திருப் புகழ் - காகம் முற அருள்
மனைவியை மற்றவன் பார்த்தால் எவ்வளவு கோபம் வரும் ?
அதிலும், காம இச்சையோடு பார்த்தால் ?
அதிலும், அவளை தீண்டினால் ?
அதிலும், அவளை அவள் மார்பில் தீண்டினால் ?
எவ்வளவு கோபம் வரும் ?
இராமாயணத்தில், இராமனும் சீதையும் சித்ர கூட மலைக்கு அருகில் மந்தாகினி நதிக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சீதையின் மடியில் இராமன் தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன் சீதை மேல் காமம் கொண்டான்.
தந்தை எவ்வழி , மகன் அவ்வழி.
சீதையை எப்படியாவது தீண்டி விட வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு காகத்தின் வடிவை எடுத்து பறந்து வந்து அவள் மார்பை கொத்தினான்.
சீதையின் மார்பில் இருந்து இரத்தம் வந்தது. அசைந்தாலோ, சப்தம் எழுப்பினாலோ இராமனின் தூக்கத்திற்கு இடையுறாக இருக்கும் என்று எண்ணி அவள் அமைதியாக அந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டாள் .
கண் விழித்துப் பார்த்த இராமன், சீதையின் மார்பில் இருந்து வழிந்த இரத்தத்தை கண்டு பதறி காரணம் வினவினான். சீதை காகத்தை காண்பித்து, அந்த காகம் கொத்தியது என்றாள் .
இராமன் புரிந்து கொண்டான்.
அருகில் இருந்த புல்லை எடுத்து மந்திரம் சொல்லி விடுத்தான். அது இராம பானமாக மாறி சயந்தனை மூவுலகும் துரத்தியது. அவனை காப்பார் யாரும் இல்லை. அவன் இராமனிடமே வந்து அடைக் கலம் புகுந்தான்.
சரண் என்று அடைந்தவனை அவன் எதிரியாக இருந்தால் கூட அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டவன் இராமன்.
சயந்தனுக்கு உயிர் பிச்சை அளித்து, "நான் மன்னிப்பேன், என் பாணம் மன்னிக்காது" என்று சொல்லி அந்த பானத்திற்கு சயந்தனின் ஒரு கண்ணை இலக்காக்கி அவனை காப்பாற்றினான் இராமன்.
அந்த கதையை இரண்டு வரியில் சொல்கிறார் அருணகிரி.....
பாடல்
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
பொருள்
காது =கொல்லென்று விடுத்த
ஒரு விழி காகம் உற = ஒரு விழியை மட்டும் எடுத்து
அருள் = அவனுக்கு உயிர் பிச்சை தந்து அருள் புரிந்த
மாயன் = மாயங்கள் செய்ய வல்ல
அரி = பாவங்களை போக்குபவன்
திரு = உயர்ந்த, சிறந்த
மருகோனே = மருமகனே
இதையே பெரியாழ்வாரும்
சித்திரகூ டத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகுந் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபய மென்றழைப்ப
அத்திரமே யதன்கண்ணை யறுத்ததுமோரடையாளம்
விருந்தினர்களை உபசரிப்பது ஒரு பண்பு என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களை காப்பதும் ஒரு பண்பு தான். ஏனோ அந்த பண்பு வழக்கொழிந்து போய் விட்டது. பழிக்குப் பழி என்று உலகம் புறப்பட்டு விட்டது.
எவ்வளவு சண்டை. எவ்வளவு சிந்திய இரத்தங்கள்.
மன்னிக்கும் குணம் குறைந்து கொண்டே வருகிறது.
இராமாயணம் படிப்பது அதன் இலக்கியம் நயம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல. .....
சுவாரசியமான கதை. இதுவரை நான் கேட்டதில்லை. நன்றி.
ReplyDelete