Tuesday, September 27, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6

     

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. புருடன் 


என்றும் சிந்தித்தோம் 


36 தத்துவங்களில் 11 தத்துவம் பற்றி சிந்தித்தோம்.இனி மீதி உள்ள 25 தத்துவங்களை பற்றிச் சிந்திப்போம். 


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இது இறைவன் உயிரை செயல்படுத்த தயாராகும் நிலை. 


அடுத்த 6 தத்துவங்கள் உயிர்கள் செயல்பட உண்டான தத்துவங்கள். இவை வித்யா தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


இறைவன் தயார், உயிர்கள் தயார். 


இனி இந்த உயிர்கள் செயல்பட வேண்டும். 


எங்கே, எப்படி செயல்படும் என்பதைப் பற்றி விளக்குபவை  மீதி உள்ள 24 தத்துவங்களும். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

(pl click the above link to continue reading)





உயிர்கள் செயல்பட ஒரு உடல் வேண்டும். உயிர் சூக்கும பொருள். அது நேரடியாக இயங்க முடியாது. மின்சாரம் சக்திதான். அது இயங்க பல்பு, டிவி, grinder, mixie என்ற கருவிகள் வேண்டி இருக்கிறது அல்லவா?  அது போல உயிர்கள் இயங்க இறைவன் நான்கு விடயங்களை படைக்கிறான்.  


அவை 


தனு, கரண, புவன,  போகம் என்று அழைக்கப்படுகின்றன. இவை தத்துவங்கள் அல்ல. 


தனு என்றால் உடம்பு. 

வெறும் உடம்பு செயல் பட முடியாது. அது செயல்பட அவயங்கள் வேண்டும். கை, கால் போன்ற கருவிகள் இருந்தால்தான் அது செயல்பட முடியும்.  அந்தக் கருவிகளுக்கு கரணங்கள் என்று பெயர். 


உடம்பு இருக்கிறது, கருவிகள் (கரணங்கள்) இருக்கின்றன. உடம்பு எங்கே இயங்கும்? அது இயங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு புவனம் என்று பெயர். 


சரி, உடம்பு இயங்க வேண்டும் என்றால் இடம் மட்டும் போதாது. அனுபவம் வேண்டும்.  உடம்பு இருக்கிறது, வயிறு இருக்கிறது, கை இருக்கிறது, சாப்பாடு இருக்கிறது. சாப்பிட முடியுமா?  பசி வேண்டாமா? பசிக்காமல் சாப்பிட முடியுமா? பசியும் இருக்கிறது. உணவில் ஒரே உப்பு, அல்லது அதீத காரம். சாப்பிட முடியுமா? உணவில் சுவை இருக்க வேண்டும். அந்த பசி, சுவை போன்றவைதான் அனுபவங்கள். அவற்றை போகங்கள் என்கிறார்கள். 


தனு, கரண, புவன, போகம் என்பது இதைத்தான். இவை தத்துவங்கள் அல்ல.இவற்றிற்கு உள்ளே இருக்கின்றன தத்துவங்கள். 


ஏ அப்பா, எவ்வளவு ஆழமாகப் போகிறது என்று நீங்கள் வியக்கலாம். சிந்தித்து இருக்கிறார்கள்.  


தத்துவங்களுக்கு போவதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு. 


நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? உங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறீர்கள்? நேற்றுவரை கூடவே இருந்த பிள்ளை இன்று எங்கோ கடல் கடந்து போய் விட்டது. ஏன்?


அது அதற்கு விதித்த புவனம். இது உங்களுக்கு விதித்த புவனம். 


இந்த வேறுபாடுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இனி தத்துவத்துக்குள் செல்வோம். 


உடல் செயல்பட உடலை ஏதாவது ஒன்று தூண்ட வேண்டும். போய் சாப்பிடு, அலுப்பாக இருக்கிறது போய் தூங்கு, சினிமாவுக்குப் போ, வேலைக்குப் போ என்று உடம்பை தூண்ட வேண்டும். 


முதலில் எண்ணம் வர வேண்டும். அது பின் உடல் மூலமாக செயலாக்கப்படும். இந்த எண்ணங்கள் பிறக்கும் இடத்துக்கு சித்தம் என்று பெயர். சித்தத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்குகிறது. 


 12 சித்தம். இது பன்னிரண்டாவது தத்துவம். 


சித்தம் ஓடி ஓடி களைத்துப் போகும்.அதை களைப்படையாமல் இருக்கச் செய்வது அகங்காரம் என்ற அடுத்த தத்துவம். 


13 அகங்காரம். நான் என்ற உணர்வு,எனது என்ற உணர்வு இருப்தால்தான் செயல்கள் இடை விடாமல் இருக்கின்றன. என் மனைவி, என் பிள்ளை, என் வீடு, என் வேலை என்ற எண்ணம் வரும் போதுதான் அதை காப்பாற்ற வேண்டும், அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. இல்லை என்றால் யார் அல்லது எது எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்று இருந்து விடலாம் அல்லவா?


இந்த அகங்காரம் மூன்று விதமாக பிரிகிறது.  


இராஜசம், தாமசம், சாத்வீகம் என்று. 


அவற்றை விளக்காமல் மேலே போவோம் 


இந்த சாத்வீக அகங்காரத்தில் இருந்து புத்தி, மனம் என்ற அடுத்த இரண்டு தத்துவங்கள் பிரக்கின்ன்றன. 


14. புத்தி 


15  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


நமக்கு உள்ளே நிகழும் அனுபவம் ஏதோ மூளையில் நிகழ்வதாக நாம் நினைக்கிறோம்.  நம் சமய கோட்பாடுகள் அது நான்கு நிலைகளில் நிகழ்வதாகக் கூறுகிறது. 


சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்று ஒவ்வௌன்றுகும் ஒரு செயல்பாடு உண்டு, இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவவை. அவற்றை விளக்க புகுந்தால் இன்னும் விரியும்.  மிக ஆழமான தத்துவங்கள் என்று புரிந்து கொள்வோம். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலைத் தொடரலாம். 




உள்ளே இருப்பவை. உடம்பை பிரித்துப் பார்த்தாலும் தெரியாது. 


எனவே, 15 தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


மேலும் 21 இருக்கின்றன. 


அவற்றை அடுத்த பதிவில் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html




]




No comments:

Post a Comment