Pages

Wednesday, October 5, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7

      

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 

6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. மாயை 12 . புருடன் 


(இதில் மாயை என்ற தத்துவம் விடுபட்டு போய் விட்டது. மன்னிக்க.).


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்றும் அடுத்த 7  தத்துவங்கள் வித்யா தத்துவங்கள் என்றும்  அழைக்கப்படுகின்றன. 


 13  சித்தம்; 14 அகங்காரம் ; 15. புத்தி;  16  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

எனவே, 16  தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


இறைவன் இறங்கி வந்தாகிவிட்டது, உயிர்கள் செயல்பட தயார், அவை செயல்பட அந்தக் கரணங்கள் வந்து விட்டன. 


இன்னும் 2௦ தத்துவங்கள் பாக்கி இருக்கின்றன. 


உயிர்கள் செயல்பட தணு  - கரண - புவன - போகங்கள் வேண்டும் என்று பார்த்தோம். அதன் விரிவை இங்கே காண இருக்கிறோம்.



உயிர்கள் செயல் பட புவனம், அதாவது இடம் வேண்டும். இடம் என்றால் சூழ்நிலை. வெறும் தரை மட்டும் போதாது. 


எனவே இறைவன் ஐந்து பூதங்களைப் படைக்கிறான். அவை மாபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


17. ஆகாயம்;  18. தீ;   19. நீர்  20. காற்று;  21 நிலம் 


என்று ஐந்து தத்துவங்களாகப் பிரிகின்றன. 


இந்த பூதங்கள இருந்தாலும், இந்தப் பூதங்களை உணரும் புலன்கள் வேண்டும் அல்லவா?


இந்த ஐந்து பூதங்களையும் அறிந்து கொள்ள ஐந்து புலன்களைத் படைக்கிறான் இறைவன். அவை ஞான இந்திரியங்கள் (ஞானேந்திரியம்) என்று அழைக்கப் படுகின்றன. 


22. மெய்   23  வாய்   24 மூக்கு   25 செவி   26 கண்   


ஐந்து பூதங்கள் ஒரு புறம்; ஐந்து புலன்கள் ஒரு புறம். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? எது இணைக்கும்? 


அதற்கு அடுத்த பத்து தத்துவங்கள் வருகின்றன 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

(pl click the above link to continue reading)



27. சுவை  28. ஒளி  29 ஊறு  30 ஓசை  31 நாற்றம் 


என்ற இந்த ஐந்தும் தன்மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன.  


இவை இருந்தால் மட்டும் போதாது, உடல் இருக்கிறது, அதில் அவயங்கள் இருக்கின்றன, அந்த அவயங்கள் (புலன்கள்) அறியும் அறிவு இருக்கிறது. இருந்தாலும் உயிர்கள் இயங்க முடியாது. 


வாய் இருக்கிறது. நீர் இருக்கிறது. அந்த நீர் எப்படி வாய்க்குள் போகும்? நீர் இங்கே வர வேண்டும் அல்லது உடம்பு அங்கே போக வேண்டும்.  நீர் வராது. உடம்புதான் போக வேண்டும். எப்படி போகும்? அது நடந்து போக வேண்டும்.  போனால் மட்டும் போதுமா? தண்ணீருக்கு அருகில் சென்றால் போதுமா? அதை எடுத்து வாயில் ஊற்ற வேண்டாமா?  சரி, ஊற்றினால் போதுமா? முதலில் ஊற்றிய நீர் வெளியேற வேண்டாமா? ஊற்றிக் கொண்டே இருக்க முடியுமா?


இந்த சிக்கலை விடுவிப்பது அடுத்து வரும் ஐந்து கன்மேந்திரியங்கள் 


அவை:


32 - கை, பற்றுதல், பாணி 


33 - கால், பதித்தல், பாதம் 


 34. பிறப்பு உறுப்புகள் - உபத்தம் 


35.  நாக்கு - பேசுதல் - பலுக்கல் - வாக்கு 


36. கழிவை வெளியேற்றும் உறுப்புகள் - கழித்தல், பாயு 


பாணி, பாதம், உபத்தம்,, வாக்கு, பாயு  என்பன. 


இனி, இவை ஒன்றோடு ஒன்று எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்று பார்ப்போம். 


உதாரணமாக 


பஞ்ச மாபூதங்களில் உள்ள - நீர் 


ஞானேந்திரியத்தில் - வாய் 


தன்மாதிரையில் - சுவை 


இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


சுவை அறிய வேண்டும் என்றால் நீர் வேண்டும். எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், வாயில் உமிழ் நீர் இல்லாவிட்டால் சுவை தெரியாது. 


நாலைந்து நாள் காய்ச்சலில் கிடந்து, நாக்கெல்லாம் உலர்ந்து போய் கிடக்கும் ஒருவனிடம் ஒரு இலட்டை கொடுத்துப் பாருங்கள்.  "வேண்டாம், வாயெல்லாம் கசக்குது" என்பான்.   ஏன், வாயில் நீர் இல்லை. உலர்ந்து போய் விட்டது. 


சுவை அறிய வேண்டும் என்றுதான் இறைவன் நாவை எந்நேரமும் ஈரமாக வைத்து இருக்கிறான். வாயில் போட்டது கரைய வேண்டும். 


அது போல, 


நிலம் - மூக்கு - நாற்றம் (மணம், வாசம்). 


ஐந்து பூதங்களில் நிலத்தைத் தவிர மற்றதற்கு வாசம் கிடையாது.  மண்ணுக்குத் தான் வாசம் உண்டு. மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா?


ஆகாயம் - செவி - ஓசை 


ஓசை வர வேண்டும் என்றால் வெளி வேண்டும்.பொருள்கள் அசைய வேண்டும். அதிர வேண்டும். பொருள்கள் அசையும் போது காற்று அசைந்து, அது காதில் வந்து மோதும் போது ஓசையாகக் கேட்கிறது. 


தீ - கண் - ஒளி 


கண் காண வேண்டும் என்றால் வெளிச்சம் வேண்டும். இருட்டுக்குள் ஒன்றும் தெரியாது. ஒளி என்றால் வெப்பம். தீ.  எந்த விளக்கைப் போட்டாலும் அது சூடு ஏறும். 


காற்று - மெய் - ஊறு (தொடு உணர்ச்சி). 


காற்று இருந்தால்தான் தோலில் தொடு உணர்ச்சி இருக்கும். 


சிவ தத்துவம் ஐந்து  (5)

வித்யா தத்துவம் ஆறு  (6, 5+6 = 11)

அந்தக் கரணங்கள் ஐந்து (5, 11+5 = 16)

பூதங்கள் ஐந்து  (5, 16 + 5 = 21)

தன்மாத்திரை ஐந்து  (5, 21 + 5 = 26)

ஞானேந்திரியங்கள் ஐந்து  (5, 26 + 5 = 31)

கன்மேந்திரியங்கள் ஐந்து (5, 31 + 5 = 36).


ஆக மொத்தம் 36 தத்துவங்கள். இது சைவ சமயத்தின் அடிப்படை. 


இந்த 36 தத்துவங்களும் இரண்டு விதமான மாயையில் இருந்து தோன்றுகின்றன. 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று இரண்டு பிரிவுகள். அதை முன்னமேயே பார்த்தோம் (குன்றி மணி,  வெளி ).


இந்த இரண்டு மாயைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இனி, கந்தர் அனுபூதிக்குள் செல்வோம். 






[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html



]




1 comment:

  1. Sir, very interesting, understanding these concepts are very important for our life, you are doing a great job and wish you my best wishes to you and your family & friends.

    ReplyDelete