Thursday, October 20, 2022

கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும்

       

 கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பக்தி இலக்கியம் என்றால் ஏதோ இறைவன் புகழ் பாடுவதும், எனக்கு அதைத் தா, இதைத் தா என்று வேண்டுவதும் உன்னால் முடியாதா, நீ எவ்வளவு பெரிய ஆள் என்று இறைவனுக்கு ஐஸ் வைப்பதும் என்று எண்ணி விடக் கூடாது. 


காதல், குழைவு, அன்பு, பாசம், மெய்யியல் சிந்தனைகள், மனிதாபிமானம், உலகியல் சிந்தனைகள், மனோ தத்துவம், வாழ்க்கை நெறி முறை என்று எல்லாம் அதில் உண்டு. 



நமக்குத் தெரிந்து எத்தனை கணவன்மார் மனைவியின் கால் பிடித்து விடுவார்கள்?  மனைவியின் காலைப் பிடிப்பதா? நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


அவளும் ஒரு உயிர்தானே. நாளெல்லாம் ஓடி ஆடி வேலை செய்கிறாள். அவளுக்கும் கால் வலிக்கும்தானே. காலை மெல்ல பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்தானே. அதெல்லாம் பெரும்பாலான கணவன்மார் நினைப்பதே இல்லை. 


முருகன் அப்படி அல்ல. நாளெல்லாம் தினைப்புனம் காக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து இருப்பவளின் பாதங்களை முருகன் பிடித்து விடுவானாம். அது மட்டும் அல்ல, "வேற என்ன செய்யணும் சொல்லு" என்று பணிவோடு கேட்பானாம். 


வீட்டில் கணவன்மார் மனைவியிடம் கேட்பார்கள். அது கூட ஒரு அதிகாரத் தோரணையில் இருக்கும். "அப்புறம், வேற என்ன வாங்கணும் சொல்லு" என்று அதட்டுவது போல இருக்கும். மென்மை என்பதே கிடையாது. 


அதெல்லாம் எதனால்?  வள்ளியின் மேல் உள்ள தணியாத அன்பினால். அன்பு வந்துவிட்டால் ஆண் என்ன, பெண் என்ன, கணவன் என்ன, மனைவி என்ன, ஒரு பாகுபாடும் கிடையாது. மற்றவரின் இன்பம் மட்டுமே முக்கியம் என்று ஆகிவிடும். 


பாடல் 


திணியான மனோசிலை மீதுனதாள் 

அணியா ரரவிந்த மரும்புமதோ 

பணியா வென வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே . 



சீர் பிரித்த பின் 


திணியான மனோ சிலை மீது உனது தாள்  

அணியார் அரவிந்தம் அரும்புமதோ 

பணியாய் என வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

(pl click the above link to continue reading)



திணியான = திண்ணமான, கடினமான


மனோ சிலை = கல் போன்ற மனதின் 


மீது = மேல் 


உனது தாள்   = உனது திருவடிகள் 


அணியார் = அழகான 


அரவிந்தம் = தாமரை மலர் 


அரும்புமதோ  = முளைக்குமா, அரும்பு விடுமா 


பணியாய் = எனக்கு என்ன வேலை, என்ன பணி 


என = என்று 


வள்ளி  = வள்ளியின் 


பதம் பணியும்  = பாதங்களைப் பணியும் 


தணியா = தீராத 


அதி = மிக அதிகமான 


மோக == மோகம் கொண்ட 


தயாபரனே = தயை உள்ளவனே 



நீண்ட நாள் வராத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால், "எங்க வீட்டுக்கு வர்ற உங்களுக்கு வழி தெரியுமா?...இப்பவாவது வந்தீங்களே " என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து கூறுவோம் அல்லவா, அது போல அருணகிரிநாதர் சொல்கிறார் 


"கல் போன்ற என் மனத்திலும் எப்படி தாமரை மொட்டு போன்ற உன் திருவடிகள் முளைதனவோ" என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார். 


"அரும்புமதோ" என்றால் அரும்புமா என்ற சந்தேகக் கேள்வி அல்ல. எப்படி அரும்பியது என்று ஆச்சரியக் கேள்வி.


இந்தப் பாடலுக்கு ஆன்மீகமாக பல உரைகள் சொல்கிறார்கள். 


அதாவது, உயிர்கள் இறைவனைத் தேடுவதைப் போல, இறைவனும் பக்குவப்பட்ட ஆன்மாகளை தேடி அலைவானாம்.  அவார்கள் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பாம். அவர்களுக்காக பிரம்படி படுகிறான், கால் தேய ஓலை கொண்டு நடக்கிறான், வில்லால் அடி வாங்குகிறான்....என்ன வேண்டுமானாலும் செய்வானாம். 


பாதம் பணிவதுதானா பிரமாதம்? 


அதெல்லாம் ஏதோ வலிந்து திணிக்கும் உரை போலத் தோன்றுகிறது. 


அன்பால், வள்ளியின் பதம் பணிந்து அவள் சொல்வதைக் கேட்டான் என்பதில் ஒரு சுகம் இருக்கத்தான்செய்கிறது. 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html





]




No comments:

Post a Comment