Monday, October 17, 2022

திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்

    

 திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்



பிறன் பொருளுக்கு ஆசைப் படாதே என்று கூறினால் போதுமா? 


மற்றவர் பொருளை ஒருவன் எவ்வாறு எடுக்க நினைக்க முடியும்? அப்படி வரும் எண்ணத்தை எப்படித் தடுப்பது என்று அடுத்து கூறுகிறார். 


இன்று நாம் காணவிருக்கும் குறளுக்கு பரிமேலழகர் உரை இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்திருக்காது. 


குறளின் பொருள் "நுண்ணிய அறிவினால் என்ன பயன், மற்றவன் பொருளை தகாத முறையில் அடைய நினைத்தால்" என்பதுதான். 



பாடல் 



அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


பொருள் 





(Please click the above link to continue reading)


அஃகி = அஃகுதல்  என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்று பொருள். நுண்மையான 


அகன்ற = விரிந்த 


அறிவுஎன்னாம் = அறிவினால் என்ன பயன் 


யார்மாட்டும் = மற்றவர் இடத்து 


வெஃகி = அவர் பொருளை தவறான வழியில் அடைய எண்ணி 


வெறிய செயின் = தகாத காரியங்களை செய்தால் 




யார்மாட்டும் வெறிய செயின் என்பதற்கு பரிமேலழகர் உரை செய்யும் நுணுக்கம் அபாரம். 


"யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல்."


என்ன அர்த்தம்?


உலகில் உள்ள மக்களை இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார். தக்கார், தகாதார் என்று. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.


இங்கே, நம்மை விட வலிமை மிக்கவர்கள், நம்மை விட வலிமை குறைந்தவர்கள் என்று கொள்ளலாம். 


நம்மைவிட வலிமை மிக்கவர்களிடம் இழிந்தன செய்தல்

நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடுமையான செயல்களைச் செய்தல்.


அது என்ன இழிந்தன, கடுமையான செயல்கள்?



இழிந்தன என்றால் திருடுதல், ஏமாற்றுதல், நயவஞ்சகம் செய்தல், போன்ற செயல்கள். நம்மைவிட வலியவர்களிடம் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழியில் அவர்கள் பொருளை எடுத்துக் கொள்ளுதல்.


நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடியன செய்தல் என்றால் மிரட்டி வாங்குதல். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள், எளிய மக்களை மிரட்டி இலஞ்சம் பெறுவது போல. மிரட்டி சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது.  அலுவலகத்தில் மேலதிகாரி தனக்கு கீழே இருப்பவரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி, அதற்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது. முனைவர் (PhD) படிக்கும் மாணவனின் முயற்சியை, உழைப்பை அவனின் guide எடுத்துக் கொள்வது. இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 



இந்த இரண்டையும் எப்போது ஒருவன் நீக்க முடியும் என்றால் "அஃகி அகன்ற அறிவு" இருந்தால்.  



நுண்ணிய, அகன்ற அறிவு இருந்தால் பொருள் என்பது இன்பம் அல்ல, தன் முயற்சி மட்டும் பொருளை தந்துவிடாது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது பாவம் போன்றவை தெரியவரும். எனவே, அறிவு உள்ளவன் இவற்றைச் செய்ய மாட்டான். 


"வெறிய செயின்" என்றார். செயின் என்றால் செய்தால் என்று பொருள். அறிவுள்ளவன் அப்படிச் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. அறிவினால் என்ன பயன் இப்படிச் செய்தால் என்றால் ஏதோ அறிவு உள்ளவன் இதைச் செய்வான் என்ற பொருள் வந்து விடும். எனவே "செயின்" என்றார். 




"நீ நாய் வாலை நேராகச் செயின் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்றால், அது முடியாது, நடக்காது என்று பொருள். 


ஆழ்ந்த அறிவு 
அகன்ற அறிவு 
பிறன் பொருளை வெஃகுதல் 
தக்கார்
தகவிலார் 
இழிந்தன செய்தல் 
கடியன செய்தல் 



எத்தனை செய்திகள்,ஒரு குறளுக்குள் !


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html

]


No comments:

Post a Comment