திருக்குறள் - பொல்லாத சூழக் கெடும்
இன்று நாம் காண இருக்கும் குறள் மிக நீண்ட தொலை நோக்குப் பார்வை கொண்ட ஆழமான, விரிவான குறள்.
எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்தது என்று நினைக்க நினைக்க ஒரு பிரமிப்புதான் மிஞ்சுகிறது.
எதற்காக இல்லறம்?
மனைவி மக்களோடு இன்பம் துய்கவா? பொருள் ஈட்டவா ? எதற்காக திருமணம்? கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்? பிள்ளை பெறாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?
இன்றைய சமுதாயத்தில் இது போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் என்ன? பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் என்ன? திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன? அதாவது, உடல் சார்ந்த இன்பம் அனுபவிப்போம் ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? என் இஷ்டம்...மற்றவர் புகுந்து கருத்துச் சொல்ல இதில் இடம் இல்லை என்கிறார்கள்.
என்ன பதில் சொல்வது? கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லலாம்...அதில் இருந்து ஆயிரம் கேள்வி எழும்.
வள்ளுவர் மிகத் தெளிவாக சிந்தித்து எழுதி வைத்து இருக்கிறார்.
வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு என்பதை வேண்டும் என்றால் தன்னைத் தான் உணர்தல் என்று வைத்துக் கொள்ளலாம் அதை அடைய வேண்டும் என்றால் பற்று விட வேண்டும்.
பற்றை விட யாருக்கு ஆசை? ஒருவரும் தயாராக இருக்க மாட்டார்கள். பின் எப்படி ?
அன்பு பெருகினால் கொடுப்பது எளிதாகும். பிள்ளை மேல் அன்பு இருந்தால், தான் பசித்து இருந்தாலும் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும். அது எப்படி சாத்தியமானது? அன்பினால்.
அந்த அன்பு விரியும் போது, அருளாகும். அருள் உண்டானால் பிள்ளைக்கு கொடுக்கும் அதே இன்பம் எல்லோருக்கும் கொடுக்கும் போதும் வரும்.
பிள்ளை எப்படி வரும்? மனைவியின் மூலம் வரும்.
முதலில் மனைவி. அவள் மேல் அன்பு. அந்த அன்பில் பிறப்பது பிள்ளை. அன்பு இன்னும் விரிகிறது. பின் சுற்றம், நட்பு என்று அன்பின் எல்லைகள் விரிகிறது.
பின் குடும்பத்தைத் தாண்டி, அது சமுதாயத்தில் படர்கிறது. அப்போது அருள் பிறக்கிறது. அருள் வரும் போது துறவு எளிதாகிறது. துறவு எளிதானால் வீடு பேறு தானே வரும்.
மனைவி மேல் அன்பு செய்யாதவன், பிள்ளை மேல் எங்கே அன்பு செய்வான். பிள்ளை மேல் அன்பு செய்யாதவன், நட்பின் மேல், சுற்றத்தின் மேல் எப்படி அன்பு செய்வான்....
அடிப்படை அன்பு. அதன் தளம் இல்லறம். இல்லறத்தின் வழியாகத்தான் துறவை எட்டிப் பிடிக்க முடியும்.
மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைப்பவன் மனதில் எங்கே அன்பும், அருளும் இருக்கும்? அவன் எங்கே துறவை அடைவது, வீடு பேற்றை அடைவது?
இத்தனையும் ஒண்ணே முக்கால் அடியில்.
பாடல்
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
பொருள்
(Please click the above link to continue reading)
அருள்வெஃகி = அன்பு, அருள் இரண்டுக்கும் அடிப்படியான அறத்தை விரும்பி
ஆற்றின்கண் = வழியில்
நின்றான் = செல்பவன்
பொருள்வெஃகிப் = மற்றவன் பொருளை அடையக் கருதி
பொல்லாத சூழக் = தவறான வழியில் செல்ல நினைத்தால்
கெடும் = கெடும்
மேலே கூறியது எல்லாம் இந்தக் குறளில் எங்கே இருக்கிறது?
இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அருள்வெஃகி = அன்பில் இருந்து அருள் வரும் என்று பார்த்தோம். இல்லறத்துக்கு அடிப்படை அன்பு. துறவுக்கு அடிப்படை அருள். இல்லறம், துறவறம் இரண்டின் அடிப்படை "அறம்". .இல் + அறம், துறவு + அறம்.
எனவே அருளை விரும்புதல் என்பது அறத்தை விரும்புவதுதான்.
ஆற்றின்கண் நின்றான் = ஆறு என்றால் வழி. ஆற்றின்கண் நின்றான் என்றால் அந்த வழியில் நின்றவன், செல்பவன். எந்த வழி துறவுக்குப் போகும் இல்லறத்தின் வழியில் நின்றவன். இல்லறத்தில் உள்ளவன் என்று பொருள்.
பொருள்வெஃகிப் = இல்லறத்துக்குப் பொருள் வேண்டும். கட்டாயம் வேண்டும்.
பொல்லாத சூழக் கெடும் = அதை நேர்மையான வழியில் அடைய வேண்டும். பொல்லாத என்ற தீய வழியில்.
சூழ என்றால் நினைக்க. நினைத்தாலே போதும். செய்ய வேண்டும் என்று இல்லை.
கெடும் = எது கெடும்? எல்லாம் கெடும். இல்லறம் கெடும். துறவறம் கெடும். அதனால் வீடு பேறு அடைவது கெடும்.
ஒரு சில நாள் கழித்து மீண்டும் இதைப் படித்துப் பாருங்கள்.
அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய குறள்களில் ஒன்று.
[
முன்னுரை
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html
நாணுபவர்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html
வெஃகுதல் செய்யார்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html
அகன்ற அறிவுஎன்னாம்
]
No comments:
Post a Comment