திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய்
இறை அருள் பெற்ற பின்னும் மனிதனின் குணம் மாறுவது இல்லை. அவரா, அப்படிச் செய்தார் என்று நாம் சிலரின் செயல்களை பற்றி ஆச்சரியப் படுகிறோம்.
மனிதன் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் அவன் இயற்கை குணம் மாறுவதே இல்லை.
இறை அருள் பெற்ற பின் ஏதோ புது மனிதர்கள் என்று நினைக்க வேண்டாம்.அவர்களும் சாதாரண மனிதர்களே. நம்மை போலவே அவர்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கின்றன.
மாணிக்க வாசகர் சொல்கிறார்....
அழகான பெண்களின் மேல் கொண்ட ஆசையை, உன் அருள் பெற்ற பின்னும், நான் விடவில்லை. இருந்தும் நீ என்னை விட்டு விடாமல் அருள் செய்கிறாய். என்ன காரணம் ? என்று இறைவனை வினவுகிறார்.
இதையே சற்று மாற்றி யோசித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் புலப் படும்....
ஒன்று, பெண்ணாசை என்பது மிக மிக இயற்கையான ஒன்று. இறைவன் இயற்கைக்கு எதிரானவன் அல்ல. பெண்ணாசை கொண்டவர்களை அவன் வெறுத்து ஒதுக்குவது இல்லை.
இரண்டு, இறைவனை அடைய, அறிய, அவன் அருள் பெற பெண்ணாசை ஒன்றும் தடை இல்லை. எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட வேண்டும் என்று இல்லை.
பாடல்
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?
உரை
அழகான மார்பகங்களை கொண்ட பெண்களின் சிவந்த இதழ்களை விட மாட்டேன் என்றாலும் என்னை விட்டு விட மாட்டாய், நான் உன் தொண்டில் இருக்கிறேன், உனக்கு வெளியே இல்லை, உத்திரகோச மங்கைக்கு அரசனே, நான் ஒரு கள்வன்,இருந்தும் என்னை ஏன் நீ ஆட்கொண்டாய் ?
பத உரை
பிளவு அகலாத் தடம் கொங்கையர் = இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் பிரிவே (பிளவு) கிடையாது. அப்படி ஒட்டி இருக்கும். பெரிய மார்புகள்.
கொவ்வைச் செவ் வாய் = அப்படிப்பட்ட அழகிய பெண்களின் சிவந்த இதழ்களை
விள்ளேன் எனினும் = விட்டு விட மாட்டேன் என்றாலும்
விடுதி கண்டாய்? = நீ என்னை கை விட்டு வடமாட்டய்
நின் = உன்னுடைய
விழுத் = சிறந்த
தொழும்பின் = பணியில்
உள்ளேன் = இருக்கிறேன்
புறம் அல்லேன் = நான் உனக்கு வெளியன் அல்ல
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளேன் = கள்ள மனம் கொண்ட நான்
ஒழியவும் = உன்னை விட்டு விலகி நின்றாலும்
கண்டு கொண்டு = என்னை கண்டு கொண்டு
ஆண்டது எக் காரணமே? = ஆட் கொண்டது என்ன காரணத்தினாலோ
பெண்ணாசை விடமுடியாவிட்டாலும், அவருக்கு அருள் புரியுமளவு அவரிடம் வேறு பல நற்குணங்கள் இருந்திருக்கின்றன. "பெண்ணாசை விட வேண்டிய ஒன்று" என்று அறியும் அறிவு இருந்திருக்கிறது. அதற்காகப் பெண்ணாசை பரவாக இல்லை என்பது பொருள் அல்ல!
ReplyDelete