Friday, September 16, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3

  

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம், 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


(pl click the above link to continue reading)


இப்படித் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய இறைவன் அவற்றின் மேல் கருணை கொண்டு தன் நிலையில் இருந்து இறங்கி வருவான். 


ஏன் இறங்கி வர வேண்டும் ? அவன் நினைத்தால் அந்த உயிர்களை ஒரு நொடியில் பாசத்தில் இருந்து விடுவிக்க முடியாதா என்று என்னைப் போல ஒரு சிற்றறிவு உள்ளவன் கேட்கக் கூடும். .


செய்யலாம் செய்ய முடியும். ஆனால், ஏன் செய்ய வேண்டும்?  அப்படிச் செய்வதாக இருந்தால் இறைவனுக்கு ஒரு விருப்பு, வெறுப்பு இருக்க வேண்டும். ஒரு விருப்பும், வெறுப்பும் இல்லாதவன் எப்படிச் செய்வான். உயிர்கள் வெளிவருவதும், வெளி வரதாதும் அவற்றின் விருப்பம். ஆண்டவனுக்கு ஒரு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. 


எனவே, அவன் நேரடியாக செயலில் இறங்கி தனக்கு வேண்டியதை செய்து கொள்வது இல்லை.  மாறாக, உயிர்கள் செயல் படும் ஒரு சூழலை உருவாக்கித் தருவான். என்ன செய்வது என்பது உயிர்களின் பாடு.


ஒரு ஆசிரியர், பாடம் எடுப்பார், சந்தேகம் வந்தால் சொல்லிக் கொடுப்பார். அவரே பரிட்சையும் எழுதினால் என்ன என்று கேட்கக் கூடாது. அவருக்கு விடை தெரியும். அவர் பரீட்சை எழுதினால் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சி எப்படி வரும்?


எனவே, உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் இறங்கி வரும் படிகள் இருக்கின்றன. 


இந்த படிகளை மொத்தம் 36 படிகளாக பிரிக்கிறார்கள். இதை 90, 96 என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு 36 என்ன என்பதைப் பார்ப்போம். 


இந்த 36 படிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த தத்துவம் 

அசுத்த தத்துவம் 

பிரகிருதி தத்துவம் 


என்று 


முதலில் சுத்த தத்துவத்தை எடுத்துக் கொள்வோம். 


இதில் மொத்தம் 5 படிகள். 


முதல் படி - நாதம். 


நாதம் என்றால் என்ன? இது அறிவின் பூர்ண வடிவம். அறிவே உருவானது. நம்மால் சிந்தித்து உணர முடியாதது. நனவிலி நிலை என்கிறார்கள். முயற்சி செய்யாதே. உன்னால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. இதை சைவ சித்தாந்தம் பரசிவம் என்பார்கள். நாம் பார்க்கும் வடிவங்கள் அல்ல. வடிவம் அற்ற ஒன்று அது. 


இரண்டாம் படி - விந்து 


விந்து என்றால் என்ன? இது அருள் சக்தி. ஏனைய தத்துவங்கள் பிறக்க வழி செய்யும் படி. இதை கிரியா சக்தி என்றும் சொல்லுவார்கள்.  இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 


மூன்றாவது படி - சதாக்கியம் அல்லது சதாசிவம் - அறிவும் செயலும் சேரும் இடம். ஏனைய தத்துவங்களை தூண்டும் இடம். சிவ சக்தி இணையும் இடம். 


நான்காவது படி - ஈஸ்வரம் 


ஈஸ்வரம் என்றால் என்ன ?


இந்த நிலையில் இறைவன் உயிர்களில் கலந்து நிற்பான். ஆனால், உயிர்கள் அதை அறிய மாட்டா. இதைத்தான் மறைத்தர் தொழில் என்பார்கள். மறைத்தல் என்றால் பிள்ளைகள் பொருளை மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுப் போல அல்ல. தான் உயிர்களில் கலந்து நிற்பதை உயிர்கள் அறியாமல் மறைப்பது. 


ஐந்தாவது தத்துவம் - சுத்த வித்தை.


சுத்த வித்தை என்றால் என்ன?  படைத்தல், காத்தல், அழிதல் என்ற முத்தொழில் தொடங்கும் இடம். இறை சக்தி முழுமையாக வெளிப்படும் இடம். இந்த இடத்தில் தான் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று இறை சக்தி வெளிப்படும். இதை அறிந்து கொள்ளாமல், உருத்திரன் உயர்ந்த கடவுள், திருமால் உயர்ந்த கடவுள் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும். 


மிக மிக மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்க. 


புரிந்து சொல்லவில்லை. தெரிந்ததை சொல்லி இருக்கிறேன். மிக ஆழமான விடயம். 


மொத்தமாக இவை என்ன என்று புரிந்து கொள்வோம். பின் அதற்கு உள்ளே செல்லலாம். 


முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html



]


No comments:

Post a Comment