கந்தரனுபூதி - நின்று தயங்குவதே
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.
இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது.
புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம்.
ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.
இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும்.
இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான்.
மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை.
நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா? மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை.
இதைப் புரிந்து கொள்ள வேண்டும். படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.
உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்?
ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது.
இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.
"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர்.
பாடல்
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
சகமாயை யுணின்று தயங்குவதே
சீர் பிரித்த பின்
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
(pl click the above link to continue reading)
மகமாயை = மகா மாயையை
களைந்திட = விலக்க
வல்ல பிரான் = வலிமையுள்ள முருகன்
முகம் ஆறும் = ஆறு முகங்களாலும்
மொழிந்தும் = உததேசம் செய்தும்
ஒழிந்திலனே = விட முடியவில்லையே
அகம் = உடம்பு
ஆடை = ஆடை, அணிகலன்கள்
மடந்தையர் = பெண்கள்
என்று அயரும் = என்று அயரும், தளரும், தவிக்கும்
சகமாயையுள் = இந்த உலக மாயையில்
நின்று = மூழ்கி
தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே
விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது.
உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது.
விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.
இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம்.
"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார்.
இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை.
சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை.
கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை.
இதுதான் மாயையின் வலை.
உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும்.
"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"
என்பார் மணிவாசகர்.
பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம்.
நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
]
No comments:
Post a Comment