்தம். அது போல 


ஒரே மாயை தான், இரண்டு பிரிவுகள். 


இந்த அசுத்த மாயையில் இருந்து இறைவன் ஏழு தத்துவங்களை தோற்றுவிக்கிறான். அவை இல்லாமல் இந்த உயிர்கள் செயல் பட முடியாது. உயிர் அசைய முதலில் அவை வேண்டும். 


அவை என்னென்ன என்று நாளை பார்ப்போமா?


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3


]https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html





No comments:

Post a Comment