இராமாயணம் - அறம் அற்ற செயல்கள்
அற வழியில் செல்லுங்கள், ஒழுக்கமாக இருங்கள் என்று சொல்லுவது எளிது. எது அறம் , எது ஒழுக்கம் என்று சொல்லுவது தான் கடினம்.
அறம் என்று ஒன்று உண்டு அது அமரர்கும் அறிய ஒண்ணாதது என்றார் கச்சியப்ப சிவாசாரியார்.
தேவர்களாலும் அறிய முடியாதது என்றால் மனிதர்கள் எப்படி அறிந்து அதன்படி நடப்பது ?
தர்மத்தை நிலை நிறுத்த யுகம் தோறும் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்.
ஏன் ? ஒரு முறை வந்து நிலை நிறுத்தினால் போதாதா? ஒவ்வொரு யுகத்திலும் ஏன் வர வேண்டும் ?
போதாது.
எல்லா யுகங்களிலும் மனிதர்கள் தர்மம் தவறித்தான் போகிறார்கள். இறைவனே வந்து அதை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது.
தர்மத்தை யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் ?
நல்லவன், மனத் தூய்மை உள்ளவன் சொன்னால் கேட்பார்கள்.
அதைத் தெரிந்து, கம்பன் பரதன் மூலம் அறத்தை சொல்கிறான்.
இராமன் கானகம் செல்வது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னின்ன பாவங்கள் செய்தோர் செல்லும் நரகத்திற்கு நான் செல்லக் கடவேன் பரதன் பட்டியல் தருகிறான். மொத்தம் 46 பாவங்களைச் சொல்கிறான்.
பாடல்
‘அறம் கெட முயன்றவன்,
அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
துயரம் சூழ்ந்துேளான். ‘
பொருள்
அறம் கெட முயன்றவன், = அறம் கெட முயன்றான்
அருள் இல் நெஞ்சினன், = அருள் இல்லாத மனத்தை உடையவன்
பிறன் கடை நின்றவன் = பொருள் வேண்டி மற்றவர்களிடம் சென்றவன்
பிறரைச் சீறினோன், = மற்றவர்கள் மேல் கோபப் பட்டவன்
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன், = கொலைத் தொழில் ஈடுபட்டு,
உயிர்களை கொன்றவன்
துறந்த மாதவர்க்கு = துறவிகளுக்கு
அருந் துயரம் சூழ்ந்துேளான். ‘= துன்பம் தந்தவன்
அறத்தை கெடுக்க வேண்டாம். கெடுக்க நினைத்தாலே போதும் அதுவே பெரிய பாவம்.
மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர்.
மனதால் கூட அறத்தை சிதைக்க நினைக்கக் கூடாது.
ஒருவன் தர்மம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை , அதை செய்ய விடாமல் தடுப்பது கூட அல்ல , தடுக்க நினைப்பது கூட அறம் வழுவிய செயல்தான்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவஊம் உண்பதுஊம் இன்றிக் கெடும்
என்பார் வள்ளுவர். கொடுப்பதைப் பற்றி பொறாமை பட்டால் கூட போதும், அதுவே பெரிய பாவம்.
ஒருவன் கோவிலுக்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை போக விடாமல் தடுப்பது, தடுக்க நினைப்பது ஒரு பாவச் செயல்.
அருள் இல்லாமல் இருப்பது ஒரு பாவம்.
அருள் என்றால் என்ன ? நாம் எப்படி அருள் செய்ய முடியும். நாம் படித்த வரை கடவுள் தான் பக்தர்களுக்கு அருள் தர முடியும் ?
வள்ளுவர் சொல்கிறார்.
வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
நம்மை விட பலம் குறைந்தவர்களிடம் நாம் அதிகாரம் செய்யும் போது , நம்மை விட பலம் நிறைந்தவர்கள் முன் நாம் எப்படி இருந்தோம் என்று நினைத்துப் பார்த்து செயல்படுவது அருள்.
வேலைக் காரர்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம், நம்மை விட பணத்தில் , அறிவில், அதிகாரத்தில், புகழில் மெலிந்தவர்களிடம் மென்மையாக, பண்புடன் நடந்து கொள்வது அருள்.
உயிர் போனாலும் மற்றவர்களிடம் சென்று எனக்கு அஞ்சு பத்து கொடு என்று கேட்க்கக் கூடாது.
ஏற்பது இகழ்ச்சி என்றாள் அவ்வை பாட்டி.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
பிச்சை எடுத்துதான் வாழ வேண்டும் என்று விதி இருந்தால், அந்த விதியை எழுதிய இறைவனும் கெட்டுப் போகட்டும் என்று இறைவன் மேல் சீறுகிறார் வள்ளுவர். பிறரிடம் இரந்து வாழ்வது அவ்வளவு கொடுமையானது என்பது அவர் எண்ணம்.
மற்றவர்களிடம் கோபப் பட்டவன் - கோபம் கொள்வது அறம் பிறழ்ந்த செயல் என்பது பரதன் கூற்று. கோபமும் காமமும் தவத்தை அழிக்கும் இரண்டு அரக்கர்கள் என்று சொல்லுவார் கம்பர்.
மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.
நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நாம்.
எப்படி வாழ வேண்டும் என்று காலம் கடந்து வந்து கம்பன் நம்மை கை பிடித்து அழைத்துச் செல்கிறான்.
இந்தப் பாடலுக்குச் சுட்டிக்காட்டிய திருக்குறள்கள் எல்லாம் அருமை.
ReplyDelete