Saturday, October 29, 2022

திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம்

      

 திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம் 


வாழ்க்கையை அனுபவிக்க பொருள் தேவை. பொருள், செல்வம் இருந்து விட்டால் எல்லா இன்பங்களும் வந்து விடும் என்று நினைத்து எப்படியாவது பொருள் சேர்த்துவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.


நாய் விற்ற காசு குறைக்காது  என்று நினைத்து எந்த வழியிலாவது பணம் சேர்க்க முயல்கிறார்கள். 


எப்படியெல்லாமோ பணம் சேர்த்தவன் நன்றாகத்தானே இருக்கிறான். வாழ்கையை அனுபவிக்கிறான். சும்மா இந்த அறம், நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லி என்ன பயன்...என்று சிலர் நினைக்கலாம். 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ தவறான வழியில் பணம் சேர்த்து விடலாம். ஆனால், அதை உன்னால் நிம்மதியாக அனுபவிக்க முடியாது...எனவே அப்படி சேர்க்காதே" என்கிறார்.




பாடல் 


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்



பொருள் 




(Please click the above link to continue reading)


வேண்டற்க = வேண்டாம் என்று ஒதுக்கி விடு. எதை?


வெஃகியாம்  = தவறான வழியில் வரும் 


ஆக்கம்  = செல்வத்தை. ஏன் என்றால் 


விளைவயின் = அதை அனுபவிக்கும் போது 



மாண்டற்கு  = மாண்பு உடைய ஆதல், சிறப்பாக ஆதல், 



அரிதாம் பயன் = அரிதாக நடக்கும். 



வெளியில் இருந்து பார்பதற்கு தவறான வழியில் பணம் சேர்த்தவன் ஏதோ மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரியும். அவன் சட்டத்தை ஏமாற்றலாம். இறுதிவரை  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் செய்யலாம். 



ஆனால், அந்த செல்வதை அவன் ஒரு நாளும் நிம்மதியாக அனுபவிக்க முடியாது. 



எப்போது, என்ன வருமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும். தவறான வழியில் வந்த செல்வத்தை முதலீடு செய்ய முடியாது. மறைத்து மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைத்தாலும் ஏதோ சில பேருக்கு தெரியத்தான் செய்யும். அவர்களை கண்டால் பயப்பட வேண்டும். அவர்களையும், மற்றவர்களையும் அடக்கி வைக்க ஆள் பலம் வேண்டும். அப்படி வைக்கும் ஆட்கள் ஏதேனும் செய்தால், எங்கே அவர்கள் தன்னை காட்டி கொடுத்துவிடுவார்களோ என்று பயப்பட வேண்டும். 


பயத்திலும், மன அழுத்தம், மற்றும் உளைச்சலில் உடல் நலம் கெடும். 



எங்கே பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று அவசரம் அவசரமாக அனுபவிக்கத் தோன்றும். 


தவறான வழிகளில் பணத்தை செலவழித்து அனுபவங்களைத் தேடத் தோன்றும். 


மது, போதை பொருட்கள், பெண்கள், சூது என்று மனம் ஓடும். 


எங்கே நிம்மதி வரும். 


அப்படிப்பட்ட செல்வம் தேவையா?   வேண்டாம் என்று ஒதுக்கி விடு என்கிறார்.


பொருளைத்தான் தவறான முறையில் எடுக்க நினைக்க வேண்டும் என்று இல்லை. 



வள்ளுவர் "ஆக்கம்" என்றார். ஆகி வருவது ஆக்கம். அது செல்வமாக மட்டும் இருக்க வேண்டியது இல்லை. 


பதவி, பட்டம், செல்வாக்கு, அதிகாரம், பேர், புகழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


மற்றவன் உழைப்பை திருடிக் கொள்வது, அவனுக்கு வர வேண்டிய புகழை தனதாக்கிக் கொள்வது, மற்றவனுக்கு வர வேண்டிய பதவி உயர்வை தட்டிப் பறித்துக் கொள்வது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


ஏன் மாற்றான் மனைவியை அடைய நினைப்பது கூட இதில் அடங்கும். 


தவறான வழியில் அடைந்த எதுவும் அதை நிம்மதியாக அனுபவிக்க விடாது. 



இதெல்லாம் சிறு வயதில் சொல்லிக் கொடுத்து இருந்தால் பல பேர் இலஞ்சம் போன்ற வழிகளில் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 


நல்லவற்றை எப்போது படித்தாலும் நல்லதுதான். 



[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்


]


No comments:

Post a Comment