Wednesday, September 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - (3598) - ஒலிகள்

    

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  (3598) - ஒலிகள் 



ஒரு பக்கம் பாண்டவர் சேனை. 


இன்னொரு பக்கம் கௌரவர் சேனை. 


கடல் போல் படைகள் இருபுறமும். பெரிய பெரிய ஆண்மை  வீரர்கள் இரண்டு புறமும்.


பெரிய மாமிச மலை போன்ற வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்கிறார்கள். அந்த ஒலி.


யானைப் படைகள். குதிரைப் படைகள். காலாட் படைகள். ஆயுந்தங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஒலி. வீரர்கள் எழுப்பும் ஒலி. யானைகளும், குதிரைகளும் எழுப்பும் ஒலி. எவ்வளவு பேரிரைச்சலாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 


அது மட்டும் அல்ல,  


இந்த போரின் நாயகன் கண்ணன்தான். அவன் தான் யுத்தத்துக்கு முதல் சங்கை ஊதினான். அவன் நேரடியாக சண்டை செய்யா விட்டாலும் அவன் அறிவும், அருளும் தான் அந்த யுத்தத்தை வழி நடத்தியது. 


கண்ணனே போர்க் களத்தில் நிற்கிறான் என்றதும் அதைக் காண விண்ணில் தேவர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள். கண்ணன் நகர்த்தும் காய்களை கண்டு அவர்கள் வியந்து ஆஹா ஓஹோ என்று ஒலி எழுப்புகிறார்கள். 


மண்ணும் விண்ணும் அதிர்கிறது. 


நம்மாழ்வார் அதை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். 


பாடல் 


ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்

ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்

ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்

காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.


பொருள் 


(pl click the above link to continue reading)




ஊணுடை = பெரிய உடலை உடைய 

மல்லர் = மல்லர்கள் 

ததர்ந்த வொலி = சண்டையிடும் ஒலி 


மன்னர்  = மன்னர்கள் 


ஆணுடை = ஆண்மை உடைய, அதாவது வீரம் நிரம்பிய 


சேனை = சேனைகள் 


நடுங்கு மொலி = நடுங்கும் ஒலி. கண்ணன் எதிர்புறம் நிற்கிறான். நாம் எங்கே பிழைக்கப் போகிறோம் என்று கௌரவ சேனைகள் நடுங்குகின்றனவாம். 



விண்ணுள் = வானில் 



ஏணுடைத் = உயர்ந்தவர்களாக எண்ணப்படும்  


தேவர் = தேவர்கள் 


வெளிப்பட்ட வொலி = வெளிப்பட்டு உண்டாக்கிய ஒலி 


அப்பன் = திருமால், கண்ணன் 


காணுடைப்  = காண்பதற்கு உரிய 


பாரதம் = பாரதப் போரை 


கையரைப் = அறைகூவி அழைத்த 


போழ்தே. = அந்த நேரத்தில் 


அர்ஜுனனோ, தர்மனோ, பீமனோ, பீஷ்மரோ, துரோனாச்சரியரோ அல்ல பாரதப் போரை நடத்தியது. அது பூபாரம் தீர்க்க கண்ணன் நடத்திய மாபாரதப் போர் என்பர் ஆன்றோர். 


அத்தனை ஒலியையும் நமக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம்மாழ்வார். 


ஏன்?


அவ்வளவு பெரிய போரை நடத்தி வெற்றி பெற்றவன். நம் துன்பங்களை துடைத்து நமக்கு வெற்றியைத் தரமாட்டானா? இதெல்லாம் அவனுக்கு ஒரு சிறு வேலை. கட்டாயம் செய்வான். 



வெற்றிப் பாசுரத்தில் ஐந்தாவது பாசுரம் இது. 


மேலும் பயணிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


)


No comments:

Post a Comment