திருவாசகம் - திரு அம்மானை - வியப்புருமாறு
மிக நீண்ட காலமாக ஏதோ ஒரு தீவில் வாழ்ந்த ஒரு மனிதன் ஒரு பெரிய நகரத்துக்கு வருகிறான். அவனுக்கு ஊர் சுற்றி காட்டியவர்கள் அவனை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள்.
அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறான். அவனை சுற்றி கொஞ்சம் பேர் முகத்தில் முக மூடி அணிந்து கொண்டு அவனை கத்தியால் குத்தி கிழிக்கிறார்கள். பின் ஊசியால் தைக்கிறார்கள். நினைவு தெளிந்த அவன் அந்த முகமூடி மனிதர்களுக்கு பணமும் கொடுத்து, அவர்கள் கையைப் பிடித்து கொண்டு நன்றியும் சொல்கிறான். துன்பம் தந்தவர்களுக்கு நன்றியா? இது என்ன அதிசயம் என்று வியக்கிறான்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு சில நாட்களுக்கு முன் மெய்யியல் பற்றி படித்தோம். அதன் அடிப்படை, உயிர்கள் (பசு) பதியை விட்டுவிட்டு பாசத்தில் அகப்பட்டு தவிக்கின்றன என்றும், இறைவன் அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவை மீண்டும் தன்னிடம் வர வழி செய்வான் என்றும் பார்த்தோம்.
அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.
இனி பாடலுக்குள் செல்வோம்.
பாடல்
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்
பொருள்
(pl click the above link to continue reading)
துண்டப் பிறையான் = துண்டான பிறை நிலவை தலையில் சூடியவன்
மறையான் = மறை நூல்களில் சொல்லப் பட்டவன், மறைந்து இருப்பவன்
பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற தலத்தில் உறைபவன்
கொண்ட புரிநூலான் = பூணூல் அணிந்தவன்
கோலமா = அழகான பெரிய எருதினை
ஊர்தியான் = வாகனமாகக் கொண்டவன்
கண்டங் கரியான் = கரிய கழுத்தைக் கொண்டவன்
செம் மேனியான் = சிவந்த மேனியைக் கொண்டவன்
வெண்ணீற்றான் = உடல் எல்லாம் திரு வெண்ணீற்றை புனைந்தவன்
அண்டமுத லாயினான் = அனைத்து அண்டங்களுக்கும் முன்பாக உள்ளவன்
அந்தமிலா ஆனந்தம் = முடிவற்ற ஆனந்தத்தைத்
பண்டைப் பரிசே = பழைய பரிசினை
பழவடியார்க் கீந்தருளும் = பழைய அடியார்களுக்கு கொடுத்து அருள் செய்யும்
அண்டம் வியப்புறுமா = உலகமே வியக்கும் படி
பாடுதுங்காண் = பாடுவோம்
அம்மானாய் = அம்மானாய்
அது என்ன "பண்டே பரிசு": முதலில் ஆன்மாக்கள் பதியிடமும் சேராமல், பாசத்திடமும் சேராமல் தனித்து நின்றன. பின், அவை ஆணவ வயப்பட்டு பாசத்தில் விழுந்தன. அப்படி பாசத்தில் சிக்கிய உயிர்களை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் செயலே "பழைய பரிசு".
யோக சூத்திரத்தின் எல்லை "சமாதி". சமம் + ஆதி. ஆதியில் எப்படி சமமாக இருந்ததோ அப்படி அந்த நிலையை அடைவது சமாதி.
"பழ அடியார்"....இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். முதலில் ஆட்கொள்ளுவான். பின் "பரிசைத்" தருவான். அந்தப் பரிசு பெற்றால்
"அந்தமில் ஆனந்தம்" தரும்.
இதில் வியப்படைய என்ன இருக்கிறது?
அந்தமில் ஆனந்தம் தருபவன், ஏன் இவ்வளவு துன்பம் தருகிறான்.
உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. அதை எல்லாம் பார்க்கும் போது, இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் எழுகிறது.
அத்தனை துன்பமும், "அந்தமில் ஆனந்தம்" அருளவே என்று அறியும் போதும் பெரிய வியப்பு ஏற்படுகிறது.
ஆசிரியர் அந்தத் தேர்வு,இந்தத் தேர்வு என்று படுத்தி எடுக்கிறார். முடிவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை கிடைக்கிறது. அத்தனை வருத்தமும் சுகமாக மாறி விடுகிறது. அப்படி பாடாய் படுத்திய ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறான். வியப்பாக இல்லையா?
"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன்" போல இறைவன் அவ்வளவு துன்பம் தந்தாலும், அது அனைத்தும் "அந்தமில்லா ஆனந்தம் காணவே" என்ற அறிவு பிறக்கும் போது இந்த உலகே வியக்கிறது.
"அண்டம் வியப்புருகிறது"
திருவாசகத்துக்கு எத்தனை உரை படித்தாலும், அந்த உரைகளை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, நீங்களே நேரடியாக அதைப் படித்து "உணர்வதே"
சாலச் சிறந்தது.
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:பா
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
அறைகூவி, வீடு அருளும்
வாரா வழியருளி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html
அந்தம் இலா ஆனந்தம்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html
தாய்போல் தலையளித்திட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html
கல்லைப் பிசைந்து கனி ஆக்கி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html
காட்டாதன எல்லாம் காட்டி
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html
தாயான தத்துவனை
பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2
)
No comments:
Post a Comment